Friday, September 04, 2009

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் களிப்பூட்டும் சிரிப்புக் கவிதைகள்


கல்வியில் பெரியவன் கம்பன் என்ற சொற்றொடர் பிரசித்தம் வாய்ந்தது. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாம்பின் கால்களை இன்னொரு பாம்பினால் தான் நன்கு அறிய முடியும் என்று கூறுவதற்கேற்ப ஒரு புலவராகிய இவர் இன்னொரு பெரும் புலவராகிய கம்பரைப் பற்றி நன்கு அறிந்து நமக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

கம்பரின் கவித்திறன் ஆச்சரியமானது என்பது பாரதியின் வாதம். கவி அரசர் தமிழ் நாட்டின் தலைசிறந்த புலவர்களைப் பற்றி பேசும் போதெல்லாம் கம்பரை முன் வைத்துப் பேசுவதையும் கம்பர், வள்ளுவர், இளங்கோ என்று கம்பரை முன்வைத்துப் புலவர்களை வரிசைப்படுத்திக் கூறுவதையும் கம்பனென்ற மானிடன் பிறந்து நடமாடிய தமிழ் மண்ணில் தாமும் பிறந்து வாழ்வதை இட்டுப் பாரதியார் பெருமை கொள்வதையும் காண முடிகிறது.

உயரிய கருத்துக்களை ஓசை நயத்துடனும் உவமான அழகுடனும் கவிதை உருவில் எடுத்துக் கூறுவதில் ஈடு இணையற்றவராக இருப்பதுடன் சிரிப்பூட்டும் நகைச்சுவைப் புலமையிலும் கவிச்சக்கரவர்த்தி நிகரற்று விளங்குவதைக் காணலாம். 
இலங்கை வேந்தனான இராவணன் மாலயனுக்கும் எட்டாத நெஞ்சடைக் கடவுளிடம் நெடிய ஆயுளும் கொடிய வாளும் பெற்றான். படைப்புக் கடவுளான பிரம்மனுக்கு கொள்ளுப் பேரன் பிரம்மனிடம் இருந்து அரிய பெரிய அஸ்திர ஸ்திரங்களைப் பெற்றவன். சிறந்த சிவ பக்தன். சமயக்குரவர்களில் முதல்வரான திருஞான சம்பந்தர், இராவணன் மேலது நீறு என்று பாராட்டி இருப்பதே இலங்கேசனின் சிவ பக்திக்குச் சிறந்த சான்றாகும். இலங்கேசன் வேதாகமங்களைத் துறைபோகக் கற்ற பெரிய கல்விமான் -பெரிய சங்கீத வித்துவான்.

வீணை மீட்டிச் சாமகானம் பாடி இறைவனை மகிழ்வித்துத் தாயார் வழிபட சிவலிங்கம் பெற்றவன். வீரத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெரும் வீரன். இந்த உலகத்திலுள்ள வீராதிவீரர்களையெல்லாம் தோற்கடித்து அமரர் உலகுகளையும் சாடி இந்திரன், யமன் திசை நாயகர்களையும் புறங்கண்ட வீரபராக்கிரமன். முக்கண் இறைவன் உறையும் கயிலை மலையை பெயர்த்தெடுக்க முயன்ற இராவணனின் வீரம் பிரசித்தம் வாய்ந்தது. எட்டுத்திக்கும் புகழ் பரப்பி அரசோச்சிய இலங்கை வேந்தனிடம் தேவர்கள் அடிமை வேலைகள் செய்து உயிர் வாழ்ந்தனர்.

தேவர்கள் இலங்கை நாட்டின் கடலோரங்களையும் மலர் வனங்களையும் காவல் காத்து நின்றனர். இலங்கேசனிடம் ஊழியம் புரியும் தேவரும் பிறரும் வேலைக்குச் செல்லும்போதும் வேலை முடிந்து வீடு திரும்பும் போதும் அரசன் முன் தோன்றி அவன் அனுமதி அளித்த பின்பே வேலைக்கோ வீட்டுக்கோ செல்லவேண்டும். இதற்கென ஒரு குறிப்பிட்ட நேரமும் இருந்தது. காலம் தாழ்த்தி அரசன் முன் வர நேர்ந்தால் அதற்கான தகுந்த காரணம் கூறவேண்டும். தவறினால் தண்டனையும் உண்டு.

ஒருநாள் மாலை பணிமுடிந்து திரும்பிய வானவரும் பிறரும் அவசரமாக இராவணனின் அரசிருக்கையை நோக்கி கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருந்தனர். பிந்தி விட்ட ஒரு அமரர் கூட்டம், குறிப்பிட்ட நேரத்துள் அரச சபைக்குப் போய்ச் சேர்ந்து கொள்ள முடியாது போல் இருக்கிறதே. மன்னன் கோபிக்கப் போகிறானே என்ற பதைபதைப்புடன் தலைதெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தது.

அவர்கள் ஓடிவரும் அவசர வேகத்தில்அவர்கள் அணிந்திருந்த மார்பு ஆரங்களும் முடியில் சூடிய மாலைகளும் அலங்கோலமாக தாறுமாறாக விழ அணிந்திருந்த ஆடைகளும் அவிழ்ந்து தொங்கின. அரசன் கோபிக்கப்போகிறானே என்று அச்சத்தால் ஒன்றையும் சரிசெய்து கொள்ள நேரமின்றி உரியும் உத்திரியத்தையும் கையில் அள்ளிக் கொண்டு அரசசபையை நோக்கி அமரர்கள் பரிதாபக் கோலத்தில் ஓடிக்கொண்டிருந்தார்கள் என்ற கவிச்சக்கரவர்த்தி தரும் நகைச்சுவைச் செய்யுள், இலக்கிய ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தும் என்பதில் ஐயமில்லை. அச்செய்யுள் பின்வருமாறு.

சித்திரப் பத்தியில் தேவர் சென்றனர்
இத்துணை தாழ்ந்தன முனியும் என்று தம்
முத்தினாரங்களும் முடியின் மாலையும்
உத்திரியங்களும் இரிய ஓடுவார்.

சீதாவைத் தேடி இலங்கை வந்த அனுமான் அசோக வனத்தில் ஜானகியைக் கண்டு உரையாடிய மகிழ்சியில் எழிலுறும் அசோக வனத்தை அழித்தான். அதை தடுக்க முயன்ற காவல் வீரர்களையும் கொன்றழித்தான். இராவணனின் பராக்கிரமத்தால் அடங்கி ஏவல் செய்யும் அமரர்களுக்கு மாருதி அசோக வனத்தில் செய்த பேரழிவு மகிழ்சியைத் தந்தது. ஆயினும் வெளிப்பார்வைக்குத் துக்கப்படுபவர்கள் போல் நடித்தனர்.

காலனைப் போல் பயம் தரும் சம்புமாலி அனுமானால் வதையுண்ட போது தேவர்களின் ஆனந்தம் அளவு கடந்தது. ஆயினும் பெரும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு துக்கப்படுபவர்கள் போல் திறமையாக நடித்தனர். உள்ளத்தில் மகிழ்சியும் வெளியில் துயரமுமாக இரட்டை வேடத்தில் தோன்றும் அமரர்கள் அரசன் முன் சென்று சம்புமாலி மடிந்த செய்தியைச் சொல்ல முடியாமல் விக்கி விதிர்த்து விழித்து நின்றார்கள். வானவர்களின் இந்தப்பரிதாபக் கோலத்தைக் கண்ட இலங்கை வேந்தன் குலுங்க நகைத்து அவர்களை இகழ்சியாகப் பார்த்து என்ன சொல்லப் போகிறீர்கள் பயப்படாமல் சொல்லுங்கள் என்று அதட்டினான். இலங்கை மன்னன் மேல் உள்ள பயத்தால் தங்களின் கொடிய எதிரிகள் என உள்ளத்தில் எண்ணும் இராவணனது இலங்கை வீரர்களை நம்மவர்கள் மடிந்தனர் என்று உரிமையுடன் கூறித் தேவர்கள் திறமையாக நடித்தனர் என்பதை கவிச்சக்கர வர்த்தி உயரிய நகைச்சுவையாக கவிதை மூலம் பின்வருமாறு கூறுவதைக் காணலாம்.

புக்கார் அமரர் பொலந்தார் அரசன் பெருவில் பெருங்கோயில்
விக்கார் நின்றார் விளம்பலாற்றார் வெருவி விம்முவார்
நக்கான் அரசன் நடுக்கல் என்றான் ஜயநம்ம ரெல்லாம்
உக்கார் சம்புமாலி உவந்தான் ஒன்றே குரங்கொன்றார் 

ஒரு குரங்கால் சம்புமாலி உட்பட நம் வீரர்கள் அனைவரும் இறந்தனர் என வருத்தத்துடன் சொல்பவர்கள் போல் தேவர்கள் கூறுகின்றார்கள். நிகரற்ற விறல் வீரனாகிய சம்புமாலி மடிந்தான் என்பதை காதில் நாரசம் போல் ஏற்று வெகுண்ட இலங்கை நாதன் படைகளுடன் சென்று பஞ்ச சேனாதிபதிகளையும் பொருதுமாறு பணித்தான். அணையை உடைத்துக் கொண்டு பாய்ந்து வரும் பெருவெள்ளம் போன்ற இலங்கைப்படைகளையும், சேனாதிபதிகளையும் காற்றின் மைந்தனான மாருதி தானொருவனாகவே நின்று நெடு நேரம் போராடிக் கொன்றழித்தான்.

இராவணனின் மைந்தனான அட்சகுமாரனை அனுமான் கல்லில் சந்தனம் அரைப்பது போல் தரையில் தேய்த்துப் பயங்கரமான முறையில் கொன்றான். அட்சயன் அழிந்தான் என்று அறிந்த போது இலங்கேசனின் அரண்மனையில் அழுகை ஓலம் வானை முட்டியது. மகனைப் பறிகொடுத்த இராவணனது பெரும் தேவி மண்டோதரி கணவனின் கால்களில் விழுந்து அழுது மாய்ந்தாள். தங்களின் மேலான தெய்வ வாழ்க்கையைச் சிதைத்து அடிமைகொண்டு ஏவல் செய்விக்கும் இராவணனின் குடும்பம் தங்கள் கண்முன்னே அல்லோல கல்லோலப் படுவதைக்கண்டு உள்ளுரப் போரானந்தம் கொண்ட தேவர்கள் பொங்கும் மகிழ்ச்சியைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அழுபவர் போல் நடித்தனர். அரண்மனைப் பெண்களுடன் உண்மையாகவே அழுது இரங்குபவர் போல் தசமுகனின் அடிகளில் வீழ்ந்து அழுது வானவர் திறமையாக நடித்தனர் என்பதை கவிச்சக்கரவர்த்தி செய்யுள் மூலம் படம்பிடித்துக்காட்டுகிறார்.

தாவரும் திரு நகர்த் தையலார் முதல்
ஏவரும் இடைவிழுந்து இரங்கி ஏங்கினர்
காவலன் கால்மிசை விழுங்து இரங்கிக் காவல் மாத்
தோவரும் அழுதனர் களிக்கும் சிந்தையர்

இராவண குமாரனின் இறப்பைக்கண்டு உள்ளுர மகிழ்ந்தாலும் வெளியில் அரண்மனைப் பெண்களுடன் சேர்ந்து தேவர்கள் போலியாக அழுகின்றனராம். உள் ஒரு நிலையும் புறம் ஒரு நிலையுமாக கூலிக்கழும் அமரர்களின் பரிதாப நிலையைப் பார்க்கும் போது வியப்பு ஏற்படுகின்றதல்லவா? தமிழினத்தில் இப்படி ஒரு கவி தோன்றியது பெருமைதான். ஆனால் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும் புரட்சிக்கவி பாரதிதாஸனும் சொந்தம் கொண்டாடிய திருநீறு பூசும் தமிழ் வேந்தனை தம் காவியம் முழுதும் அரக்கன் என்று இழிந்துரைத்திருப்பது வேதனை தருவதாகவும் உள்ளது.

தம்பலகாமம்.க.வேலாயுதம்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

5 comments:

 1. a laudable effort and a worthy contribution. rmshanmug

  ReplyDelete
 2. At this age a invaluble effot and a nice one
  sri .Thambalakaamam ka velayutham sir
  and congrats to Thangarajaa jeevaraaj sir
  my blog is honeylaksh.blogspot.com/
  plz visit and see NAAM THAMIZAR and drop ur comments sir

  ReplyDelete
 3. அன்பின் பதிவர்,

  இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு சம்மந்தமாக இங்கே சென்று விபரங்களை அறிந்து உங்கள் வருகையை உறுதிப்படுத்த அங்கே பின்னூட்டமொன்றை இட்டுவிடுங்கள். நீங்கள் வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பதிவராயின் நேரடி ஒளிபரப்புப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.

  அன்புடன்,

  இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - அமைப்புக் குழு

  ReplyDelete