Wednesday, October 02, 2013

இலங்கையில் 'தமிழ் பௌத்த தேரர்கள் ஆற்றிய பணிகள்' - பகுதி - 3

தமிழ் பௌத்த தேரர்கள்

பதி(பதவியா) நகரில் அமைந்த வேளைக்காற விகாரம் 

பண்டை நாட்களில் தமிழ் நகரமாக விளங்கிய பதி நகரமே  இன்று பதவியா என்றழைக்கப்படுகிறது. இங்கு பல சிவாலயங்கள் அமைந்திருந்தன. பல சமூகப்பிரிவுகளைக்கொண்டிருந்த வளர்ச்சிடைந்த பட்டினங்கள் இருந்தன. இவற்றில் ஒன்று ஐம்பொழில் பட்டினம்.

ஐம்பொழில் பட்டினம் வணிகர், பேரிளமையாளர், படைவீரர், கம்மாளர், அந்தணர் போன்ற பல சமூகப் பிரிவினர்களை கொண்டமைந்த ஒரு வீரபட்டினமாகும். இங்கு வேளைக்காறர் சிறப்பிடம் பெற்றிருந்தனர். பதவியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 13 நூற்றாண்டிற்குரியதாகக் கருதப்படும் சமஸ்கிரத மொழிச் சாசனம் வேளைக்காற விகாரம் பற்றி விபரிக்கிறது.

புதிதாக அமைக்கப்பட்ட ஒரு விகாரை பற்றிய குறிப்புக்கைக் கொண்டிருக்கும் இக் கல்வேட்டு, வேளைக்காறரில் ஒரு பகுதியினர் தமிழ் பௌத்தர்களாக  இருந்த செய்தியினைச் சொல்கிறது. இவ் விகாரையை அமைப்பித்த  (உ)லோகநாதன் என்னும் தண்டநாயகன்(சேனாதிபதி) அதன் காவலராகவும், அறங்காவலராகவும் வேளைக்காறரை நியமித்த தகவலை மேற்படிச் சாசனம் உறுதிப்படுத்துகிறது.

இத்தொல்லியல் ஆதாரம் கி.பி 1128 இல் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தமிழ்ப் படைத்தளபதி கணவதி தண்டநாதனார் பாதுகாப்பில் இருந்த திரியாய் விக்கிரமசலாமேகன் பெரும்பள்ளி பற்றிய சாசனத்தை பெரிதும் ஒத்ததாக அமைந்திருக்கிறது.


எனவே இன்று இலங்கையில் வடகிழக்குப் பகுதியில் காணப்படும் புராதான பௌத்த விகாரைகள் தொடர்பான புரிதலுக்கு இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' பற்றிய ஆராய்வு அவசியமாகிறது.

தமிழ் பௌத்த தேரர்கள்
 'தமிழ்த்  தேரர்கள் ஆற்றிய பணிகள்' 

கௌதம புத்தர் தனது மதத்தினைப் பரப்ப மூன்று முறை இலங்கைக்கு வந்ததை மகாவம்சம் குறிப்பிடுகிறது. முதல்தடவை மகியங்கனையில் வசித்த இயக்கர்களையும், இரண்டாவது முறை நாகதீபத்தில் வசித்த நாகர் குடிகளையும், மூன்றாவது முறை கல்யாணியில்(களனியா) வசித்த நாகர்களையும் தன் மதம் மாற்றினார் என மகாவம்சம் விபரித்துச் சொல்கிறது.

தமிழ்நாட்டில் பௌத்தமதச் செல்வாக்குக் குன்றிய பின் தமிழ்த் தேரர்கள் இலங்கைக்கு விரட்டப்பட்டது பற்றி முன்னைய கட்டுரையில் பார்த்திருந்தோம். தமிழ்த் தேரர்கள் சமூகசேவைகளுடன் பல நூல்களையும் இயற்றியிருந்தனர். எனினும் தமிழ்நாட்டில் பௌத்தமத வீழ்ச்சியின் பின்னர் அவற்றில் பெரும்பாலானவை அழிந்து போய்விட்டது.

தமிழ் பௌத்த தேரர்கள் குறித்து நமக்குக் தற்போது கிடைக்கும் தகவல்கள் மிகச்சிறியளவிலேயே இருக்கின்றது. அவற்றில் குறிப்பிடத்தக்கவர்கள்  இளம் போதியார், அறவண அடிகள்,  மணிமேகலை,   சீத்தலைச் சாத்தனார், சங்கமித்திரர், நாதகுத்தனார், ஆசாரிய புத்ததத்த மகாதேரர், கணதாசர், வேணுதாசர், சுமதி ஜோதிபாலர், புத்தமித்திரர்,. போதி தருமர், ஆசாரிய திக்நாதர் (தின்னாகர்), தருமபால ஆசிரியர், ஆசாரிய தருமபாலர், மாக்கோதை தம்மபாலர், புத்தி நந்தி /சாரி புத்தர், வச்சிரபோதி, பெருந்தேவனார், தீபங்கர தேரர், அநுருத்தர், மகாகாசபர், ஆனந்த தேரர், தம்மகீர்த்தீ, கவிராசராசர், காசப தேரர், புத்தாதித்தியர்  என்போஇவர்களில் ஒருசிலரைத் தவிர்த்து பலருடைய வரலாறுகள் இன்று அறியக்கூடியதாக இல்லை.

ஆரம்ப நாட்களில் இலங்கையில் பௌத்தம் பரவ தமிழ்த்  தேரர்கள் ஆற்றிய பணிகளே குறிப்பிடத்தக்கதாக இருந்தன.

சங்கமித்திரர்
மகாயான பௌத்த சமயக்கொள்கை கொண்ட இவர் சோழநாட்டைச் சேர்ந்த தமிழர். இவரது காலத்தில் இலங்கையில்  கி.பி 302 முதல் கி.பி 315 வரை கோதாபயன் என்னும் அரசன் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்தான். இம்மன்னன் தேரவாத பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் என்பதனால் அதற்கு மாறான மகாயான பௌத்தமத பிக்ஷுக்களைத் சோழ நாட்டிற்கு துரத்திவிட்டான். இதையறிந்த சங்கமித்திரர் இலங்கைக்குச் சென்று தேரவாத பௌத்த மத பிக்ஷுக்களின் தலைவரான சங்கபாலன் என்பவருடன் அரசன் முன்னிலையில் வாதஞ் செய்து வெற்றி பெற்றார். இதனால் மகிழ்ந்த மன்னன் தமது பிள்ளைகளான ஜேட்டதிஸ்ஸன், மகாசேனன் என்னும் இருவருக்கும் கல்வி கற்பிக்க இவரை ஆசிரியராக நியமித்தான்.

இவ்விரு மாணாக்கரில் மகாசேனன் இவரிடத்தில் அன்பு கோண்டவனாகவும் , மூத்தவனான ஜேட்ட திஸ்ஸன் இவரிடம் பகைமை பாராட்டியும் வந்தான்.கோதாபயனின் மறைவின் பின் மூத்த மகனான ஜேட்டதிஸ்ஸன் (கி.பி. 323-333) அரசுகட்டில் ஏறினான். இவ்வாட்சி மாற்றத்தினால் உயிரச்சம் கொண்ட சங்கமித்திரர் சோழ நாட்டிற்கு திரும்பிச் சென்றார். ஜேட்டதிஸ்ஸன் மறைவின் பின்னர் அவரின் அன்புக்குரிய மாணவனான மகாசேனனுக்கு(கி.பி. 334-361)  தமது கையினாலேயெ முடிசூட்டினார். அத்துடன் இலங்கையில் மீண்டும் தங்கி தமது மதத்தைப் பரப்ப முயற்சி செய்தார்.

இவர் மகாசேனன் மேல் கொண்டிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தேரவாத பௌத்த மகாவிகாரையில் வாழ்ந்த பிக்ஷுக்களுக்கு நகரமக்கள் உணவு கொடுக்கக்கூடாதென்றும், மீறிக் கொடுப்பவர்களுக்கு நூறு பொன் அபராதம் விதிக்கப்படும் என்றும் கட்டளையிடவைத்தார். இதன் காரணமாக மாகாவிகாரையிலிருந்த தேரவாத பிக்ஷுக்கள் உணவு கிடைக்கப் பெறாமல் இலங்கையின் தென்பகுதிக்கு துரத்தப்ட்டனர். பின்னர் அந்த விகாரையை இடித்து தன்  கொள்கையைச் சேர்ந்த பிக்ஷுக்கள் வாழும் அபயகிரி விகாரையைக் புதுப்பித்துப் பெரியதாகக் கட்டினார்.

மகாவம்சம் 36,37 ஆம் அதிகாரங்களில் சொல்லப்பட்டிருபதின் படி மேற்படி நிகழ்வுகளின் விளைவாக சங்கமித்திரரும், அவருக்குத் துணையாக இருந்தவர்களும் தேரவாத பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களால் ஒரு சூழ்ச்சி மூலம் கொல்லப்பட்டனர்.

இங்கு குறிப்பிடப்படும் மகாசேனனே இலங்கையில் அக்காலத்தில் இருந்த சைவக்கோயில்களை இடித்து அழித்தவனாவான். இவன் திருக்கோணேச்சரத்தை  அழித்து கோகர்ண விகாரையை நிறுவினான்.

த.ஜீவராஜ்
   தொடரும்....


ஆதாரங்கள்

1. இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பேராசிரியர்.சி.பத்மநாதன்.2006.
2. பௌத்தமும் தமிழும் - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)
3இலங்கையிற் தொல்லியலாய்வுகளும் திராவிடக் கலாச்சாரமும் திருமதி.தனபாக்கியம் குணபாலசிங்கம் 2001.
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment