திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூன்று பற்றுக்களில் மத்திய பற்றான தம்பலகாமத்திலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்திலுள்ளது ஆலங்கேணி என்னும் அருமையான கிராமம். ஒரு மணல் பிரதேசமாக இந்த ஊர் காணப்படுகிறது. “
ஆலங்கேணி மணல்” என்பது இப்பிரதேசத்தில் மிகவும் பிரசித்தமான ஒரு விடயமாகும்.
தொழில் செய்ய முடியாத நிலப்பகுதி என்று கூடக் கூறலாம். ஆனால் பாட்டாளிகளான இவ்வூர் மக்கள் தங்களுக்கென ஒரு தொழிலை சிருஸ்டித்து ஓயாமல் உழைத்துத் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டது குறிப்பிடத் தக்கதாகும். இந்தக் கிராமத்தில் ஒரு பெரிய ஆலமரமும் அதனருகே தாமரைக்கேணியும் இருப்பதால் காரணப் பெயராக “
ஆலங்கேணி” என்று பெயர் அமைந்ததாகக் கருதப்படுகிறது.
இங்கு ஏறக்குறைய எண்ணூறு குடும்பங்கள் வரை வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் தமிழர்கள். வடக்கே உள்ள கிண்ணியாவிலிருந்து வீதிகளில் கல்பரப்பி ஆலங்கேணி மணலை அடக்கி வடக்குத் தெற்காக வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளன.