Wednesday, April 17, 2013

கோணேசர் பிறந்தார் - பகுதி 2

தம்பலகாமம்  ஆதி கோணைநாயகர் கோயில் பதிகம்



அன்னையின் வழிபாட்டுக் கருந்துணையாய்
அமைய வேண்டும் என்பதற்காய்
தென் கைலை நாதனைப் பெயர்த்தெடுக்க
தென்னவன் இராவணன் முயன்றபோது
வலக்காலைத் தூக்கி மன்னவனை
வதைத்த காட்சிதனை மனத்திற் கொண்டு
வடிவமைத்தார் கோணேசர் திருவுருவை
மகுடாகம முறையையும் சேர்த்துக் கொண்டார்.


நெல் விளைவிப்போர் நேரும்போது
நிமலன் அருளால் மழை வெயில்
சொல் தவறாமல் வருவதற்குத்
தூயதாய் வழிமுறை செய்த மேலோன்
மன்னவன் அருகே சென்று
மாமுனி வசிட்டர் சொல்வார்.
‘நன்கருள் புரியும் நல்ல
நாயகன் தந்தேன்’என்றார்.

கோணநாயகர் திருவுருவை
கும்பிட்டு வசிட்டர் மேலும் சொல்வார்.
‘வேண்டும்போது மழை வெயிலை
விரும்பித் தரும் இத்திருவுருவை
ஆண்டில் முதியோன் ஆக்கித் தந்தேன்
அரசே! ஏற்று அருள்க’ என்றார்.
ஆகா!என்று அரசர்பிரானும்
அதனை ஏற்று அகமகிழ்ந்தான்.

ஆலயவழிபாடுகள் குறித்து
அருந்ததி கொழுநன் மேலும் சொல்வார்
‘வேந்தே! உன்றன் விருப்பத்தை
விரைந்து நிறைவேற்றுகின்ற
சாந்தம் தவளும் உமை பாக
தரணி போற்றும் கோண நாயகரை
வேண்டிப் பெறலாம் மழை வெயிலை
விதிமுறைகளும் உண்டு’என்றார்.

மகுடாகம முறை மூலம்
வருடம் ஓர்முறை ஆண்டுவிழா
தினமும் மும்முறை தினப்பூசை
செய்வதோடு ‘வேள்விகளை’
ஆண்டுக்கொரு முறைசெய்து
அடுத்த ஆண்டில் ‘மடை’ வைத்து
கிராம தேவதை பூசைகளைக்
கிரமமாகச் செய்துவரின்

வேண்டும் போது மழை வெயிலை
விரும்பிப் பெறலாம் வேந்தே!கேள்!
கோணநாயகர் அருள் வேண்டின்
குவலயத்தில் வழிகள் உண்டு
பாசு பதர் வழிநின்று
பக்தியோடு வழிபாடு
இயற்றி இவ்வுலகத்தில்
இன்பமாக வாழலாம்.

விதிமுறைகள் தவறாமல்
விரும்பும்போது மழை வெயிலை
வருவிக்கும் வழிகள் சொன்னேன்
மன்னா! இதனை மறவாதே!
வேள்வி மடைகள் சிறப்போடு
வேண்டும்போது செய்வதற்கு
தொழும்பு செய்யும் தொண்டர்களை
தொகையாய் இங்கே அமர்த்திவிடு.

கந்தளாய்க் குளத்து மகா வேள்வி
நாயன்மார் கோயில் வேள்விமடை
கல்வி மேட்டில் கண்ணகிக்கு
காவியம் போற்றும் விழாச் செய்து
மாகாமத்தில் வேள்வி மடை
வருடம் ஓர் முறை என்றபடி
விதிமுறையாகச் செய்து வந்தால்
வேண்டும் போது மழை வெயிலை

பெறலாம் அரசே என்று அந்த
பெரியோன் வசிட்ட மாமுனிவன்
கூற அரசன் குதூகலமாய்
குதித்தெழுந்து மா முனிவன்
பாதம் பற்றி பரவசமாய்
பக்தியோடு பகருகின்றான்
வையகம் போற்றும் வழிபாட்டை
வடிவமைத்தாய் வாழ்க என்றான்.

ஆதி கோண நாயகர்
அவதரித்த வரலாற்றை
ஆதி யோடந்தமாய்
அறியத்தந்தேன் அனைவரும்
நீதி தவறா நெறிமுறையில்
நிதமும் பணிதனைச் செய்வாரேல்
நாடு சிறக்கும் நானிலத்தோர்
நலமாய் வாழ வழி பிறக்கும்.

வருடம் ஓர்முறை வேள்விகளும்
மற்ற வருடம் மடைகளுமாய்
தவறு இன்றிச் செய்து வந்தால்
தமிழர் தேசம் தழைத் தோங்கும்
கிராம தேவதை பூசைகளை
கிரமமாகச் செய்துவரின்
நாடு சிறக்கும் நம்மவர்கள்
நலமாய் வாழ வழி பிறக்கும்.

வே .  தங்கராசா

உசாத்துணை
1. திரிகோணாசலப் புராணம்
2. கோணேசர் கல்வெட்டு
3. கந்தளாய்க் குளக்கட்டுக் காவியம்






இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment