Sunday, July 12, 2009

தமிழ் கேட்க ஆசை


{கட்டுரைத் தொகுப்பு}
வெளியீடு –பொற்கேணி கிராம அபிவிருத்திச் சங்கம், தம்பலகாமம்.

திரு. தம்பலகமம் க. வேலாயுதம் அவர்களின் தமிழ் கேட்க ஆசை என்ற கட்டுரைத் தொகுப்பை வாசித்த போது, எனக்கு விநோத மஞ்சரி என்ற நூலே ஞாபகத்திற்கு வந்தது. தமிழ் கேட்க ஆசை என்ற கட்டுரைத் தொகுப்பில் முப்பது கட்டுரைகள் அடங்கியுள்ளன. அன்றைய நிலையில் விநோத மஞ்சரிக் கட்டுரைகள் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று இன்றைய காலகட்டத்தில் இவரது கட்டுரைகள் முக்கியமானதும் அவசியமானதுமே. இவரது கட்டுரைகளில் பல இந்த மண்ணின் - இவரது மண், தம்பலகாமம் மண்ணின் வரலாறுகள் கூறப்பட்டிருக்கின்றன. சில கட்டுரைகள் ஆய்வை நோக்கி இருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் அதன் தன்மையில் தனித்துவமாகவே இருக்கிறது. திறமையாக எழுதப்பட்டிருக்கிறது.

வாசிப்பு ஒருவனை அறிவாளியாக்கும் என்பதற்கு தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள் ஒரு உதாரணம் என்றால் அது மிகையாகாதது மட்டுமல்ல பொய்யுமல்ல. தம்பலகாமம் கிராமம் எத்தகைய வளங்களையுடையது என்பதை அறிந்தவர்கள்தான் அறிவார்கள். கல்வி வசதி குறைந்த, நூல் நிலையங்களோ, நூல் சந்தை அகங்களோ அற்ற அக்கிராமத்தில் (தன் தேடல்மூலம் நூல்களைத்தேடி வாசித்து) வாழ்ந்த க.வேலாயுதம் அவர்கள் அதனூடாக தன் கலை இலக்கிய உணர்வுகளை வெளிக்கொணர்வதில் மற்றவர்களைவிட எந்த வகையிலும் குறைந்தவர் அல்ல என்பதை, தமிழ் கேட்க ஆசை என்ற நூலின் மூலம் நிரூபித்துள்ளார்.
படிக்கவேண்டிய வயதில் நடிப்பில் தடம்பதித்து இசையால் ஈர்க்கப்பட்டு சிறந்த ஆர்மோனியம் வாசிப்பவர் என்ற பெயரைப்பெற்றார். கைவைத்தியத்தையும் முறையே கற்ற சிறந்த வைத்தியரும் கூட. கல்வி என்பது பள்ளிக்குள் மட்டும்தான் என்ற நிலைக்கு அப்பால் கண்டதும் கற்கப் பண்டிதனாவான் என்ற பழமொழிக்கமைய பள்ளியின் படியறியாப் பல அறிஞர்களை நாம் கண்டிருக்கிறோம். இந்த வரிசையில் கண்டதையும் கற்றுப் பண்டிதரானார். தன் மண்ணின் இயற்கை வனப்பில் தன்னையே மறந்து லயித்துவிடுவார். அந்த லயிப்பில் உள்ள உணர்வுகளின் உந்துதலால் பல பாடல்கள் வெளிவந்தன. பத்திரிகை சஞ்சிகைகளில் தன் பேனாவைப் பதித்தார். அந்தக் காலத்திலேயே இந்திய சஞ்சிகையான குமுதத்திற்குக் கதைகள் எழுதிச் சன்மானம் பெற்றுள்ளார் என்றால் அவரின் எழுத்தாற்றலைப்பற்றி நாம்
கூறவேண்டியதில்லை.

ஒரு பத்திரிகை ஊடகவியலாளனாக தன் பணியைச் செய்தபோதும், தன் கிராமத்து மக்களின் பல கஸ்ரங்களை தன் எழுத்தாற்றலால் நிவர்த்தி செய்துள்ளார். தன் கிராமத்தின் மகிமையை - வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர அவர் தயங்கியதில்லை. பல்வகைப்பட்ட கட்டுரைகளை வீரகேசரிக்கு எழுதியுள்ளார்.

இவரிடத்தில் போற்றவேண்டிய ஒரு சிறப்பு, தான் பிறந்த மண்ணை மறந்தாரிலை. திருக்கோணமலையில் பிறந்து, இந்தியாவில் பெரும் தமிழ்த் தொண்டு செய்த கனகசுந்தரம்பிள்ளை, சரவணமுத்துப்பிள்ளை ஆகிய இருவரும், தம் பெயருக்கு முன்னால் தாம் பிறந்த ஊரான திருக்கோணமலையை குறிப்பது போன்றே இவரும் தம் பெயருக்கு முன்னால் தம்பலகமம் என்பதை எழுத மறந்தாரில்லை.

நீண்டகாலமாகப் பத்திரிகை துறையில் பணியாற்றிய போதும், அவர் உள்ளத்தில் ஒரு குறை - வேதனை இருந்து கொண்டே வந்தது. தான் இதுவரை எழுதிவந்த கட்டுரைகள் வருங்கால சந்ததிக்குக் கிடைக்கும் வகையில் ஒரு ஆவணமாக - நூலாக உருப்பெறவில்லையே என்பதே அது.

தமிழ் கேட்க ஆசை என்ற இக்கட்டுரைத் தொகுப்பு அவரது நீண்டநாளைய கனவை - ஏக்கத்தை நிறைவு செய்துள்ளது. இப்பணியில் முன்னின்று, உழைத்த அவரது ஊர்மக்களான தம்பலகாமம் பொற்கேணி கிராம அபிவிருத்தி சங்கமும் அதன் தலைவருமான திரு.க. திருச் செல்வமும் போற்றப்படவேண்டியவர்களே. அனைவரையும் மனமார வாழ்த்துகின்றேன்.

நன்றி

கலாவினோதன்,கலைவிருதன்,கலாபூஷணம்
த.சித்தி அமரசிங்கம்.


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment