Wednesday, April 10, 2013

தம்பலகாமம் தந்த சிறந்த சிந்தனையாளன் அமரர் பண்டிதர் ஐயாத்துரை சரவணமுத்து

பண்டிதர் ஐயாத்துரை சரவணமுத்து

‘கண்ணகிக்கு விழா எடுக்கும் கள்ளி மேடு’ எனக் கவிஞர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்களால் பெரிதும் புகழ்ந்து பாடப்பட்ட கள்ளிமேடு வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த ஒரு கிராமமாகும். தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் வெளிச்சுற்று வழிபாடுகளின் முக்கிய தலமாகிய ‘ஆலையடி வேள்வி வளாகம்’ இத்திடலிலேயே அமைந்துள்ளது.

தம்பலகாமத்தில் மிகப்புகழ்பெற்ற ஆயுள்வேத வைத்தியர்களும், மிகச்சிறந்த கலைஞர்களாகிய அண்ணாவிமார்களும் இத்திடலைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களேயாகும். குறிப்பாக இருகரங்களாலும் ஆர்மோனியம் வாசிக்கும் அற்புதக்கலைஞராகிய திரு. கணபதிப்பிள்ளை அண்ணாவியார் கலாபூசணம் லயஞானமணி திரு. சண்முகலிங்கம், அவரது தம்பியாகிய திரு மகாலிங்கம், ‘சண்இசைக்குழுவின்’ ஸ்தாபகர் திரு. முருகதாஸ் ,தலைசிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞர் திரு.நாகராசா ,சிற்பக்கலைஞர் திரு.கிருபானந்தன் ஆகியோர் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்களே.

இத்தகைய சிறந்த கள்ளிமேட்டில் கோணாமலை ஐயாத்துரை என்பவருக்கும் அவரது தர்மபத்தினி தங்கத்திற்கும் இரண்டாவது பிள்ளையாகப் பிறந்தவர்தான் அமரர் பண்டிதர் ஐயாத்துரை சரவணமுத்து அவர்கள்.

ஆரம்ப காலங்களிலேயே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய அமரர் சரவணமுத்து அவர்கள் தம்பலகாமத்திலிருந்து தமிழகம் சென்று அங்கு கல்வி கற்று ஆங்கிலத்திலும் புலமைபெற்று பண்டிதராகப் பட்டம் பெற்று தாயகம் திரும்பினார்.
இவர்  தனது மூத்த சகோதரியின் மகளான செல்வி ஆறுமுகம் திலகவதியை தமிழகத்திற்கு அனுப்பி பட்டதாரியாக்கி கணித, விஞ்ஞான ஆசிரியையாக பயிற்றுவித்து திருகோணமலை சண்முகா இந்துமகளிர் கல்லூரி அதிபராகக் கடமையாற்றவும் செய்தார். தம்பலகாமத்தின் முதல் பெண்பட்டதாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமரர் பண்டிதர் ஐயாத்துரை சரவணமுத்து அவர்கள் விபுலானந்த அடிகளிடம் கல்விகற்கும் அரும் பாக்கியத்தைப் பெற்றவராவர். இந்த காலப்பகுதியில் ஒருசமயம் துறவியாகத் தொண்டு செய்யும் எண்ணமும் இவர் உள்ளத்தில் உதித்தது. தந்தை ஐயாத்துரை அவர்கள் கல்லடியில் சிவானந்த ஸ்வாமிகளை சந்தித்து தன்குடும்ப நிலையை விபரமாக எடுத்துரைத்து இந்த எண்ணத்தை வேருடன் கழைந்தார். இதன் பிறகு திருகோணமலை இராமகிருஷ்ணமிசன் இந்துக் கல்லூரியில் தமிழ்துறைப் பேராசானாகக் கடமையாற்றினார்.

1950 களில் தமிழகத்திலிருந்து வருகைதந்த பேராசிரியர் மு.வரதராசன் அவர்களை திருகோணமலை இராமகிருஷ்ணமிசன் இந்துக்கல்லூரியில் வரவேற்றுச் சிறப்பித்த போது இவ்விழாவுக்கு அமரர் பண்டிதர் ஐயாத்துரை சரவணமுத்து அவர்களே தலைமை தாங்கினார். இவ்விழாவில் இவராற்றிய தலைமையுரை சபையிலிருந்த அனைவரையும் வியப்பிலாழ்த்தியது. குரல் வளமும் சுவைகுன்றாத இலக்கியக் குறிப்புகளும் எடுத்துக் கொண்ட விடயத்தை சுருக்கமாகவும் சுவையாகவும் சொல்லும் ஆற்றலும் இவரிடம் இயல்பாகவே இருந்தன.

இவரது இல்லத்தில் ஒரு பெரிய நூலகமே இருந்தது. தன்னை நாடிவரும் இலக்கிய ஆர்வலர்களுக்கு இந்த நூலகத்தை இலவசமாகப் பயன்படுத்தும் உரிமையை வழங்கியிருந்தார். அமரர் தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்களும் ,கலாபூசணம் லயஞானமணி திரு.க.சண்முகலிங்கம் அவர்களும் இந்த நூலகத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.

திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினராகிய திரு.சிவபாலன் அவர்களுடன் இணைந்து தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலைய பரிபாலன சபையை உருவாக்கி கோயிலைச் சிறப்பாக நடத்தி வந்தார். அடப்பன்மார் ,கங்காணம், வைராவியார் ,காரியப்பர்,மறிகாறத் தொழும்பாளர்கள் புலவன், பாட்டுவாளி, காப்புக்கட்டி போன்ற தொழும்பாளர்களை ஒருங்கிணைத்து குளக்கோட்டு மன்னனின் ‘கல்வெட்டு’ப்படி தொழும்புகளையும் சீர்செய்து வேள்விகளையும் நடத்தி இராசகோபுரத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவபாலன் அவர்களின் உதவியுடன் கட்டுவித்தார்.

இவரது அயராத முயற்சியின் காரணமாக ஆனி உத்தர தினத்தன்று தபோவன சச்சிதானந்த ஸ்வாமிகளின் உதவியுடன் கரிசனங்களை ஆலயத்துள் சென்று வணங்க ஆவன செய்தார். இது இவர் காலத்தில் இடம்பெற்ற அரும் பெரும் செயலாகும்.

வீரகேசரிப் பத்திரிகையில் தொடராக ‘கம்பன் காவியம்’ என்ற தலைப்பில் எழுதிவந்தார் எனச் சொல்லப்படுகிறது. தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வரலாறு என்ற இவரது ஆய்வுநூல் ஒன்றும் வெளிவந்துள்ளது.

தம்பலகாமத்தின் மிகச்சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவராகத் திகழந்த அமரர் பண்டிதர் ஐயாத்துரை சரவணமுத்து அவர்கள் தனது இறுதிகாலம்வரை தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயத்தலைவராக இருந்து அருந்தொண்டாற்றியமை இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.


வே.தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment