Tuesday, October 01, 2013

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவு


தமிழ் விக்கிப்பீடியா ஒரு இலாப நோக்கற்ற கட்டற்ற கலைக்களஞ்சியமாகும். கூட்டு முயற்சித் தன்னார்வத் திட்டமான இது 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றது. http://ta.wikipedia.org என்ற முகவரியில் இயங்கும் தமிழ் விக்கிப்பீடியாவை நாளொன்றுக்கு 1,75,000 முறைகளுக்கு மேல் படிக்கிறார்கள். பல நாடுகளையும் துறைகளையும் சேர்ந்த 11 வயது முதல் 77 வயது வரையிலான பங்களிப்பாளர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆர்வமுடன் எழுதி வருகிறார்கள்.இன்று 935 பங்களிப்பாளர்களை எட்டியுள்ள தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ இரண்டு கோடி சொற்களைக் கொண்ட 55,881 கட்டுரைகள் உள்ளன.

தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தமட்டில் திரு.இ. மயூரநாதனின் முன்னெடுப்புக்களே தமிழ் விக்கிப்பீடியாவின் ஆரம்ப வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. ஆரம்பக்காலங்களில் சிலர் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கும், இடைமுகத்தை உருவாக்குவதற்கும் என சிற்சில முயற்சி செய்துப்பார்த்துள்ளனர். 

இருப்பினும் இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இ. மயூரநாதன் என்பவரே 2003, நவம்பர் 20 ஆம் திகதி இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவின் இடைமுகத்தை உருவாக்கி, முறைமைப்படுத்தி ஆரம்பம் முதல் முனைப்புடன், தமிழ் விக்கிப்பீடியாவை ஒரு வளர்ச்சிப் பாதை நோக்கி கொண்டுவந்தவராவர். இன்றோ உலகெங்கும் வாழும் தமிழர்களின் முன்னெடுப்பால் தமிழ் விக்கிப்பீடியா ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்து, மேலும் முன்னேற்றத்துடன் முன்னோக்கிச் செல்கிறது.

இப்போதைக்கு அனைத்து பயனரின் பங்களிப்புடன் தமிழ் விக்கிப்பீடியாவில் காணப்படும் கட்டுரைகளின் எண்ணிக்கை 55,881 ஆகும். இதில் சிறப்பு என்னவென்றால் 18% வீதமான கட்டுரைகள் இ.மயூரநாதனுடையதாகவே இருப்பதே. அத்துடன் மயூரநாதன் எழுதும் கட்டுரைகள், எண்ணிக்கையை அதிகரிப்பதனை மட்டுமே நோக்காக கொள்ளாமல் காத்திரமானவைகளாகவும் உள்ளன.

வளர்ச்சிப் படிகள்

2003, நவம்பர் 21 ஆம் திகதி "195.229.241.228" கொண்ட ஐபி முகவரியில் ஒருவர் பங்களிக்கத் தொடங்கியுள்ளார். அவரும் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது இலங்கைத் தமிழரின் தனித்துவமான எழுத்து நடையில் தென்படுகிறது. இவரே விக்கிப்பீடியாவின் புதுப் பயனர் பக்கத்தை முதலில் உருவாக்கியவராவர். அத்துடன் விக்கிப்பீடியர்கள் என விக்கிப்பீடியர்களுக்கான உதவி குறிப்புகள் 26 ஆம் திகதி எழுதப்பட்டுள்ளது.

இந்த ஐபி முகவரியில் பங்களித்தவர் 10 தொகுப்புகளை மட்டுமே செய்துள்ளார். பத்தாவது தொகுப்பாக யாழ்ப்பாணம் என்னும் கட்டுரையை தொகுத்துள்ளார். அதற்கடுத்து "213.42.2.8" எனும் ஐபி முகவரியில் 53 தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன.இந்த ஐபி முகவரியின் முதல் பங்களிப்பு 2003, நவம்பர் 21 இல் பதிவாகியுள்ளது. இந்த ஐபி இலக்கத்திற்குரியவரும் ஒரு இலங்கையரே என்பது அவரது எழுத்து நடையில் தெரிகிறது.

தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் புதிதாகப் பங்களிக்க வருவோர், தமிழில் உள்ளீடு செய்யத் தெரிந்திருப்பது அடிப்படையானது. இதற்கான வழிகாட்டிகளை விக்கிப்பீடியாவிலே பார்க்க முடியும். தவிர ஏற்கெனவே அனுபவம் பெற்ற பயனர்களிடம் இது தொடர்பில் உதவி பெற்றுக்கொள்ளவும் முடியும்.

படிமம்:தமிழ் விக்கியின் முதல் இடைமுகம்.jpg

2003, நவம்பர் 25 ஆம் திகதி  திரு.இ.மயூரநாதனால் உருவாக்கப்பட்ட தமிழ் விக்கிப்ப்பீடியாவுக்கான முதல் இடைமுகத் தோற்றம்


நன்றி  - தமிழ் விக்கிப்பீடியா

2013 தொடர் கட்டுரைப் போட்டி
சூன் 2013 முதல் மே 2014 வரையான 12 மாதங்கள் நடைபெறுகிறது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி, தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்துவதும், ஏற்கனவே பங்களித்து வருவோர் உற்சாகத்துடன் நலமான போட்டி ஒன்றில் ஈடுபட்டுத் தத்தம் பங்களிப்புகளைக் கூட்டச் செய்வதுமே இப்போட்டியின் முதன்மை நோக்கம்.

பார்க்க  -   2013 தொடர் கட்டுரைப் போட்டி

த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment