Monday, February 09, 2009

நாடகக் கலை அருகி,அழியும் நிலை

 தம்பலகாமம்இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பழமைஉடைய தமிழ் உழவர்களின் வாழ்விடம் தம்பலகாமம். இங்கு சங்கீதக்கலையும், ஆயுள்வேத வைத்தியக் கலையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து வளர்ந்தோங்கி வந்தன.

பிரபல சுதேச ஆயுள் வேத வைத்தியர்களில் பெரும் பாலானோர் நாட்டுக்கூத்து நாடகநடிகர்களாக விளங்கினர். முன் நடந்த நாட்டுக்கூத்திலும் பின் நடைபெற்ற நாடகங்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர்களின் பெற்றோர் இட்ட பெயர்கள் அடியோடு மறைந்து அவர்கள் நடித்துப் புகழ் ஈட்டிய நாடகப்பாத்திர பெயர்களே இன்றும் பிரசித்தமாக வழங்கப்பட்டு வருவது மேற்படி கலைகள் தம்பலகமத்தில் செழித்தோங்கி வளர்ந்து வந்ததற்குச் சிறந்த சான்றுகளாகும்.

தம்பலகாமம் கரைச்சையில் வசித்து வந்த பொன்னையா என்பவர் சிறுத் தொண்டர் நாடகத்தில் நடித்து பார்வையாளர் மனதில் பக்தி உணர்வை ஊட்டியவர். ஆகவே இவரை சிறுத்தொண்டர் அல்லது தொண்டர் பொன்னையா என்றே மக்கள் குறிப்பிட்டனர். இவரது நான்காவது மகன் பொ.கணபதிப்பிள்ளை மாவட்டத்தில் சிறந்த மிருதங்க வித்துவான். அரங்கேற்ற மேடைகளில் மிருதங்கம் வாசிக்க திரு.கணபதிப்பிள்ளையே அழைக்கப்படுவார்.

நாயன்மார்திடலில் காளியப்பு, இவர் அரிச்சந்திரன் நாடகத்தில் விசுவாமித்திரராகத் திறம்பட நடித்து ரசிகர்களின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டவர். நாடகம் பார்க்கின்றோம் என்பதையும் மறந்து மேடையில் இவர் ஆர்ப்பாட்டமாகத் தோன்றிய போது அதைப்பார்க்க சகியாத பார்வையாளர்கள் கல் எறிந்து சிறு குழப்பத்தையே உண்டாக்கினர். அன்றிலிருந்து இவரது காளியப்பு என்று பெற்றோர் இட்ட பெயர் மறைந்து விசுவாமித்திரர் என்றே அழைக்கப்பட்டார்.

நாயன்மார்திடலில் திரு.பா.வேலுப்பிள்ளை இவர் சிறந்த ராஜபாட் நடிகர்.  கண்ணகி நாடகத்தில் கோவலனாகவும் சத்தியவானில்யமனாகவும் நடித்துப் பெரும் புகழ் ஈட்டினார். நெடியவலிய ஆகிருதியான தோற்றமுடைய இவர், கருமை உருவுடன் யமனாக தோன்றி பார்வையாளர் மனங்களில் பயத்தை ஊட்டினார். இவரை மக்கள் மறைமுகமாக யமன் என்றே அழைத்து வந்தனர். இவர் ஒரு கைராசிக்கார ஆயுள்வேத வைத்தியர், ஆர்மோனிய வாசிப்பாளர். இவரது தந்தையாரும் சுதேசவைத்தியரே இன்னும் சாமியார், மந்திரியார், சீதை போன்ற நாடகப்பாத்திர பெயர்களுடன் விளங்கிய பலர் இங்கு உள்ளனர்.

சங்கீதக் கலையும் வைத்தியக் கலையும்
தம்பலகமத்தில் வைத்தியக்கலை, நாட்டுக்கூத்து, நாடகம்,  நாட்டியம் போன்ற கலைகளும் இணைந்து வளர்சியடைந்து வந்தன. கர்நாடகசங்கீதத்தை நன்கு தெரிந்தவர்கள் இங்கு வாழ்ந்து வந்தனர். நெல்விளைவிக்கும் உழவர்களும் நோய்தீர்க்கும் மருத்துவர்களும் அரங்கேற்று மேடைகளில் தோன்றி நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தனர். தம்பலகமத்துச் சங்கீதக்காரர்களுக்கு தென்னிந்திய ஆர்மோனிய மிருதங்க வித்துவான்களின் வரவு வரப்பிரசாதமாக அமைந்தது. இவர்களிடம் சங்கீதம் கற்றவர்கள் திறமை உடையவர்களாக உள்ளனர்.

சுமார் கால் மைல்களுக்கும் குறைந்த இடைவெளியில் வட்டவடிவமாக சங்கிலித் தொடர் போல் நெல்வயல்களுடன் தென்னஞ்சோலையாக இருபத்திரண்டு ஊர்களைக் கொண்ட ஊர்த்தொகுப்பே தம்பலகமம். இந்த ஊர்த் தொகுதிகளுக்கு மத்தியிலுள்ள கள்ளிமேட்டு ஆலையடி மைதானமே நாட்டுக்கூத்து நாடகங்கள் அரங்கேற்றும் களமாக நீண்ட காலம் இருந்து வந்தது. சுற்றியுள்ள ஊர்களில் தயாராகும் நாடகங்கள் ஆலையடி மைதான மேடையில்தான்  அரங்கேற்றம் செய்யப்பட்டு வந்தன. தை மாதம் பிறந்தும் பழக்கப்பட்ட நாடகங்கள் கள்ளிமேட்டு ஆலையடி மைதான அரங்கேற்று மேடையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மேடையேறும். தம்பலகாமம் ஊர்களில் இருந்து மட்டும் அன்றி மாவட்டத்தின் பல ஊர்களில் இருந்தும் திரளான மக்கள் வாகனங்களில் வந்து நாடகம் பார்த்து மகிழ்வர்கள். சிப்பித்திடல், நாயன்மார்திடல், வைரத்தடி ஆகிய மைதானங்களில் பழக்கப்படும் நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.

 கோயில் குடியிருப்பில் டிக்கட் விக்கப்பட்டு நாடகங்கள் நடத்தப்பட்டு வந்தன. பல்லாயிரக்கணக்கான ஆண் பெண்ரசிகர்கள் இருந்தும் நாடகம் பார்த்து மகிழ்ந்த இடங்கள் இன்று பழடைந்து இருக்கின்றன. நாடகம் பழக்குவோரும் இல்லை. அரங்கேற்று வாரும் இல்லை திரைப்படங்களின் வரவுதான் இதற்குக் காரணம் என்று தெரிகிறது. சினிமாப்படங்கள் தயாராகும் தமிழ் நாட்டிலே நாடகக்கலை போற்றிவளர்க்கப்பட்டு வருகின்றது. சினிமாவுக்கு நாடகம் தான் தாய், பயிற்சிக்களம் என்றும் மதிக்கின்றார்கள். எனவே தம்பலகமத்தில் தொன்று தொட்டு வளர்ந்தோங்கி வந்த முத்தமிழின் ஓர் அங்கமான நாடகக் கலைக்குப் புத்துயிர் அளித்து முன் போல் வளர்ந்தோங்கச் செய்வது இன்றைய இளம் கலைஞர்களின் இன்றியமையாத கடமையாகும்.

தம்பலகாமம்.க.வேலாயுதம்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment