Tuesday, October 16, 2012

மேகலாவின் காதலன்

thampalakamam

தம்பலகாமம் கோயில்குடியிருப்பில் கதிர்காமத்தம்பிப் போடியாரின் வளவில் ‘நெல்லுப்பட்டறை’ பிரித்து விவசாயிகள் விதைநெல் வாங்கிச் சென்று கொண்டிருந்தனர். போடியாரின் வளவு மாட்டு வண்டிகளும் மனிதர்களும் நிறைந்து காணப்பட்டது. சுப்பிரமணியம் என்ற நெற் செய்கையாளரும் போடியாரிடம்தான் வழக்கமாக விதைநெல் எடுப்பவர் ஆயினும் இம்முறை அவர் விதைநெல் வாங்க வரவில்லை. ‘என்ன காரணம். இம்முறை மணியம் விதைநெல் வைத்திருக்கிறானோ?’ என்று போடியார் எண்ணினார்.


மறுநாள் தனக்காகச் செய்கைக்காரர்கள் செய்கை பண்ணும் ‘இலுப்பையடி வெட்டுவன் காடு’ என்னும் வயலைப் போய்ப்பார்த்து விட்டுப் போடியார் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தோளில் மண்வெட்டியுடன் வரும் சுப்பிரமணியத்தைச் சந்தித்தார். அவர் பேசுவதற்கு சங்கடப்படுவதைக் கண்ட கதிர்காமத்தம்பிப் போடியார் “நேற்று பட்டறை பிரித்து விதை நெல் எடுத்தார்கள். உங்களை காணவில்லை.விதைநெல் வைத்திருக்கிறீர் போல இருக்கிறது.”என்றார். “இல்லை பாருங்கோ. உழுது பண்படுத்திய வயல் நீரின்றிக் காய்ந்து விட்டது. நேற்று முழுவதும் நீர்பாய்ச்ச வேண்டியிருந்ததால் நெல் எடுக்கவர முடியவில்லை.நாளைக்கு வரலாமா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டார். “நேற்று பத்து பதினைந்து பேர் செய்த வேலையை நீங்க தனியே செய்து நெல்லெடுக்க முடியுமோ?” என்று வெறுப்புடன் கூறிவிட்டு நடந்தவர் மீண்டும் நின்று “மணியம் உங்களால் பெரிய தொல்லை. நாளைக்கு வந்து நெல்லை எடுத்துக்கொண்டு போங்க.” என்று கூறிவிட்டு போடியார் வீடுநோக்கி நடந்தார்.

thampalakamam

மறுநாள் சாக்குகளை எடுத்துக் கொண்டு இரண்டொரு கூலியாட்களுடன் விதை நெல் எடுக்க சுப்பிரமணியம் புறப்பட்ட சமயம் கண்டி பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் இறுதியாண்டுப் பரீட்சை எழுதிவிட்டு வீடு வந்திருக்கும் மகன் செல்வேந்திரன் “ நானும் வருகிறேன் அப்பா” என்றவாறு அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

எடுக்கப் போகும் விதை நெல் இருபது மூடைகள் என்றறிந்ததும் இருபதிற்கும் பத்து மூடைகள் வட்டிசேர்த்து முப்பது மூடைகளுக்கான பணத்தொகையைப் போட்டு ‘நோட்டெழுதி’ மணியத்தாரின் கையொப்பத்தையும் பெற்றுக்கொண்ட  கதிர்காமத்தம்பி போடியார் “நான் கோணங்குடா வயல்பக்கமாகப் போக வேண்டியிருக்கிறது. நீங்கள் வண்டிலைக் கொண்டுவந்து நெல்லை ஏற்றி வெளியில் எடுங்கள்” என்றார்.

செல்வேந்திரனும் ஒரு கூலியாளுமாகச் சென்று போடியாரின் பின் வளவுக்காரரின் வண்டியைக் கொண்டுவந்து நெல் மூடைகளை ஏற்ற முயன்றனர். இதைக்கண்ட போடியார் வெகுண்டு “சுப்பிரமணியம் உமக்கு ஆட்களைத் தெரியாதா? என்னை மதியாமல் கண்டபடி பேசியவனின் வண்டியில என்ர நெல்லை ஏற்ற ஒருபோதும் சம்மதிக்க மாட்டன். வேறு வண்டி கொண்டுவாருங்க”என்று கோபமாகக் கூறினார்.

இந்த காட்டுமிராண்டிப் பணக்காரனிடம் நெல்லு வாங்க வந்து தந்தைபடும் அவஸ்தையைக் கண்டு வாலிபனான செல்வெந்திரனுக்கு கோபம் வந்துவிட்டது. “இவ்வளவு வயது போன பெரிய மனிதனாகியும் உங்களுக்கு நியாய புத்தியில்லையே. தந்த நெல்லுக்கு கொடுமையான வட்டிபோட்டு நோட்டெழுதிக் கொண்டீர்கள். இனி நெல்லு எங்களுடையது. எங்களுடைய நெல்லை எந்த வண்டியில் ஏற்றிப்போனால் உங்களுக்கென்ன? ” என்றான் செல்வேந்திரன்.

இப்படி போடியாரை நேருக்கு நேர் கண்டிக்க இந்த ஊரில் ஒரு மனிதன் இருக்கிறானா? என்று அங்கு நெல்லுவாங்க வந்திருந்த பலரும் வாயடைத்து ஸ்தம்பித்திருந்தனர். சமயல் அறையில் அப்பம்மாவுடன் காரியமாக இருந்த போடியாரின் பேத்தி மேகலா இந்த ஊரின் சர்வாதிகாரியான நம் ஐயாவை இப்படி நேருக்கு நேர் நின்று கண்டிக்கும் தைரியசாலியான ஆண் மகனை பார்க்க வேண்டும் என்று அவசரமாக வெளியே வந்து எட்டிப் பார்த்தாள். சமையல் அறையிலிருந்து புறப்பட்ட சந்திர உருவை அவனும் பார்த்தான்.

அந்தப் பெண்ணை தம்பலகாமம் பொது நூல் நிலையத்தில் அவன் அடிக்கடி சந்தித்திருக்கிறான். பல்கலைக்கழக விடுமுறைகளில் அவன் பெரும்பாலும் தனது கிராமத்திற்கு வந்து தனது தந்தையின் விவசாய முயற்சிகளுக்கு உதவியாக இருப்பது வழக்கம். அச்சமயங்களில் ஓய்வாக இருக்கும் வேளைகளில் அவன் கோயில்குடியிருப்பில் அமைந்துள்ள பொது நூலகத்திற்கு அடிக்கடி செல்வான். அப்பொழுதெல்லாம் அந்தப் பெண்ணை அவன் அடிக்கடி சந்தித்திருக்கிறான். அவள் கதிர்காமத்தம்பிப் போடியாரின் பேத்தி என்றும் படிப்பில் நல்ல கெட்டிக்காரி என்றும் போடியாரின் பிடிவாதத்தால் பத்தாம் ஆண்டுடன் கல்வியை இடைநிறுத்த வேண்டி ஏற்பட்ட தென்றும் தனது தோழர்கள் சொல்ல கேட்டிருக்கிறான். கல்வியில் அந்தப் பெண்ணுக்கிருந்த நாட்டத்தை அறிந்து அவன் பெரிதும் சந்தோசப்பட்டான். சந்தோசம் காலப்போக்கில் விருப்பமாகவும் மாறியது.

மேகலாவும் அந்த இளைஞனை அடிக்கடி பொதுநூலகத்தில் சந்தித்திருக்கிறாள். அவன் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் பொறியியல் இறுதியாண்டில் கற்றுக்கொண்டிருக்கிறான் என்றும் விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வந்து தந்தையின் விவசாய முயற்சிகளுக்குத் துணையாக இருக்கிறான் என்றும் பலர் பாராட்டிச் சொல்ல கேட்டிருக்கிறாள். இதைகேட்டு அவள் சந்தோசப்பட்டாள். அடிக்கடி அந்த இளைஞனின் நினைவு அவளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.அந்த நினைவுகளே காலப்போக்கில் காதலாக மாறியது.

நெல்லு வாங்க வந்த ஒரு சாதாரண மனிதன் இவ்வளவு பேர் முன்னிலையில் இப்படி மரியாதையில்லாமல் பேசிவிட்டானே என்று கல்லாய்ச் சமைந்திருந்த கதிர்காமத்தம்பி போடியார் துள்ளி எழுந்து ‘நோட்டை’ எடுத்து வந்து சுக்குநூறாய் கிழித்து சுப்பிரமணியத்திற்கு முன்னால் எறிந்துவிட்டு செல்வேந்திரனைப் பார்த்து “கோணல் எழுத்துப் படிப்பு இப்படியெல்லாம் கெறுவாகப் பேசச் சொல்லுகிறது. இனி விதைநெல்லுக்கு அப்பாவும் மகனும் வீட்டில் போய் இருந்து அழுங்கள்” என்று சொல்லிவிட்டு ‘நெல்லைக் கொட்டிவிட்டு சாக்குகளைக் கொடுங்கள்’என்று தம் கூலி ஆட்களிடம் கோபமாகக் கூறினார் கதிர்காமத்தம்பி போடியார்.

thampalakamam

இந்தச் சம்பவம் பல வாரங்களாக போடியாரின் மனத்தை வருத்திக்கொண்டிருந்தது. இறந்த தனது மகனின் மகளான மேகலாவை குழந்தைப் பருவத்திலிருந்தே மனைவியும் தானுமாக வளர்த்து பெரியவளாக்கி விட்டார். அவளது படிப்பைப் பத்தாவது வகுப்புடன் நிறுத்தித் தங்களுடன் வைத்துக் கொண்டார். “உனக்கேன் அதிக படிப்பு? படித்து உத்தியோகம் பார்த்து சம்பளம் வாங்கப் போகிறாயா? இவ்வளவு பொருள்களையும் வைத்துக்கொண்டு இராசாத்திபோல வாழவேண்டிய உனக்கு அதிகம் படித்து அடிமை உத்தியோகம் பார்த்து சம்பளம் வாங்கும் எண்ணம் இருக்கக்கூடாது.” என்பார் போடியார்.

தன் படிப்பை பத்தாம் வகுப்புடன் நிறுத்தியதால் மேகலாவுக்கு ஐயாமீது பொல்லாத கோபம் இருந்தது. புத்தகம் வாசித்தே மேகலா தன் அறிவை வளர்த்து வந்தாள். கல்வியைப்பற்றி இந்த மனிதனுக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணுவாள். இவரது திமிரான வார்த்தைகளுக்கு எப்பதான் தண்டனை கிடைக்கப்போகிறதோ? என அஞ்சுவாள். அவள் எதிர்பார்த்தது நெல் வாங்க வந்த அந்த அழகிய வாலிபனால் கிடைத்துவிட்டது. அவளுக்கு மகா சந்தோசம். பணம் இருக்கிறது என்று கர்வம் கொள்பவர்களுக்கு இப்படி நேருக்கு நேர் தாக்குதல் வேண்டியதுதான் என்று எண்ணிய மேகலா அந்த வாலிபனின் கம்பீர உருவத்தையும் துணிச்சலையும் எண்ணி மகிழ்ந்தாள்.

போடியார் தனது இரு பெண்களுக்கும் நல்ல சீதனம் கொடுத்து பெரிய இடங்களில் திருமணம் செய்து வைத்தார்.அவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களுக்கே மனைவிமார்களையும் அழைத்துக் கொண்டனர். அதனால் போடியாருக்கு மிகுந்த வருத்தம் இருந்தது. “எங்கள் மேகலாக் குட்டிதான் வயது வந்த எங்களுக்கு ஆதரவாக வீட்டில் இருக்கப் போகிறாள். மகள்மாருக்குக் கொடுப்பதெல்லாம் கொடுத்துவிட்டேன். இனி என்னிடமுள்ள தெல்லாம் மேகலாக் குட்டிக்குத்தான்.” என்று அடிக்கடி சொல்லுவார்.

பெண் கேட்டுவந்த பெரிய தனவந்தர்களின் சம்பந்தங்களைத் தட்டிக்கழித்து விட்டுத் தம் பழைய நண்பரின் மகனை பேத்திக்கு மாப்பிள்ளையாகத் தெரிவு செய்து விட்டு மனைவியிடமும் பேத்தியிடமும் கூறினார் போடியார். மணமகள் மேகலாவின் மறுப்பையும் மீறி போடியாரின் பிடிவாதம் திருமண ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தது.

போடியார் மாளிகை கல்யாணக்களை கட்டத் தொடங்கியது. போடியாரின் மாப்பிள்ளை மாரும் மகள் இருவரும் பிள்ளைகளும் உறவினர்களும் வந்து அந்தப் பெரிய மாளிகையை நிறைத்துக் கொண்டிருந்தனர். கொட்டகை பந்தல்கள் அமைப்பதற்கும் ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. போடியாரின் மாளிகை கல்யாணக் கோலாகலத்தில் திளைத்த வேளையில் மாளிகைக்குள் இருந்து சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது போல ‘மணமகளைக் காணவில்லை’ என்ற அதிர்ச்சிதரும் செய்தி புறப்பட்டது. அங்குள்ளோர் சிறிது நேரம் பேச்சு மூச்சற்று ஸ்தம்பித்து நின்றனர். பிறகு ஒருவாறாக தம்மை சுதாகரித்துக் கொண்டு ஆண்களும் பெண்களுமாக ஒவ்வொரு வீடாகத் தேடத் தொடங்கினார்கள்.

போடியார் உருத்திர மூர்த்தியானார் மனைவியிடம்; ஓடிவந்து ‘யாருடன் எங்கே அனுப்பினாய்? சொல்லு. சொல்லாவிட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று உறுமினார். அந்த அம்மா “கிணற்றுக்குள் விழுந்து தொலைந்து விடுகிறேன்” என்று அழுது கொண்டே கிணற்றுப்பக்கமாக ஓடினார். அவர் பின்னால் ஓடியவர்கள் கற்பகம் அம்மாவை பிடித்துக் கொண்டு வந்து விட்டு “இப்படி ஒருவரையொருவர் பழி சொல்லிக் கொண்டிராமல் காணாமல் போன பெண்ணைத் தேடுவதில் முயற்ச்சி எடுங்கள்” எனக்கூறிவிட்டுச் சென்றனர்.

தம்பலகாமத்தில் மேகலாவை வீடு வீடாகத் தேடினார்கள். பணக்காரர்கள் அல்லவா? சும்மா விட்டுவிடுவார்களா? இலங்கையின் எல்லாப் பகுதிகளுக்கும் ஆட்களை அனுப்பி மேகலாவை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போடியார் ஈடுபட்டிருந்தார்.

1981 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட வன்செயலானது அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் யமனாகத் தோன்றியது. இதில் விதிவசத்தால் அகப்பட்டுக் கொண்ட சிலர் என்ன ஆனார்கள் என்பது எவருக்கும் தெரியாத ஒரு விடயமாகவேயிருந்தது. இந்த உயிர் போகும் பீதி நிறைந்த கலகத்துள் மேகலா மறைந்த கதை பழங்கதையானது. பரவி வரும் வன்செயல் கொடுமைகளைக் கண்டு பீதியடைந்த தம்பலகாமம் மக்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ,மன்னார் , இந்தியா மற்றும் வெளிநாடுகள் என்று பல இடங்களுக்கும் ஓடினர்.

கதிர்காமத்தம்பி போடியாரும் அவரது அடியாட்களும் கிண்ணியா போன்ற இடங்களுக்குச் சென்று நிலமை சரியானதும் திரும்பி விட்டார்கள். மேகலா உயிரோடிருக்கிறாளோ? இல்லையோ? என்று ஒன்றுமே தெரியவில்லை. எட்டு ஒன்பது வருடங்கள் கடந்து விட்டது. வன்செயல் கொடுமைகள் குறைந்து நாடே சுகுமமான நிலைக்கு வந்து விட்டது. கதிர்காமத்தம்பிப் போடியார் மட்டக்களப்புக்கு போய் வருவதற்கு ஆயத்தமானார். “நான் மட்டக்களப்புக்கு போய் வரப் போகிறேன். எல்லோரும் கவனமாக வீட்டைப் பார்த்துக் கொள்ளுங்கள்.” என்று கூறிவிட்டுப் போனார். போடியார் மட்டக்களப்புக்குப் போகிறார் என்பதை அறிந்து கொண்ட பக்கத்து வீட்டு இராஜம் வந்து கற்பகத்திடம் பேசிக்கொண்டிருந்தாள்.

“அம்மா ஒரு சந்தோசமான காரியம் சொல்லப் போகிறேன். நான் நேற்றுக் கந்தளாய் போட்டன் காட்டுக்குப் போனேன். இந்த ஊர் உலகமெல்லாம் நம் மேகலாவைத் தேடினோமே! நேற்று நம்ம மேகலாவை போட்டன் காட்டு வீட்டில் திடு திப்பென்று கண்டு நான் பிரமித்துப் போனேன். நம் ஐயாவை உரித்து வைத்ததுபோல் ஒரு குழந்தையைப் பெற்று வைத்திருக்கிறாள். மணியம் ஐயாவின் மகனைத்தான் திருமணம் செய்திருக்கிறாள். அந்தப் பொடியன் கந்தளாய்க்குளத்து எஞ்சினியராம். ஐயா வருமுன் மேகலாவைப் போய்ப் பார்த்து விட்டு வாருங்கள் அம்மா வீட்டை நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்று சொல்லி மேகலா இருக்கும் வீட்டின் அடையாளங்களையும் கூறினாள்.

கற்பகம் கந்தளாய் போட்டன்காடு போய் இராஜம்மா கூறிய அடையாளங்கள் உள்ள வீட்டை அண்மித்த போது ஏதோ காரியமாக வெளியேவந்த மேகலா அப்பம்மாவைக் கண்டு விட்டாள். “வாங்கம்மா.வாங்கம்மா.” என்று வரவேற்றாள். செல்வேந்திரன் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு புன் சிரிப்புடன் மனைவிக்குப் பின்னால் வந்தான்.எல்லோரும் வீட்டுக்குள் போனார்கள்.
அங்கே அவளுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அறையில் நாற்காலியில் அமர்ந்திருந்த கதிர்காமத்தம்பி போடியார் மனைவி கற்பகத்தைப் பார்த்து சிரித்தார். “எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து நடத்தி விட்டு ஒன்றும் அறியாத நம் தலையைத்தான் உருட்டுவார்கள்.”என்றாள்.

“நாங்கள் ஒன்பது வருடகாலமாக மன்னாரில் மனோகரன் ஐயாவீட்டில் சந்தோசமாக வாழ்ந்தோம். ஐயா வீட்டில்தான் இவனும் பிறந்தான். உப்புக்குளம் விநாயகர் ஆலயத்தில் இவர் எனக்குத் தாலி கட்டினார். ஐயாவின் துணைவியார் என்னை தன் சொந்தப்பிள்ளையைப் போல பார்த்துக் கொண்டார். எங்கள் ஐயாவையும் அப்பம்மாவையும் கண்டது எங்களுக்குப் பேரானந்தம் அளிக்கிறது. எங்களுக்கு மகிழ்சியான வாழ்வைத்தந்த பக்கத்து வீட்டு இராஜம் அம்மாவுக்கு நாங்கள் என்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்” என்றாள் மேகலா. கதிர்காமத்தம்பி போடியார் தன்னைப்போல இருக்கும் பூட்டனை வாரியணைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார்.

தம்பலகாமம் க.வேலாயுதம்.


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. கதை முடிவு நிறைவாக இருக்கிறது. :-)

    ReplyDelete
  2. மிக்க நன்றி இமா அவர்களே.

    ReplyDelete
  3. தற்செயலாக வாசிக்கக்கிடைத்தது. அற்புதமான கதை, எமது வாழ்வியலை சிறப்பாகப் பதிவுசெய்திருக்கிறீர்கள்.

    ReplyDelete