Thursday, September 26, 2013

திருகோணமலையின் வயலின் இசைக்கலைஞர் சங்கீத பூசணம் திரு.வல்லிபுரம் சோமசுந்தரம்


எண்ணூறு வருடகாலப் பழமையுடைய தம்பலகாமத்தில் 'கூட்டாம்புளி' என்னும்திடல் பிரசித்தமானது.'கூட்டம் கூட்டமாக புளி வளர்த்த கூட்டாம்புளி'என கவிஞர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்கள் இதனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

கேரளத்துப் பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு.சத்தியமூர்த்தி அவர்களும், சங்கீத இசை ஆர்வலர் திரு.மாரிமுத்து அவர்களும், தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் அறக்காவல் சபையின் செயலாளர் திரு.நாகராசா அவர்களும் இத்திடலைத் தாயகமாகக் கொண்டவர்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கூட்டாம்புளியில் வல்லிபுரம் இராசாத்தி தம்பதிகளுக்கு 1928ஆம் ஆண்டு மாசிமாதம் 17ஆந் திகதி மகனாகப் பிறந்தவர்தான் நமது இசைக்கலைஞர் சங்கீத பூசணம் திரு.வல்லிபுரம் சோமசுந்தரம் அவர்கள்.சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர் சிறிய தந்தையாரான வேலுப்பிள்ளை சிறிய தாயாரான துளசியம்மாள் என்போரின் ஆதரவிலும் அரவணைப்பிலும் வாழ்ந்து வந்தார்.

திரு.சோமசுந்தரம் தனது ஆரம்பக்கல்லியை யாழ் கொழும்புத்துறையிலும் பின்னர்திருகோணமலை விபுலானந்தாக்கல்லூரியிலும், தம்பலகாமம் மகா வித்தியாலத்திலும் கற்று எஸ்.எஸ்.ஸி. பரீட்சையிலும் சித்தி பெற்றார்.

1952 இல் இந்தியா சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் இணைந்து சித்தூர் சுப்பிரமணியபிள்ளை, பேராசிரியர் கும்பகோணம் இராசமாணிக்கம் போன்றோர்களின் மேற்பார்வையில் வயலின் இசைப்பயிற்சியை மேற்கொண்டார்.1955 ஆம் ஆண்டுவரை மூன்று வருடங்கள் தொடர்ந்து கற்று சங்கீதபூசணம் பட்டத்தோடு தாய் நாடு திரும்பினார்.

 1957 தை முதலாந்திகதியிலிருந்து தம்பலகாமம் மகாவித்தியாலயத்தில் தற்காலிக ஆசிரியராகக் கடமையாற்றினார்.பின்னர் 1958இல் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலைக்குச் சென்று ஆசிரியர் பயிற்சியை முடித்துக் கொண்டு உதவி ஆசிரியராக பதுளையிலும் பசறை மத்திய கல்லூரியிலும் பின்பு தம்பலகாமம் புதுக்குயிருப்பு தமிழ் கலவன் பாடசாலையிலும் திருகோணமலை இராமகிருஸ்ணமிசன் இந்துக்கல்லூவியிலும் கற்பித்தார்.

இவர் வயலின் கலைஞராக திருகோணமலையில் கால் பதிக்கும் முன்னர் இங்கு நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளுக்கு வெளிமாவட்டங்களிலிருந்துதான் பக்க வாத்தியக் கலைஞர்கள் வரவழைக்கப் பட்டார்கள். வயலின் இசைக்கலைஞர் திரு.சோமசுந்தரத்தின் வருகைக்குப் பின் இந்தக் குறைபாடு திருகோணமலை மாவட்டத்தில் முற்றாக நீங்கியது. இவர் திருகோணமலை இசைப் பாரம்பரியத்திற்கு ஆற்றிய சேவை அளப்பெரியது.

இக்காலப்பகுதியில் இவர் தட்சணகான சபையில் வயலின் இசையாசிரியராக இணைந்து கொண்டு மாவட்டத்தில் இடம் பெற்ற இசை நிகழ்சிசிகள் அனைத்திலும் பங்கு கொண்டு உழைத்ததை அனைவரும் நன்கு அறிவர்.

தம்பலகாமம் மகாவித்தியாலயத்தில் இவர் உதவி ஆசிரியராகக் கற்பிக்கும் பொழுது இவரிடம் கணிதம் கற்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. கணக்குகளை கரும்பலகையில் விபரிக்கும் பொழுது நான் ஆச்சரியக்கடலில் மூழ்கிப்போவேன். வகுப்பிலுள்ள எல்லா மாணாக்கர்களுக்கும் புரியும் வகையில் இலகு முறையில் இவரது கற்பித்தல் அமைந்திருக்கும். அதனால் சகல மாணவர்களும் கணித பாடத்தில் ஆகக்கூடிய புள்ளிகளைப் பெற்று இவரை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியதுண்டு. கற்பிக்கும் பொழுது மிக சகசமாக பழகும் இவர் கண்டிப்பானவரும் கூட.

திருகோணமலை மாவட்டத்தில் மிகச்சிறந்த வயலின் கலைஞராக விளங்கிய இவரிடம் வயலின் இசைக்கலையைப் பழகும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டோமே என்ற ஆதங்கம் இப்பொழுதுதான் எனக்கு ஏற்படுகிறது.

கலைஞர் சோமசுந்தரம் அவர்கள் தனது தாய் மாமன் மாரிமுத்துவின் மகள் விஜயலட்சுமியை 01.09.1958 ல் திருமணம் செய்து கொண்டார். தனது மனைவியின் குரலினிமையைக் கண்ட கலைஞராகிய இவர் மனைவிக்கும் இசையைக் கற்றுக்கொடுக்கத் தவறவில்லை. இவர்களுக்கு நித்தியலட்சுமி ,பங்கயலட்சுமி ,திவ்ஜலட்சுமி ,நிமலேந்திரன், விமலேந்திரன் ஆகிய ஐந்து பிள்ளைகள்.

தம்பலகாமத்து இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ்ந்த இவர் சிறந்த வேட்டைக்காரராகவும் விளங்கினார்.  1968 ஆம் ஆண்டு சித்திரை மாதம் இரண்டாம் நாள் தன் நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற இவரை காலன் இரத்தப்புடையன் ரூபத்தில் வேட்டையாடி விட்டது. ஒரு சிறந்த கலைஞனை திகோணமலை மாவட்டத்திலேயே புகழ்பெற்ற வயலின் கலைஞனை                 இழந்தது எமது பிரதேசத்திற்கு பேரிழப்பாகும்.

வேலாயுதம் தங்கராசா.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. யாழ்த் தீபகர்ப்பத்தில், புளியங்கூடல் எனும் ஊர் உள்ளது. இங்கு ஒரு காலத்தில் புளியமரங்கள் நிறைந்திருந்ததாம். கூட்டாம்புளி எனும் ஊர் எனக்குப் புதிய தகவல்.
    வயலின் கலைஞர் சோமசுந்தரத்தின் காலத்தைப் பார்க்கும் போது, இவர் யாழ்பாண வயலின் கலைஞர் வி.கே.குமாரசாமி காலத்தையொத்தவர் போலுள்ளது.இவரும் அண்ணாமலையில் சங்கீத பூசணமாக வெளியேறி, இலங்கை வானொலியில் 'ஏ' தரக் கலைஞராக இருந்தவர்.ஆசிரியராகப் பணிபுரிந்து, யாழ் பல்கலைக்கழகத்திலும் கடமையாற்றியுள்ளார்.
    திரு சோமசுந்தரம் போல் எத்தனை கலைஞர்கள் நம் நாட்டில் குடத்து விளக்காக வாழ்ந்து சென்றுவிட்டார்கள்.
    இவர் பற்றிய இந்தப் பதிவு , ஒரு ஆவணமாக இருக்கட்டும்.

    ReplyDelete