Thursday, October 03, 2013

நிலாவெளி தான சாசனம்

திருகோணமலை வரலாறு

ஸ் (வஸ்தி ஸ்ரீ)…
சா ஸநம் சாஸ்வத ம் ம்பு ஸ்ரீ கோணபர்வத ம் திருகோண
மலை மத்ஸ்யகேஸ்வரமுடைய மஹா தே வற்கு நிச்சலழிவு
க்கு நிவந்தமாக சந்தராதித்தவற் செய்த உராகிரிகாம கி(ரி)
கண்ட கிரிகாமம் நீர் நிலமும் புன்செய்யும் இடமும்
ஊர்ரிருக்கையும் தே வாலயமும் மே நோக்கிய ம
ரமும் கீழ் னொக்கிந கிணறும் உட்பட்ட இந்நிலத்து
க் கெல்லை கிழக்குக் கழி எல்லை தெற்கெல்லை க
ல்லு குடக்கு எத்தகம்பே எல்லை வடக்கெல்
லை சூலக்கல்லாகும் சுடர் கோணமா மலை தனி
ல் நீலகண்டர் (க்)கு நிலம் இவ்விசைத்த பெருநான்
கெல்லையிலகப்பட்ட நிலம் இருநூற்று
ஐம்பத்திற்று வேலி இது பந்மா யே
ஸ்வரரஷை

இலங்கைத் தமிழ் சாசனங்கள்
பேராசிரியர்.சி.பத்மநாதன்
406 ம் பக்கம்



நிலாவெளி தான சாசன விளக்கம்

‘கிழக்கே கடல், மேற்கே எட்டம்பே, வடக்கே சூலம் பொறிக்கப்பட்ட எல்லைக் கல், தெற்கே எல்லைக்கல் என்பன எல்லையாகக் கொண்ட உரகிரிகாமம், கிரிகண்டகாமத்து பாசன நிலமும், வானம் பார்த்த நிலமும் அது உள்ளடக்கியுள்ள தேவாலயமும், மரங்களும், கிணறுகளும் திருகோணமலையிலுள்ள மச்சகேஸ்வரத்து மகேஸ்வரருடைய தினப் பூசைச் செலவுக்காக சூரியனும் ,சந்திரனும் உள்ளவரை நிலதானம் செய்யப்படகின்றது. நான்கு எல்லைகளுக்குள் அடங்கிய இந்த இருநூற்றி ஐம்பது வேலி நிலமும் கோணமாமலையில் வீற்றிருக்கும் நீல கண்டத்தை உடைய சிவனுக்குரியதாகும். இந்த நிலதானம் திருக்கோணேஸ்வரத்து அறங்காவலர்களான சிவனடியார்கள் குழுவின் பாதுகாப்பில் இருக்கும்.

வரலாற்றுத் திருகோணமலை
கனகசபாபதி சரவணபவன்
பக்கம் 125-126


நிலாவெளி தான சாசனம் சொல்லும் வரலாறு

1. திருகோணமலை வரலாற்றில் இப்பெயரினைப் பதிவுசெய்த ஆவணங்கில் இதுவே மிகப்பழமையானது.

2. கோணமாமலை - திருகோணமலைக்கு 7 ம் நூற்றாண்டுமுதல் வழங்கபட்டுவந்த இந்தப் பெயர்வடிவம் ( உ+ ம்  - திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் திருக்கோணமலைப் பதிகம் ) இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

3. மச்சகேஸ்வரம் -  திருக்கோணேச்சரத்திற்கு புராணகாலம் முதல் வழங்கிவந்த பெயர்களில் ஒன்றான மச்சகேஸ்வரம் இச்சாசன காலத்தில் வழக்கில் இருந்ததை இது அறியத்தருகிறது.

4உரகிரிகாமம், கிரிகண்டகாமம் என்னும் நிலாவெளிக்குள் அடங்கிய தற்போது வழக்கொழிந்துபோன இரு இடப்பெயர்களை அறியக்கூடியதாக இருக்கிறது.

5. நில எல்லைகள் - இச்சாசனம் எழுதப்பட்ட காலத்தில் நில எல்லைகள் தெளிவாக வகுக்கப்பட்டிருந்ததை அதன் குறிப்புக்கள் உணர்த்துகின்றன.

6. தானம் - திருக்கோணேச்சர ஆலயத்திற்கு சுமார் 250 வேலி ( 1700 ஏக்கர் ) நிலம் தானமாக கொடுக்கப்பட்டதை ஆவணப்படுத்தும் இச்சாசனம் திருகோணமலை வரலாற்றுத்தேடலில் முக்கிய பங்கு வகிப்பதாகும்.

காலம் கி.பி 11ஆம் நூற்றாண்டு
இடம் -  நிலாவெளிப் பிள்ளையார் கோயிலின் தீர்த்தக் கிணற்றிலே படிக்கல்லாக அமைக்கப்பட்டுள்ளது.
கண்டறிய உதவியவர்  -  திரு.நா.தம்பிராசா 
வாசித்தவர்கள் -      திரு.கா.இந்திரபாலா , திரு.செ.குணசிங்கம்


நிலாவெளி தான சாசனம்


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment