Tuesday, October 22, 2013

விருதுகள் பல வென்ற சூரியன் FM அறிவிப்பாளர் திரு.தில்லையம்பலம் தரணீதரன்

Tharaneetharan

தம்பலகாமம் வடக்கிலுள்ள ‘சம்மாந்துறை’ வயல்வெளியில் செந்நெல்லும் , அந்த வயல்வெளியின் அருகேயுள்ள ‘பாற்கடலில்’ முத்தும் அமோகமாக விளைந்ததால் நெல் அறுவடைக்காலங்களிலும் முத்துக் குளிப்பு நடைபெறும் காலங்களிலும் நாட்டின் பலபாகங்களிலிருந்தும் தொழிலாளர்களும் வியாபாரிகளும் வந்து குவியும் இடமாக ஒரு காலத்தில் சிறந்திருந்தது ‘சிப்பித்திடல்’ முத்துக்குளிப்போர் ‘சிப்பிகளை’ இத்திடலுக்குக் கொண்டு வந்து சிப்பிகளை உடைத்து ‘முத்துக்களைத்’ தேடிப்பெற்றுக் கொண்டதாக அக்காலத்தில் இருந்த பெரியார்கள் கூறுவர். சிப்பிகள் அதிகமாக காணப்பட்ட இடம் ‘சிப்பித்திடல்’ என அழைக்கப்பட்டது.

சிப்பித்திடலுக்கு அருகாண்மையிலுள்ள முன்மாரித்திடலில் கலைஞர் தரணீதரன் அவர்களின் பெற்றோர்களான தில்லையம்பலமும் தங்கச்சியம்மாவும் இல்லறத்தை நல்லறமாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஏழு பிள்ளைகள். இவர்களில் இளையவர்தான் நமது  சூரியன் FM அறிவிப்பாளரான திரு.தி.தரணீதரன் அவர்கள்.

வன்செயலுக்குப் பிற்பாடு வரலாற்றுப் புகழ்மிக்க இந்த இடங்களைவிட்டு மக்கள் குடிபெயரத் தொடங்கினர்.  திரு.தில்லையம்பலமும் தனது குடும்பத்துடன் தம்பலகாமம் புதுக்குடியிருப்புப் பகுதிக்கு இடம்பெயர்ந்தார். தம்பலகாமம் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் இவர் முகாமையாளராகக் கடமையாற்றியதால் இவர்களுக்கு இந்தப் புதிய இடம் பொருத்தமாக அமைந்து விட்டது.

தனது ஆரம்பக்கல்வியை தி/முன்மாரித்திடல் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கற்ற திரு.தரணீதரன் தனது உயர் கல்வியை திருகோணமலை இராமகிருஷ்ண சங்க  இந்துக்கல்லூரியிலும் பின்னர் தொழில்நுட்பக் கல்லூரியில் குடிசார் இயந்திரவியல் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து தேச நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் ‘உலக வங்கியின் வீடமைப்புத்திட்டத்தில் தொழில் நுட்ப உத்தியோகத்தராக நாலு வருடங்கள் கடமையாற்றினார்.

Tharaneetharan

இளம் வயதிலிருந்தே தான் ஒரு சிறந்த ஊடகவியலாளராக வரவேண்டும் என்ற இலட்சியத்தில் அயராத நம்பிக்கை வைத்திருந்த திரு.தி.தரணீதரன் அவர்கள் அறிவிப்புத்துறை தொடர்பான ஈர்ப்பால் ‘அறிவிப்புத்துறையைத்’ தேர்ந் தெடுத்தார்.

இதன் காரணமாக தேசிய இளைஞர் மன்றத்தினால் 2003ஆம் ஆண்டு தேசிய ரீதியில் நடைபெற்ற ‘அறிவிப்பாளர் போட்டியில்' 3ஆம் இடத்தையும் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தையும் 2008ஆம் ஆண்டில் இடம்பெற்ற போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தையும் பெற்றார்.

இந்தப் போட்டியின்போது நடுவர்களாகக் கடமையாற்றிய பிரபல அறிவிப்பாளர் திரு.எஸ்.விஸ்வநாதன், சற்சொரூபவதிநாதன் ,சீதாராமன் , நாகபூசணி கருப்பையா, பிரபல மெல்லிசைப்பாடகர் சதானந்தம் ஆகியோர்களின் அறிமுகம் கிடைத்தது.

இதன் பின்னர் சூரியன் நேர்முகத் தேர்வு இடம் பெற்றது. பிரபல வானொலி அறிவிப்பாளரும் ‘ரீங்காரம்’ நிகழ்சி புகழ் முகுந்தனின் வழிகாட்டலில் இது நடைபெற்றது. தான் விரும்பிய துறையில் கடமையாற்றும் வாய்ப்புக் கிடைத்ததும் தரணீதரன் பூரித்துப் போனார்.

பிரபல ஒலிபரப்பாளர் திரு. நடராஜசிவத்தினால் பட்டை தீட்டப்பட்டு திரு. நவநீதன் நிகழ்ச்சி முகாமையில் நல்ல பல சந்தர்பங்கள் கிடைக்க அவற்றை முறையாகப் பயன்படுத்திக் கொண்டு தற்பொழுது திரு.லோசன் அவர்களின் முகாமைத்துவத்தின் கீழ் அறிவிப்பாளராக கடமையாற்றி வருவது தனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் என்கிறார் தரணீதரன்.

படிக்கும் காலத்திலேயே அறிவிப்புத்துறையில் அலாதிபிரியமும் ஈர்ப்பும் கொண்ட கலைஞர் திரு.தரணீதரன் வாரநாட்களில் 3 தொடக்கம் 5மணிவரை கும்மாளம் என்ற உலக நடப்பு அதிசயங்கள், ஆச்சரியம் தரும் விந்தையான விடயங்களை உள்ளடக்கிய நிகழ்சிகளை நடத்துகிறார். பிரதி சனிக்கிழமை தோறும் 6 தொடக்கம் 8.45.மணிவரை ‘உலக விளையாட்டுக்களின் களம்’ ‘விரைந்து வரும் விளையாட்டுச் செய்திகள்’ ஆகிய நிகழச்சிகளையும் , இரவு 8 மணிக்கு ‘வெற்றி நடைபோடும் விளையாட்டுச் செய்திகளையும் புதன் சனிக்கிழமைகளில் காலை நேரச் செய்திகளையும் சிறப்பாகச் செய்து வருகிறார்.

திரு.தரணீதரன் அவர்களுக்கு 2012இல் ‘ஊடகத்துறைக்கான அரசின் புலமைப் பரிசில்’ கிடைத்தது.  தற்பொழுது அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில்  ‘ஊடகத்துறை டிப்ளோமா கற்கை நெறியை’ தொடர்கிறார்.

Tharaneetharan

உலகெங்குமுள்ள பல்லாயிரக்கணக்கான வானொலி இரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட திரு.தரணீதரன் அவர்கள் சக வானொலி ஒன்றில் அறிவிப்பாளராகக் கடமையாற்றும் பிரியதர்சிஷினி அவர்களை செப்டெம்பர் முதலாம் திகதி திருமணம் செய்து கொண்டார்.
கலைஞர்கள் இருவரையும் ‘வாழ்க வளமுடன்’ என வாழ்த்துவோம்.

வேலாயுதம் தங்கராசா


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment