Tuesday, October 02, 2012

கவிதைக்கு கிடைத்த பரிசு

கவிதைக்கு கிடைத்த பரிசு

குமரிப்பெண்கள் வாலிபர்களை எதிரும் புதிருமாகச் சந்திக்க நேர்ந்தால் வெட்கமடைந்து தலைகுனிந்து கால் பெருவிரலால் பூமியைக் கிளறிக்கொண்டிருப்பதுதான் இயல்பு. ஆனால் பெரிய அளவில் வாய்ச்சவடால் அடிக்கும் வாலிபச் சிங்கங்கள் கூட அழகான பெண்களின் மத்தியில் அகப்பட்டுக்கொண்டால் கூனிக்குறுகி கோணங்கித்தனமாக நடந்து கொள்வதைப் பரவலாகக் காணலாம்.


குமரன் இந்த இரு தரப்பாரின் அபிநயப்போக்குக்கும் விதிவிலக்கானவன் என்றுதான் சொல்ல வேண்டும். தன்னைச் சொற்களால் தாக்குபவர் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி உடனுக்குடன் சரியான பதில் அளித்து தன்னைத் தாக்கியவர்களை மட்டம் தட்டுவதில் குமரன் சமர்த்தன். அரிவையரைக்கண்டு தலைகுனிந்து பல்லிழித்து அவர்களுக்கு ஆதரவாகப் பேசுவதென்பது குமரனிடம் அறவே கிடையாது. சமர் முனைக்குச் செல்லும் வீர புருசனைப் போல் குமரன் எப்போதும் தலை நிமிர்ந்தே நடப்பான்.

அவனை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் தலைக்கனம் பிடித்தவன் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். பெண்களைக் கிஞ்சித்தும் மதிக்காத கர்வம் பிடித்த குமரனை ஒரு நாள் சந்தித்துப் பேசி மட்டம் தட்டி பரிகசித்து கேலி செய்யவேண்டும் என்று மேனகா, சாந்தி, மல்லிகா ,மோகனா என்ற நான்கு அழகான யுவதிகளும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.

‘தமிழுக்கு அமிழ்தென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.” என்று பாரதிதாசன் கூறியிருப்பதற்கமைய குமரன் தன் தாய்மொழியான தமிழைத் தன் உயிருக்கும் மேலாக நேசித்து வந்தான். தமிழோடு சில ஆங்கிலச் சொற்களையும் கலந்து பேசி எழுதி வருபவர்களைக் கண்டால் பொல்லாத கோபம் அசல் தமிழனாகவே காட்சி தருவான்.மறந்தும் வேற்றுடை தரிக்க மாட்டான்.

குமரன் அழகான வாலிபன். பால் வடியும் வதனம்’ என்று கூறுவார்களே! அதே போல் அவன் வதனம் வனப்புடன் தோன்றியது. எல்லாவற்றிற்கும் மேலாக அவன் சிரிக்கும் பொழுது அரும்பி வளரும் இளம் மீசை அவன் முகத்திற்கு தனி அழகைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அவன் வயது எப்படிப்பார்த்தாலும் முப்பதுக்கு மேல் இருக்காது. அவன் பைந்தமிழ் குமரன் என்ற புனைப்பெயரில் பத்திரிகைகளுக்கு கதை கட்டுரை கவிதைகள் எழுதுவான். அவன் எழுத்துக்கள் பெரும்பாலும் பெண்களை வர்ணிப்பதாகவே அமைந்திருக்கும். அதனால் அவன் இலட்சியத்தில் பலருக்கு சந்தேகம் ஏற்படவே செய்தது.


பெண்களை சட்டை செய்யாத குமரன் பெண்களின் வனப்பை வர்ணித்து ஏன் கவிதை எழுத வேண்டும் என்ற சர்ச்சையில் குடமுருட்டி ஆற்றுக்கு அண்மையிலுள்ள மாந்தோப்பில் அமர்ந்திருந்த மேனகா, சாந்தினி ,மல்லிகா, மோகனா என்ற நான்கு யுவதிகளும் ஈடுபட்டிருந்தனர்.

கார் மேகத்திரள் வானில் தோன்றல் போல 
கன்னியவள் நெளி கூந்தல் 
கண்கவரும் மார்பகத்தைச் சுமப்பதற்கு ஆற்றலின்றி 
மடக்கொடியின் மின்னலிடை துவளும் கண்கள் 
கூர்வேல் போல் ஒளிவீசிக் குறும்பு செய்யும் 
குன்றாத இளமையுடன் வனப்பும் வாய்ந்த 
சீர் மேவும் செந்திருபோல் அழகு வாய்ந்த 
சேயிளையின் எழிற்கோலம் நெஞ்சை அள்ளும்.

“சேயிளையின் எழிற் கோலம் நெஞ்சை அள்ளும்”என்ற தலைப்பில் அவன் சமீபத்தில் எழுதிய கவிதை தினகரன் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. அந்தப் பத்திரிகையை வைத்துக் கொண்டுதான் பிரஸ்தாப பெண்கள் பேச்சில் ஈடுபட்டிருந்தனர். சாந்தினி குறும்புச் சிரப்புடன் கவிதையைச் சத்தம்போட்டுப் படித்தாள்.மோகனாவைப் பார்த்து எல்லோரும் குறும்பாகச் சிரித்தனர். மோகனா ஒன்றும் புரியாதவளாக தோழிகளுடன் சேர்ந்து சிரித்தாள்.

சாந்தியின் குறும்பான குரலில் வாசிப்புத் தொடர்ந்தது. “கார் மேகத் திரள் வானில் தோன்றல் போலக் கன்னியவள் நெளி கூந்தல் கண்கவரும்” என்ற வரிகளைப் படித்த போது “அடியேய்! நம்ம மோகனாவை மனதில் வைத்துக் கொண்டுதான் குமரன் பாட்டு எழுதியிருக்கிறான். சந்தேகமில்லை.” என்று அதிகப்பிரசங்கியான மல்லிகா தன் அபிப்பிராயத்தைக் கூறினாள்.

“அப்படி ஒன்றும் இல்லை.பத்திரிகையில் ஒருவர் எழுதிய கவிதையை வைத்துக்கொண்டு என்னைத் தொந்தரவு செய்தீர்களானால் நான் எழுந்து சென்று விடுவேன்”என்று மோகனா தோழிகளை விரட்டினாள்.

நாங்கள் அவன் என்று ஏகவசனத்தில் சொன்னால் மோகனா ஒருவர் என்று மரியாதை செலுத்துகிறாளே என்று அந்த யுவதிகள் ஒருவரை ஒருவர் பார்த்து விசமமாகச் சிரித்துக் கொண்டனர்.

“சரி நாளைக்கு குடமுருட்டியாற்றங்கரையில் இந்தத் தமிழ்ப் புலவனைச் சந்திக்க நேர்ந்தால் பெண் அழகை இவ்வளவு பிரமாதமாக வர்ணித்திருப்பதற்காக நம் பாராட்டைத் தெரிவிக்கத்தான் வேண்டும்”என்று பரிகாசமாகக் கூறி கல கல எனச்சிரித்துக் கொண்டே எழுந்து வீடுகளுக்குச் சென்றனர்.

அன்று இரவு முழுவதும் மோகனா நித்திரை கொள்ளமுடியாமல் தவித்தாள் “அவருக்கு தமிழ் எவ்வளவு அழகாக வருகிறது. தோழிகள் சொல்வதுபோல் என் நெளி கூந்தலை நினைவில் வைத்துத்தான் கவிதை எழுதினாரா?” என்று நினைத்து அன்றைய இரவை ஆனந்தமாகக் கழித்தாள் மோகனா.

மறுநாள் பிற்பகல் மூன்று மணியளவில் ‘நீராடலுக்கு நதியை நாடிச்செல்லும் அப்ஸரஸ்கள் போல்’ இந்த நான்கு வனிதையர்களும் ஆற்றின் வெண்மணற் பரப்பில் அமர்ந்திருந்தனர். அந்த வழியாக பைந்தமிழ்க் குமரன் செய்கை பண்ணும் ‘ஐந்தேக்கர்’ என்னும் வயலுக்குப் போய்வருவதை இந்த வனிதையர்கள் கண்டிருக்கிறார்கள். எனவேதான் அந்த இடத்தை தேர்ந்தெடுத்து அவனை சண்டைக்கு இழுக்கக்காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்து வந்தது வீண் போகவில்லை.

 தம்பலகாமம்


தூரத்தே பைந்தமிழ்க் குமரனின் உருவம் தெரிந்தது.சத்தம் போட்டு கதைப்பதை நிறுத்திக் கொண்ட பெண்கள் தங்களுக்குள் கிசு கிசுத்துக் கொண்டனர். நான்கு பூரணச்சந்திரன்கள் ஆற்று மணலில் ஒன்று கூடியிருப்பதைக் கண்ட குமரன் திடுக்கிட்டான்.

அழகானவர்கள்தான் ஆனால் பொல்லாத விசக்கொடுக்குகள். இந்த வாயாடிகளிடம் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பி விட வேண்டும் என்று எண்ணியவனாக ஆற்றைக் கடந்து அக்கரையில் ஏறினான்.

“ஐயா புலவரே” என்று பரிகாசக் குரலில் சாந்தினி அழைத்தாள்.

‘என்ன?’ என்பது போல குமரன் சாந்தினியைத் திரும்பிப் பார்த்தான்.

“நாங்கள் குமரிப் பெண்கள்.குடமுருட்டியாற்றில் குளிக்க வந்திருக்கிறோம். இதைத் தங்கள் பாணியில் வர்ணித்து ஒரு கவிதை வேண்டும்.”என்றாள்.

“நாளை தருகிறேன்” என்றான் குமரன்.

“இவ் விடத்தில் கிடைக்குமா?” என்று கேட்டாள் மேனகா.

“கிடைக்கும் கிடைக்கும்”என்று கூறிக்கொண்டே வயலை நோக்கி தப்பினோம் பிழைத்தோம் என்று கவிஞன் விரைந்து செல்வதைக் கண்டு அந்த இளம் யுவதிகள் சிரி சிரி எனச்சிரித்து விட்டு ஆற்றிலிறங்கி நீராடிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர்.

அடுத்த நாள் அந்த விசமக்காரப் பெண்கள் ஆற்றில் இறங்கி நீராடி ஒருவருக் கொருவர் நீர் எற்றி விளையாடியது போல கவிதை எழுதிக் கொண்டு குடமுருட்டி ஆற்றங்கரைக்குச் சென்றான் குமரன். ஆனால் அவன் எதிர்பார்த்தது போல அந்தப் பெண்கள் ஒருவரையும் காணவில்லை.அதற்குப் பிறகு பல தடவைகள் வயலுக்குப் போகும் போதெல்லாம் குமரன்
எவ்வளவு முயன்றும் அந்தக் குறும்புக்காறப் பெண்களை காணவேயில்லை.

எங்கே போயிருப்பார்கள்? என்று குமரன் எண்ணிப்பார்த்தான். ‘சே’ மோகனாவின் கவர்சியான முகத்தைக் கூடப் பார்க்க முடியவில்லையே என்று அவன் ஏங்கினான். அவளைப் பார்க்க முடியவில்லையே என்று தவியாகத் தவித்தான்.

பல்கலைக்கழகம் தொடங்கி விட்டதால் அதில் கற்கும் மேனகாவும் ,மல்லிகாவும் கொழும்பு சென்றுவிட்டார்கள் என்று தெரிந்தது. படைபலம் குறைந்ததால்தான் அந்தப் பெண்கள் சைனியம் ஆற்றுப் பக்கம் தலைகாட்டவில்லை என்று அறிந்து கொண்ட குமரன் வேறுவழியின்றி வயலுக்குப் போய்வந்து கொண்டிருந்தான். இருந்தாலும் மோகனாவின் மதிமுகத்தைக் அடிக்கடி காணமுடியாமல்போனது குமரனுக்கு கிலேசத்தையே கொடுத்தது.

அவன் சிந்தாமணியில் எழுதிய கவிதையொன்று அன்று வெளியாகியிருந்தது. அதையெடுத்துக் கொண்டு தனது வயலை நோக்கி நடந்தான் குமரன். குடமுருட்டி ஆற்றங்கரையை அண்மித்த பொழுது அவன் கண்களையே அவனால் நம்ப முடியாமல் இருந்தது. அங்கே அன்றைய சிந்தாமணியைக் கையில் ஏந்திய வண்ணம் மோகனா தென்பட்டாள்.

அவளை நெருங்கிய குமரன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “எங்கே உங்கள் தோழிகளை இந்தப்பக்கம் காணவில்லை”. என்று கேட்டான்.

“பல்கலைக்கழகம் தொடங்கி விட்டதால் அவர்கள் கொழும்புக்குப் போய்விட்டார்கள். எனக்கு தனியாக வரமுடியாமல் இருந்தது. இன்று உங்கள் கவிதையைச் சிந்தாமணியில் பார்த்தேன். எவ்வளவு அருமையான கவிதை. உங்களைப் பார்த்துப் பாராட்டி விட்டுச் செல்லலாம் என்று வந்தேன்”. என்றாள்.

அவர்கள் இருவரும் நேரம்போவது தெரியாமலே பேசிக்கொண்டிருந்தார்கள். அவள் பேச்சிலிருந்த நெருக்கத்தை புரிந்து கொண்ட குமரன் தன் உள்ளக்கிடக்கைகளைக் கொட்டித் தீர்த்தான். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இது பெரும் உதவியாக இருந்தது. சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்து விட்டு அவர்கள் இருவரும் பிரிய மனமில்லாமல் பிரிந்து தம் தம் விடுகளுக்குச் சென்றனர்.

மோகனாவின் வீட்டுக்கு அவள் பாட்டி கௌரியம்மா வந்திருந்தாள். பேச்சோடு பேச்சாக “நீ யாரைக் கட்டிக் கொள்ளப் போகிறாய்?” என்று தமாசாகக் கேட்டாள்.

“நான் குமரனைத்தான் கட்டிக் கொள்வேன்” என்று மோகனா கூறினாள்.

“ அது யாரடி குமரன்” என்று அந்தம்மா ஆச்சரியமாகக் கேட்டாள். மகள் மாமியார் உரையாடலைக் கேட்டுக் கொண்டு அங்கே வந்த சிவகாமி.

“அவனைக் கட்டிக் கொண்டு அவன் எழுதும் கவிதைகளைப் போட்டு கறி சோறு ஆக்கிச் சாப்பிடப் போகிறாள்?” என்று இடக்காகக் கூறிவிட்டு கணவர் சுந்தரம் பிள்ளையிடம் சென்று

“நீங்கள் செல்லம் கொடுத்து கொடுத்து வளர்த்ததால்தான் மோகனா குமரனைத்தான் திருமணம் செய்வேன் என்று தைரியமாகக் கூறுகிறாள்.” என்று மோகனாவின் தாய் சிவகாமி அங்கலாய்த்தாள்.

“இங்கே பார் திருமணத்தை நீயும் நானும் செய்து வைக்க முடியாது. மேலே இருக்கும் இறைவன் இன்னாருக்கு இன்னார் என்று இரகசியமாகச் செய்து வைத்த முடிவே இங்கே வந்து உரிய வயதையடைந்ததும் அது காதலாக வெளிப்படுகிறது. அந்தப் பையன் நல்லவன். நெற்செய்கையிலும் ஊக்கங்காட்டுகிறான். வயலையும் முதலையும் கொடுத்து வந்தால் வெகுவிரைவில் முன்னேறி ஒரு நல்லநிலைக்கு வந்துவிடுவான். ஆண்டவன் கட்டளையை நிறைவேற்றி வைப்பதே பெற்றோர்களாகிய நம் கடமை”என்றார் மோகனாவின் தந்தை.

ஒரு நல்ல நாளில் சுபமுகூர்த்தமான வேளையில் திருத் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய மண்டபத்தில் கன்னிக்கால் நட்டு ,அரசாணி கட்டி ,சால் கரகம் வைத்து பிரசித்த நாதஸ்வர வித்துவான்களின் இராக ஆலாபனை திருமணத்திற்கு வந்து மண்டபத்தில் நிறைந்திருக்கும் ஆண் பெண்களின் காதுகளில் தேனாக ஒலிக்க ஓய்வுபெற்ற முருகப்பா ஆசிரியரின் கனிஷ்ட புத்திரன் குமரேசன் தம்பலகாமத்தின் நிலச்சொந்தக்காரர்களில் ஒருவரான சுந்தரம்பிள்ளையின் கனிஷ்ட புத்திரி திருநிறைச் செல்வி மோகனாவின் கழுத்தில் திருமண இணைப்பின் சின்னமான தாலியை அணிவித்தான்.


தம்பலகாமம்.க.வேலாயுதம்
( 1985)

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. எப்படியோ முடிவில் சுபம்...

    ReplyDelete
  2. நன்றி திரு.தனபாலன் அவர்களே

    ReplyDelete