Friday, October 04, 2013

முறிவு வைத்தியர் கந்தன் இளையக்குட்டி பேச்சிமுத்து அவர்கள்


வரலாற்றுப் புகழ் மிக்க தம்பலகாமத்தில் முன்மாரித்திடல் சிப்பித்திடல் என்னும் திடல்கள் மிகவும் செல்வாக்குப் பெற்ற திடல்களாக விளங்கின. குளக்கோட்டு மன்னனால் தம்பலகாமம் ஆதிகோணநாயகருக்கென உருவாக்கப்பட்ட வழிபாட்டு முறைகளில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் கிராமதேவதைகளுக்குரிய வழிபாடுகளில் ஒன்றான 'வல்லிக்கண்ணருக்கான மடை வைபவம்' சிப்பித்திடலில் இடம்பெற்று வந்தது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

மாரிமுத்துச் சாஸ்திரியார் போன்ற புகழ்பெற்ற கலைஞரும் சின்னத்துரை அண்ணாவியாரும் இத்திடலைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களேயாகும். முன்மாரித்திடலில் அமைந்துள்ள அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் தமது ஆரம்பக்கல்வியைப் பெற்றுக்கொண்ட திரு.ஜெயசாகரன், திரு.ஜெயவர்ணன், திரு.ஜெயகாந்த் ஆகியோர் இன்று அரச வைத்தியர்களாக கடமையாற்றுவது குறிப்பிடத்தக்கது. இதே போன்று  திரு.தி.தரணீதரன் 'சூரியன் வானொலியில் புகழ்பெற்ற அறிவிப்பாளராக' கடமையாற்றுவதையும்  இங்கே குறிப்பிடுவது சாலச்சிறந்தது.
இத்திடலுக்கு அருகேயுள்ள 'பாற்கடலில்' பழமையில் முத்து எடுத்ததாகவும், இத்தொழிலில் ஈடுபட்டோர் முத்துச்சிப்பிகளை உடைப்பதற்கு இத்திடலைப் பயன்படுத்திக் கொண்டதாகவும், இங்கே சிப்பி ஓடுகள் குவியலாகக் கிடந்ததாகவும் இதன் காரணமாகவே இத்திடலுக்குச் 'சிப்பித்திடல்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும் முதியோர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இத்தகைய சிறந்த சிப்பித்திடலில் கந்தன் இளையக்குட்டி நாகம்மா தம்பதிகளுக்கு 1938 ஆம் ஆண்டு பங்குனி மாதம் பதினெட்டாம் திகதி நமது முறிவு வைத்தியர் பேச்சிமுத்து அவர்கள் பிறந்தார். 'அனுபவம் சிறந்த ஆசான்' என்பார்கள். தனது முயற்சி ஒன்றையே மூலதனமாக நினைத்து இரவு பகல்பாராது கடுமையாக உழைத்ததின் பயனாக இன்று அவர் ஒரு சிறந்த முறிவு வைத்தியராகத் திகழ்கிறார். கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியில் இவர் வீட்டுக்குச் செல்லும் பாதையில் 'முறிவு வைத்தியர்'என்ற பெயர்ப்பலகை பொறிக்கப்பட்டிருப்பதையும் இந்த வீதியில் செல்லும் அநேகமானோர் இந்தப் பெயர்ப்பலகை பொருத்தப்பட்ட வீதியால் இறங்கிச் செல்வதையும் இன்று காணக்கூடியதாக உள்ளது.

1940 ஆம் ஆண்டளவில் சிப்பித்திடலில் இருந்து இடம்பெயர்ந்த முறிவு வைத்தியர் திரு.பேச்சிமுத்து அவர்கள் தனது குடும்பத்தோடு தம்பலகாமம் 'பாரதி புரத்தில்' வாழத் தொடங்கினார். 1979 ஆம் ஆண்டு இலங்கை வைத்தியசபையின் 'வைத்திய அத்தாட்சிப்பத்திரம்' 7146 ஆம் இலக்கத்தில் இவருக்குக் கிடைத்தது.

தம்பலகாமம், கிண்ணியா, குச்சைவெளி, திரியாய் ,மதவாச்சி ,புத்தளம் ,புல்மோட்டை ,கந்தளாய்,மாத்தளை போன்ற இடங்களிலிருந்தெல்லாம் இவரிடம் சிகிச்சைபெற தமிழர், சிங்களவர், இஸ்லாமியர்கள் எந்த நேரமும் வருகை தந்துகொண்டேயிருப்பார்கள்.

தம்பலகாமம் வளர்கலை மன்றம் இவரதுசேவையைப் பாராட்டிக் கௌரவித்தது. திருகோணமலை இலக்கியச் சோலை பதிப்பகமும் இவரது சேவைக்குப் பாராட்டு வழங்கியது. இங்கு வருகைதரும் நோயாளர்கள் தமது நோயை நீக்கிக் கொள்வதுடன் இவரது கனிவு ததும்பும் பேச்சாலும் மன ஆறுதல் பெற்று மகிழ்ச்சியுடன் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது.

இவரது இரண்டு ஆண்பிள்ளைகளில் ஒருவர் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் மற்றவர் கிழக்குப்பல்கலைக் கழகத்தில் திருகோணமலை வளாகத்திலும் கடமையாற்றுகின்றனர். மருமக்களில் ஒருவர் கூட்டுறவுச் சங்க முகாமையாளராகவும் மற்றவர் ஆசிரியராகவும் கடமையாற்ற மகள் இவரைக் கண்போல கவனித்துக் கொள்கிறார்.

தனது பணியை காசுக்காக விலைபேசாத இவருக்கு மிகுந்த செல்வாக்குப் பெருகிவருகிறது. எனினும் வைத்திய உதவியைப் பெறுபவர்கள் தங்களாலியன்றதை வழங்கிச் செல்கின்றனர். 'ஆண்டவன் தந்த கலை அதை மக்களுக்குப் பயன்படுத்துகிறேன்' என அடக்கமாகக் கூறும் அவர் சேவை தொடர வாழ்த்துவோம்.

வேலாயுதம் தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. முறிவு வைத்தியர் பேச்சிமுத்து அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. Dear Dr
    It is really appreciated to read our heritage. Our forefathers are very effecient people in every walk of their life. It is our duty to introduce them to our young generation. Thanks a lot
    Kernipiththan

    ReplyDelete