Thursday, October 11, 2012

மங்கை உமையாள் ஒருபாக வடிவம் கொண்ட பேரிறைவா!

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்

சிற்றம்பலத்தில் நடம் புரியும்
சிவனே! உன்றன் திருத்தாள்கள்
பற்றித் தொழுதேன் பயம் நீக்கிப்
பாப இருளைப் போக்கி விடு
கற்றைக் குழலில் பிறை சூடிக்
கங்கை மானைத் தரித்தோனே!
முற்றும் துறந்த முனிவர்களும்
முழுதும் அறியார் உன் அருளை.



உற்றார் போல உடனிருந்து
உலுத்தர் செய்யும் கொடுமைகளை
நெற்றிக் கண்ணால் அழல் சிந்தி
நீறாய் எரித்துப் பொசுக்கி விடு
வற்றாத் தயையை வாய்மை தனை
வழங்கு இறைiவா வையகத்தில்
குற்றச் செயல்கள் புரியாத
குணத்தை சிறப்பைத் தந்தருள்வாய்

உலகை ஆக்கும் உன் செயல்கள்
உணரத் தக்க தொன்றல்ல
மலையும் கடலும் வான் வெளியும்
மனிதப் படைப்பும் மற்று முள்ள
உலகில் தோன்றும் உயிரினங்கள்
உன்றன் தயவால் உயிர் வாழும்
கலையின் வடிவே! கண்ணுதலே!
கருணை செய்ய வேண்டுமையா

பொங்கும் அரவும் கொன்றை மலர்
புனையும் சிவந்த சடை முடியில்
கங்கை அணிந்து பிறை சூடிக்
கையில் சூலம் மானேந்தி
எங்கும் நிறைந்த பிரானாக
மேலோர் உள்ளத் துறைகின்ற
மங்கை உமையாள் ஒரு பாக
வடிவம் கொண்ட பேரிறைவா

முன்னைப் பிறவி பல எடுத்தும்
முடியாதிந்தத் தீவினையை
என்ன செய்வேன் சான்றோர்கள்
இதயத் துறையும் ஈஸ்வரனே!
இன்னல் அகன்று இருள் நீங்கி
இடர் பாடற்ற ஓர் நிலையில்
உன்னில் கலந்து உயர்வு பெற
உதவி செய்தால் அது போதும்.

தம்பலகாமம் க.வேலாயுதம். 
(1990 சிந்தாமணி.)

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment