Sunday, September 21, 2008

இரு பிரிவுகளாக அமைந்த ஆலய வழிபாடு, தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயம்.....

Thampalakamam
தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயிலில் இரு பிரிவுகளாக அமைந்த வழிபாடுகள் காலங் காலமாக நடைபெற்று வருகின்றன.வரலாற்றுப் புகழ்மிக்க இக்கோயிலை, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னன் கட்டினான் என்றும் தம்பலகாமத்திற்கு மேற்கேயுள்ள "ஸ்வாமிமலை' என்னும் இடத்திலிருந்து ஆதிகோண நாயகர் திருவுருவையும் ஏனைய பரிவாரத் தெய்வங்களையும் மேளதாளத்துடன் கொண்டு வந்து இக்கோயிலில் பிரதிஷ்டை செய்தான் என்றும் திருகோணாசலப் புராணம் கூறுகிறது.
.
குளக்கோட்டு மன்னனால் திருகோணமலையில் நிறுவப்பட்ட திருக்கோணநாயகர் ஆலயம், பறங்கியரால் அழிக்கப்பட்ட பிறகு, சிதைந்து போன இவ்வாலய வழிபாட்டு முறையைச் சீர் செய்து இந்தியா சென்று தொழும்பாளர் குடும்பங்களை அழைத்து வந்து திருகோணமலை மாவட்டத்திலுள்ள பல இடங்களிலும் குடியமர்த்தி அவர்களுக்கு மானியமாக வயல் நிலங்களையும் வழங்கி, ஆதி கோணநாயகர் கோயில் வழிபாடு குறைவின்றி நடைபெற இம்மன்னனே காரணமாவான் எனத் திருக்கோணாசலப் புராணம் சான்று பகருகிறது.

Thampalakamam
தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயிலில் இரு பிரிவுகளாக அமைந்த வழிபாடுகள் காலங் காலமாக நடைபெற்று வருகின்றன. இக் கோயிலில் நடைபெறும் நித்திய பூசை, அபிஷேகம், விழா போன்றவை உருவ வழிபாடாகும். கந்தளாய்க் குள மகா வேள்வி, தம்பலகாமம் நாயன்மார் திடலில் நடைபெறும் மடை வைபவம் "கள்ளிமேடு ஆலையடியில் நடைபெறும் பத்தினித் தேவி விழா' மாகாமத்தில் இடம்பெறும் மூர்க்காம்பிகா விழா போன்றவை வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் திறந்த வெளிச் சுற்று ஆராதனைகள் ஆகும். இவை அருவ வழிபாடாகும். இவ்வழிபாடுகள் குறைவின்றி சீராக நடைபெற வேறு வேறான ஆராதனைகளும் விதி முறைகளும், பத்ததிகளும் ஊழியம் புரியத் தொழும்பாளர்களும் உள்ளனர். இக் கிரியைகளை மேற்கொள்ள "கட்டாடியார்' என அழைக்கப்படும் பூசகர்களும் உள்ளனர்.
Thampalakamam
இவைகள் அனைத்தும் சொன்ன விதி முறைப்படி தவறாமல் நடைபெற வேண்டும் என்றும் இவற்றில் குறைபாடுகள் நேரின் "நாட்டு மக்கள் விளைவழிந்து துன்பமுற்று சோர்வார்கள் என்றும் கோணேசர் கல்வெட்டு கூறுகிறது.
.
வெயில், மழை வேண்டி பட்டு நேர்ந்து கிரிகை, ஆராதனைகள் செய்தால் அவைகளை அற்புதமாக அருளும் கோணேஸ்வரர் வழிபாட்டுக்கு இருபாகை முதன்மைக் குருக்கள்மார் இன்றியமையாதவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். ஊர் மக்கள் வேண்டுகோளுக்கு அமைய இக் குருக்கள்மார் ஆதிகோணநாயகருக்கு சிவப்புப் பட்டுச் சாத்தி செய்த கிரியைகள், ஆராதனைகள் அதிசயத்தக்க வகையில் வெயிலைத் தந்ததை மக்கள் அனைவரும் நன்கறிவர். இது போலவே மழையின்றி பயிர்கள் வாடியபோது பச்சைப் பட்டுச் சாத்தி செய்த கிரிகை, ஆராதனைகள் வேண்டிய அளவு மழையைத் தந்ததையும் மக்கள் மறந்து போக நியாயமேயில்லை. இக் குருக்கள்மார் மகுடாகம முறையிலேயே தமது ஆராதனைகளை மேற்கொண்டனர். இன்று இம்முறையைப் பயின்றவர்கள் மிக அரிதாகவே உள்ளனர். குறிப்பாகச் சொல்லப் போனால் இன்று தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயிலில் சிவாகம முறையிலேயே வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
.
மாறாத புனல் பாயும் திருக்குளத்தையும் வயல் வெளிகளையும் வருந்திச் செய்த மாமன்னன் குளக்கோட்டன், தான் தொடங்கி வைத்த கோணேஸ்வரர் வழிபாடு என்றும் தடைப்படாமல் நடைபெற வேண்டும் என்ற உயர் நோக்கில், தன் குல குருவான வசிட்டரிடம் "நெல் விளைவிப் போர் வேண்டும் போது வெயில் மழையை அருளும் இரங்கிய நிலையில் இறைவனை வடிவத்துத் தருமாறு வேண்டினான்.
.
மன்னனின் வேண்டுகோளை செவி மடுத்த வசிட்ட பெருமான், விவசாயிகள் வேண்டும் போது மழை வெயிலை, அருளும் வகையில் "வலக்காலைத் தூக்கி இரு கரங்களுடன் நின்ற நிலையில், ஆதி கோணநாயகரின் திருவுருவை "நரவடிவில்' அமைத்து உருவ அருவ, வழிபாடாக மகிடாகம கிரிகை முறைகளையும் ஆக்கி அரசனுக்கருளினார் எனத் திருக்கோணாசலப் புராணம் கூறுகிறது.
.
தொன்மைக் காலத்திலிருந்து இக் கோயிலில் ஒரு வரையறையறையான ஒழுங்கு முறையில் மேற்கொள்ளப்பட்ட பூசை முறைகள், ஆண்டுத் திருவிழாக்கள், வேள்வி, மடை போன்ற கிராம தேவ பூசைகள் மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து இன்று மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று வருகிறது. இக் கோயிலில் கடமையாற்றும் சகல தொழும்பாளர்களும் சமூகம் தந்து தத்தமது பொறுப்புக்களைக் குறைவின்றி மேற்கொள்ள வேண்டும் என்றும் மகுடாகம முறையிலேயே சகல கிரிகைகளும் நடைபெற வேண்டும் என்றும் இம்முறை அருகியிருந்தால் இந்தியாவிலிருந்தாவது இந்த வழிபாட்டு முறை தெரிந்த அர்ச்சகர்களை அழைத்து வந்து அவர்களூடாக இவ் வழிபாட்டு முறையை மீண்டும் புத்துயிர் பெற்றெழச் செய்ய வேண்டும் என்றும் மக்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.
.
ஆதி கோண நாயகப் பெருமான் அருளால் தற்பொழுது இக் கருத்துக்களை நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு நல்ல சூழ்நிலை தோன்றியுள்ளது. தற்பொழுது நடைமுறையிலுள்ள தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயில் தர்மகர்த்தா சபையினர் இக் கருத்துக்களை பெரிதும் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக பொதுமக்கள் தொழும்பாளர்கள், தர்மகர்த்தா சபைத் தலைவர், உப தலைவர் செயலாளர் உட்பட உறுப்பினர்கள் சிலரும் கூடிய ஒரு கருத்தரங்கு ஆலய மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இவ்வாண்டுத் திருவிழா நடைபெற்ற பின்னர் மக்கள் கருத்தரங்குகளைக் கூட்டி இக்கோயிலில் பழைமையில் பேணப்பட்ட பொருள் பொதிந்த நன்மை பயக்கக் கூடிய வழிபாட்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வருவதெனவும் ஆதியில் இருந்ததைப் போல ஆதி கோண நாயகர் திருவுருவை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்வதெனவும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இது எமது கிராமத்திற்கு மட்டுமின்றி முழு நாட்டுக்கும் நன்மை பயக்கும் ஒரு நற்செயலாகும் என்பதில் சிறிதளவேனும் ஐயமில்லை.

{வீரகேசரி நிருபர்}
{06.07.2008 வீரகேசரி வாரவெளியீட்டில் அருள் சுரக்கும் திருத்தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயம் எனும் தலைப்பில் வெளியான கட்டுரை }

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

 1. காலை வணக்கம்!
  கவித்தேநீர் அருந்த
  என் வலை
  வருக!
  தேவா..

  ReplyDelete
 2. வழமையான பழய வழிபாட்டு முறையே நன்மை தரும். முன்னோர்களெல்லாம் மூடரகளல்ல, முற்றும் அறிந்தோரகள் என்பது கருத்து.அவர்கள் நல்ல வழியே காட்டியுள்ளனர். நன்றி

  ReplyDelete