Monday, September 16, 2013

தம்பலகாமம் VS தம்பலகமம் - இடப்பெயர் ஆய்வு நிறைவுப் பகுதி

தம்பலகாமம்

தம்பை நகர் என்று திரிகோணாசலப்புராணம் சிறப்பித்துக்கூறும் கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் நீர்வள, நிலவளச் சிறப்பைக் கொண்டமைந்த தம்பலகாமம் என்னும் கிராமத்தின் இடப்பெயர் ஆய்வின் ஒரு பகுதியாக ‘தம்பலகாமம்’ என்னும் ஊரின் வரலாற்றுத் தொன்மைதனை இதுவரை சுருக்கமாகப் பார்த்தோம்.
கரிய குவளைத் தளிர் மேய்ந்து
கடைவாய் குதட்டித் தேன் ஒழுக
எருமை கிடந்து மூச்செறியும்
எழிலார் தம்பை வளநாட்டில்
(திரிகோணாசல புராணம் )

‘தம்பலகாமம்’ என்பது, ( தம்பல் + காமம் )
தம்பல்' - சேறு ( தம்பலடித்தல் - பயிரிடுதல், உழவு செய்தல்
தம்பலாடல் - சேறடித்தல் அல்லது சேறாடால் )
'காமம்'   - ஊர்  ( Village; ஊர். 2. Inhabitant; குடி. )
என்ற காரணப்பெயராக அமைந்து வரலாற்றுக் காலம் முதல் வழங்கி வருவதைக் காணலாம்.  தம்பலகாமம் என்னும் ஊரின் பெயரினைக் குறிப்பிடும் முதலாவது தமிழ் ஆவணம் தம்பலகாமம் கல்வெட்டு ஆகும். இச்சாசனம் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கலிங்க மாகனின் ( 1215 - 1255 )  ஆட்சிக்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

பேராசிரியர் திரு.சி.பத்மநாதன் அவர்களால் வாசிக்கப்பட்ட சாசனத்தில் 9 ஆவது வரி  கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது.

தம்பலகாமம் கல்வெட்டு
9. தம்பலகாம ஊ(ர்)

எனவே தம்பலகாமம் என்னும் பெயர் புராதனமானது. அது ஏறக்குறைய 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சாசன வழக்கில் இருந்ததை மேற்கூறிய  தம்பலகாமம் கல்வெட்டு  மூலம் அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. எனினும் பின்வந்த நாட்களில் தம்பல் + கமம்  

தம்பல்' -  சேறு
கமம்      - பயிர்செய்கை நிலம் , வயல்
என்ற அடிப்படையில் தம்பலகமம் என்றழைக்கும் வழக்கம் ஒரு பகுதியினரால் முன்னெடுக்கப்பட்டு, இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இதற்கு ஆதாரமாக திரு.வே. அகிலேசபிள்ளை  அவர்களால் 1889 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட திருக்கோணாசல வைபவம் என்னும் நூலினை ஆதாரமாகக் கொள்வர்.

திருகோணமலை மாவட்ட ஒல்லாந்து ஆளுனர் Jacques Fabrice van Senden அவர்களின் திருகோணமலை மாவட்ட சுற்றுப்பயண அறிக்கையில்         ( 15.05.1786  -  21.06.1786 ) அவரது தம்பலகாமப்பற்று விஜயத்தின்போது  12.06.1786 அன்று தம்பலகாமதின் வயல்வெளியில் இருந்த கல்வெட்டைப் பார்க்கச் சென்றதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

அக்கல்வெட்டின் காலத்தை கணிப்பிடுவது சாத்தியமற்றதாக இருந்ததோடு , அதில் இருந்தவற்றை வாசிப்பதற்கு அங்கு வாழ்ந்த மக்கள் உதவவில்லை என்பதையும் தனது  சுற்றுப்பயண அறிக்கையில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏறக்குறைய எண்ணூறு வருடங்களுக்கு முற்பட்ட காலங்களிலிருந்து வழக்கிலிருந்த ‘தம்பலகாமம்’ என்ற இடத்தின் பெயர் தம்பலகாமம் என்பதா ? அல்லது  தம்பலகமம் என்றழைப்பதா ? என்ற குழப்பத்திற்கு உள்ளானதற்கு  தம்பலகாமம் கல்வெட்டு வாசிக்கப்பட்டதில் இருந்த நீண்ட தடங்கலும் ஒரு காரணமாகும்.

 1930 ஆம் ஆண்டு தொல்பொருள் திணைக்களத்தினரால் திருகோணமலையிலுள்ள  ‘தம்பலகாமம்’ என்னும் ஊரில் கண்டெடுக்கப்பட்ட இத்தமிழ்க்கல்வெட்டின்  மைப்படி சுமார் 73 வருடகாலம் தொல்பொருள் திணைக்களத்தில் கவனிப்பாரற்றுக் கிடந்து 2005 ஆம் ஆண்டளவில்  பேராசிரியர் திரு.சி.பத்மநாதன் அவர்களால் வாசிக்கப்பட்டது.

பின்னாட்களில் 1980 களில் ஆதிகோணநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றவேளை மேற்படி சர்ச்சை மீண்டும் எழுந்தது. இதன்போது ஆலய நிர்வாகசபையின் வேண்டுகோளுக்கிணங்க மறைந்த பண்டிதமனி கணபதிப்பிள்ளை அவர்கள், பனங்காமம்,கொடிகாமம், வீமன்காமம், எனும் பெயர்களை மேற்கோள்காட்டி, தம்பலகாமம் என அழைப்பதே சரியென நிறுவினார். அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஆதிகோணநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக மலரின் முன்னட்டைப்படம் கீழே.

ஆதிகோணநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக மலர்
ஆதிகோணநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக மலர்

அதைவிடவும் பண்டிதமனி கணபதிப்பிள்ளை  அவர்களால் மேற்குறித்த நிகழ்வில் சொல்லப்பட்ட ஒரு எதிர்வுகூறலை மீட்டுப்பார்த்தல் அவசியமாகும்.

தம்பலகாமம் என்னும் புராதனமான பெயரை தம்பலகமம் என பெயர்விளித்துவருங்கால், அது பின்னாட்களில்

 தம்பலகமம்
 தம்பலகம
 தம்பலகமுவ



எனப் பெயர்மாற்றம் செய்ய இலகுவாக இருக்கும் என்பதையும் 1980 காலப்பகுதியில் குறிப்பிட்டிருந்தார். மேற்படி நிகழ்வு 2006 ஆண்டில்  இணையத்தில் திரு.மலைநாடான் அவர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வரலாற்றை அறிதல் என்பது வெறுமனே பழம்பெருமை பேசுவதற்காக அல்லாமல் நமது முன்னோர்களின் பண்பாட்டு விழுமியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் சென்று அதனூடாக நமது சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவுவதாய் இருத்தல் வேண்டும்.

ஏழு பகுதிகளைக்கொண்ட இந்த இடப்பெயர் ஆய்வும், வரலாற்றுத் தேடலும் தம்பலகாமம் என்னும் ஊரின் 10% பகுதியையே உங்கள் முன் கொண்டுவந்திருக்கிறது. இன்னும் ஆராயப்படாத வரலாற்றெச்சங்கள் தம்பலகாமத்திலும் அதனைச் சூழ்ந்த பிரதேசங்களிலும் பரவிக்கிடக்கிறது.

சுயாதீனமான,தலையீடுகளற்ற தொல்பொருள் ஆய்வுகள் மூலமே மிகுதிப்பகுதி வரலாற்றினை நாம் அறியக்கூடியதாக இருக்கும். அதுவரை தம்பலகாமம் என்னும் வரலாற்றுப்புகழ் கொண்ட ஊரின் வரலாற்றுப் பாரம்பரியங்களைக் காப்பதும்,வளர்ப்பதும் தூரநோக்கு கொண்ட இளைஞர்களின் கைகளிலேயே இருக்கிறது.

முற்றும்.

வாரம் தோறும் இத்தொடர் கட்டுரையினைப் பிரசுரித்து ஊக்கப்படுத்திய திருகோணமலையில் இருந்து பிரசுரமாகும் மலை முரசிற்கு எனது நன்றிகள்.

நட்புடன் ஜீவன்.


ஆதாரங்கள்

1. காலனித்துவ திருகோணமலை - கனகசபாபதி சரவணபவன் 2003
2. இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பேராசிரியர்.சி.பத்மநாதன்.2006.
3. தம்பலகாமத்துக் கல்வெட்டுப் பற்றிய புதிய சிந்தனைகள் - வே. தங்கராசா


மேலும் வாசிக்க..


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. Dear Dr
    The people so called scholars are the most illiterate people. They never worry about their birth place.The people from Trinco never thought about education. The Great lady Mrs. Shanmugampillai built a Shanmugamahal - Sri Shanmuga Hindu Ladies College. in Trincomalee. Our histry boast aboutThajmahal, But the world never knew a lady who built an educational Institution in Trincomalee.. The people of Trinco forgot about Kalliyappu who donated a building to Hindu college in Trinco. He never worried about his village. Please introduce our great lady Thankammah of Thampalakamam and Kalliyappu of Thampalakamam.

    I enjoyed your grand father's poem. I have seen and enjoyed the scenery in my early stage. There are more to write about Thampalakamam. Just you get a book written by me from your father 'Sirakuvaithakathaikal.

    ReplyDelete
  2. Dear Dr...
    I would like to add a root point to the name of "Thampalakamam" -"Kaamam" is the root of pure tamil,but "Kamam" is the root of 'Sanskrit'(North Indian-Aryan's Language)It is closely related to sinhale.
    I don't know why the most of literate people afraid to spell their mother toungue and having some kind of inferiority to practicing Our pure language


    thanking for the Space

    S.T.Sivakumar (PHI)
    sivatco@gmail.com

    ReplyDelete
  3. Dear Dr....
    I would like to add an important point of The name of "Thampalakamam", Kaamam" is the root word of Tamil, but the "kamam" is the root word of "sanskrit"(North Indian language-Aryan's language)
    I don't know why the most of literate people afraid to spell thier mother toungue and having some kind of inferiority to practicing Pure Tamil.

    Thanking for the Space
    S.T.Sivakumar (PHI)
    sivatco@gmail.com

    ReplyDelete