Thursday, April 04, 2013

கலாவிநோதன் கலாபூசணம் அமரர் சித்தி அமரசிங்கம்

சித்தி அமரசிங்கம்

கலாவிநோதன் கலாபூசணம் சித்தி அமரசிங்கம் அவர்கள் திருகோணமலையில் ஒரு சாதாரண குடும்பத்தில் கலைஞர் திரு.தம்பிமுத்து என்பவரின் மகனாக 1934 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை கலைஞர் தம்பிமுத்து அவர்கள் நாடகங்களை நெறிப்படுத்துவதிலும் ஒப்பனை மற்றும் ‘மேடையலங்காரம்’ போன்றவற்றிலும் தலைசிறந்து விளங்கினார். இவர் தயாரித்த பல நாடகங்கள் தம்பலகாமம் கோயில்குடியிருப்பில் மேடையேற்றப்பட்டு அமோக ஆதரவைப்பெற்றன.


கலாபூசணம் அமரர் த.சித்திஅமரசிங்கம் அவர்கள் 1957 ஆம் ஆண்டில் இலங்கை எஸ்.எஸ்.ஸி.ஆங்கிலப் பரீட்சையில் தேறியதுடன் 1957 ஆம் ஆண்டில் தமிழகம் சென்று சென்னை மெற்றிகுலேசன் பரீட்சையிலும் தேறினார்.

ஐந்து வயதிலிருந்தே இவர் தந்தையின் நாடகங்களில் நடிக்கத்தொடங்கி விட்டார் எனச் சொல்லப்படுகிறது. 1952 ஆம் ஆண்டு தொடக்கம் பாடசாலை மட்டத்தில் பாடசாலை நாடகங்களை தயாரித்தும் நெறிப்படுத்தியுமுள்ளார். சர்வதேச சிறுவர் தினத்தில் ஸ்ரீஇராமகிருஷ்ணமிசன் இந்துக்கல்லூரியில் சித்திஅமரசிங்கம் மேடையேற்றிய நாடகம் பலராலும் பாராட்டப்பட்டது. இதே கல்லூரியில் தொடர்ந்து மேடையேற்றப்பட்ட ‘சோக்கரடீஸ்’ ‘தொழிலுக்குத் தொழில்’ ஆகய நாடகங்கள் இவருக்குப் பெரும் புகழைத்தந்தன. இக்காலப்பகுதியில் இலங்கை வானொலிப் புகழ் (சானா) சண்முகநாதன் அவர்களின் பாராட்டுதலைப் பெற்றார்.

1958ல் திருகோணமலையில் ‘கலைவாணி நாடகமன்றம்’ ஆரம்பிக்கப்பட்டது. இம்மன்றத்தில் இணைந்து கொண்டு இம்மன்றத்தால் மேடையேற்றப்பட்ட அனைத்து நாடகங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார்.1960களில் ‘அமரன் ஸ்கிறீன்’ என்றொரு நாடகமன்றத்தை உருவாக்கி ‘குத்து விளக்கு’ என்ற நாடகத்தை மேடையேற்றினார். இந்தநாடகமன்றத்தால் மேடையேற்றப்பட்ட பல நாடகங்கள் இவர் நடிப்பாற்றலை வெளிப்படுத்தின.

நாடகவிற்பனர்களான மௌனகுரு சிதம்பரநாதன் ஏ.ரி.பொன்னுத்துரை ஜெயசங்கர் சிங்களக் கலைஞர்களான வசந்த பண்டார, ஜயல்ல றோகண ஆகியோர்களது நாடகப்பட்டறைகளிலும் கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு பயிற்சி பெற்றுள்ளார்.

1969களில் சித்தி அமரசிங்கத்தின் கவனம் வில்லிசையில் திரும்பியது.1991இல் ‘கலாவிநோதன் வில்லிசைக்குழு’ என்ற பெயரில் பல வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

1978களில் ஈழத்து திரைப்படத்துறையிலும் இவர் தடம் பதித்துள்ளார்.இதே ஆண்டில் ஈழத்தில் வெளியாகிய ‘தென்றலும் புயலும்’ என்ற திரைப்படத்தில் நகைச்சுவைப் பாத்திமேற்று நடித்துப் பலரதும் பாராட்டுதலைப் பெற்றுள்ளார்.

1947இல் ‘ஈழத்து இலக்கியச் சோலை’ என்ற அமைப்பை உருவாக்கி இவற்றினூடாக ஏறக்குறைய 20 பதற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். ஈழத்தில் இலைமறை காயாக இருந்த எழுத்தாளர்களை வெளியுலகுக்கு அறிமுகம் செய்த பெருமை இவரை சாரும். வெளியிடும் புத்தகங்களை வீடுகள் அலுவலகங்கள் பாடசாலைகள் தோறும் சென்று விற்பனை செய்வதில் வல்லவராக இருந்தார்.

திருகோணமலையில் சிவயோக சமாசத்தை ஸ்தாபித்த ஸ்ரீமத் ஸ்வாமி கெங்காதரானந்தாஜி அவர்களின் முக்கிய சீடர்களில் ஒருவராக தனது இறுதிகாலம்வரை வாழ்ந்தார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் ‘ஞானம்’ மாத இதழ் ஏப்ரல் 2005இல் சித்தி அமரசிங்கம் அவர்களின் பணியைப் பற்றிய சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டு அவரைக் கௌரவித்தது. இக் கட்டுரை சித்தி அமரசிங்கத்தை அவர் வாழும் பொழுதே வாழ்த்துவதாக அமைந்திருந்தது.


இத்தகைய சிறந்த கலைஞரை திருகோணமலை திருமறைக்கலா மன்றம் 2001இல் நடத்திய தமிழ்விழாவில் வைத்து வாழ்த்திக் கௌரவித்தது. கொழும்பு தமிழ்ச்சங்கம் 22.05.2004இல் ‘முத்தமிழ் மாமணி’ என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. 16.10.2006இல் வடக்குக்கிழக்கு மாகாண தமிழ்விழாவில் வைத்து 2006ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருது வழங்கப்பட்டது.
எல்லாவற்றிகும் மகுடமாக அரசு இவருக்கு 22.05.1999இல் கலாபூசண விருதை வழங்கிக் கௌரவித்தது.

தம்பிமுத்து அமரசிங்கம் தனது வாழ்வில் புரட்சிகரமாக இணைந்த மனைவியின் பெயரையே தனது பெயருடன் இணைத்துப் பின்னாளில் சித்தி அமரசிங்கமானார். இறுதிவரை இந்தப் பெயருடனேயே தனது பணிகளை மேற்கொண்டார்.

ஈழத்துக் காந்தி என அனைவராலும் போற்றப்படுகின்ற காந்தி ஐயா அவர்கள் இவர் பற்றிக் குறிப்பிட்டுள்ள ஒரு கருத்தை இங்கே நினைவுபடுத்துதல் சாலப்பொருந்தும் என நம்புகிறேன். ''துணைவியார் சித்தி அம்மா அவர்கள் ஐயாவின் எல்லாப்பணிகளிலும் இன்ப துன்பங்களிலும் சரி பங்கேற்று உறுதுணையாகவும் ஒற்றுமையாகவும் சமூகத்திற்கு முன்மாதிரியாகவும் வாழ்ந்து நல்லறமாகிய இல்லறத்தை இனிதே நடத்திவந்தார்கள். ஐயாவின் அளவற்ற தொண்டுகளுக்கெல்லாம் அம்மாவின் ஒத்துழைப்பும் ஊக்கமுமே காரணமாகும்.''

பிற்காலத்தில் இத்தகைய சிறந்த கலைஞர் சித்தி அமரசிங்கம் அவர்கள் நோய்வாய்ப்பட்டு அடிக்கடி கொழும்புக்கு போய் வந்துகொணடிருந்தார். இதய நோயால் அவர் அவதிப்பட்டார். டொக்டர் பாலசுப்பிரமணியம் அவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார். இறுதியில் கொழும்பிலேயே தமது இலக்கிய நண்பர்களின் சந்திப்பிலேயே தனது இறுதி மூச்சை விட்டார்.

நாடக நடிகனாக தயாரிப்பாளனாக நாட்டுக்கூத்துக் கலைஞனாக வில்லிசை மன்னனாக ஆவணக்காப்பாளனாக இலக்கிய ஆர்வலராக பல்துறை ஆற்றல்கொண்ட சித்தி அமரசிங்கம் அவர்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள பெரும் தொண்டினை எவராலும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

எழுத்தாளராகிய அன்புமணி ஐயா அவர்கள் கூறுவது போல ‘அவர் பெயரால் ஒரு நினைவுப்பணி மன்றம்’ அமைத்து அவர் மேற்கொண்ட பணிகளைத் தொடர்வதே நாம் அவருக்குச் செய்யக்கூடிய கைமாறாகும்.

வே.தங்கராசா

வானொலி நாடகங்கள்
தொழிலுக்குத் தொழில், கீக்கிரடீஸ் போன்ற நாடகங்களை வானொலிக்காக தயாரித்திருந்தார். இவரது மேடை நாடகமான இராவண தரிசனம் பின்னர் இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பாகியது.


கலைவாணி நாடக மன்றம்
சித்தி அமரசிங்கத்தினால் உருவாக்கப்பட்ட கலைவாணி நாடக மன்றம் பின்வரும் நாடகங்களை மேடையேற்றியது.
• பழிக்குப்பழி
• மனமாற்றம்
• புரடக்ஷன் நம்பர் 12
• Banda comes to town
• வேடன் கண்ணப்பா
• காணிக்கை
• மலர் விழி
• இராவண தரிசனம்
• ஹரிச்சந்திரா
• திருத்தப்படும் தீர்மானங்கள்

மதிவளர் கலாமன்றம் சார்பில்
• நந்திவர்மன் காதலி
• எல்லாம் காசுக்காக
போன்ற நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.


இவரது எழுத்துருவாக்கத்திலும் நெறியாள்கையிலும் மேடையேறிய பிற நாடகங்கள்
• கொப்பரணக் கோட்டுக்கிழுப்பான்
• ஸ்டூடியோவில் க்ரேசி போய்ஸ்
• அண்டல் ஆறுமுகம்
• சத்தியவான் சாவித்திரி
• ஊர்த்தவளைகள்
• சொன்னதைச் செய்வான்


அமரன் ஸ்க்ரீன் சார்பில் பின்வரும் நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.
• குத்துவிளக்கு
• சொப்பன வாழ்வில்
• யமனுக்கு யமன்

இவை மாத்திரமன்றி, கீழைத் தென்றல் கலாமன்றம், திருமறைக் கலாமன்றம் போன்றவற்றோடும் இவர் இணைந்து இயங்கியுள்ளார்.
பல சிங்கள நாடகங்களிலும், ஏனைய நாடகக்கலைஞர்களின் நாடகங்களிலும் இவர் பங்கேற்று நடித்துள்ளார்


வெளியிட்ட நூல்கள்
• ஒற்றைப்பனை (சிறுகதைத் தொகுப்பு)
• கோயிலும் சுனையும் (நாடகத் தொகுதி)
• கயல் விழி (கவிதை நாடகம்)
• சாரணர் புதிய செயற்றிட்டம்
• 93கலை இலக்கிய ஆய்வு (கட்டுரைகள்)
• இராவண தரிசனம் (இலக்கிய நாடகம்)
• கங்கைக் காவியம் (காவியம்)
• கழகப் புலவர் பெ.பொ.சி கவிதைகள்
• சிந்தித்தால் (நற்சிந்தனைக் கதைகள்)
• இரு நாடகங்கள் (நாடகம்)
• திருப்பல்லாண்டு
• கவிதாலயம் (கவிதைத் தொகுப்பு)
• அச்சாக்குட்டி (குழந்தை இலக்கியம்)
• நெஞ்சில் ஓர் நிறைவு (சிறுகதைத் தொகுப்பு)
• காந்தி மாஸ்டர் சிறப்பு மலர்
• கிழக்கில் பூத்த ஞான மலர்
• இலக்கியப் பூந்துணர்

வே.தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment