Wednesday, September 11, 2013

சண் இசைக்குழுவின் ஸ்தாபகர் பாடகர் கலைஞர் திரு.சண்முகலிங்கம் முருகதாஸ்

Muruhadas

கல்விமேடு தம்பலகாமத்தில் பழமையில் பெரிதும் பேசப்பட்ட இடமாகும். ‘கள்ளி  மேடே’ காலப்போக்கில்  கல்வி  மேடாக மருவியது என அறிஞர் கூறுவர்.தம்பலகாமத்தில் புகழ் பூத்த கலைஞர்களும் ஆயுள்வேத வைத்தியர்களும் வாழ்ந்த இடம் கல்விமேடே.

வரலாற்றுப்புகழ் மிக்க தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலின் வெளிச்சுற்று வாழிபாடுகளில் முக்கியத்துவம் பெறுகின்ற ‘கண்ணகி அம்மன் பொங்கல்விழா’ வருடாவருடம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்ததுடன் இவ்வழிபாடுகளுக்கென ‘கடல்சூழ் இலங்கை கயபாகு மன்னனால்’ கல்வி மேட்டு ஆலையடியில் ஒரு வேள்வி வளாகமே வளங்கப்பட்டிருந்தது என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
இத்தகைய புகழ்பெற்ற கல்வி மேட்டில் கலாபூசணம் கந்தர்வகான இசைமணி திரு. க.சண்முகலிங்கம் அவர்களுக்கும் அவரது தர்ம பத்தினி பூமணி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர்தான் ‘சண்இசைக்குழுவின்’ ஸ்தாபகரும் பாடகருமாகிய முருகதாஸ் ஆசிரியர் அவர்கள்.

பரம்பரை பரம்பரையாக இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்.இவரின் பாட்டனார் தம்பலகாமத்திலேயே மிகவும் புகழ் பெற்ற ஆர்மோனிய வித்துவானாகவும் அண்ணாவியாராகவும் ,ஆயுள் வேத வைத்தியராகவும் மிளிர்ந்தவர்.
பரம்பரை பரம்பரையாகக் கிடைத்த குரல்வளமும் தந்தையாரிடம் பெற்ற இசைஞானமும் முருகதாஸை இளம்வயதிலிருந்தே நன்றாகப் பாடக்கூடியவராக வளர்த்திருந்தன. தனது தந்தையைப் போலவே சிறிய தந்தையாகிய கலைஞர் திரு.க.மகாலிங்கமும் நன்றாகப் பாட வல்லவராக இருந்தார்.

தகப்பனாரினதும் சித்தப்பாவினதும் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் நல்ல குரல் வளத்தோடு இனிமையாகப் பாடும் ஆற்றலும் பெற்றிருந்தனர். இதன்காரணமாக இவர்கள் அனைவரையும் பயன்படுத்தி ஒரு இசைக்கழகத்தை ஆரம்பித்தால் என்ன என்ற எண்ணம் முருகதாஸ் ஆசிரியரின் மனத்தில் தோன்றியது. அதன் செயல் வடிவமே ‘சண் இசைக்குழு’ என்றால் அது மிகையாகாது.

சண் இசைக்குழு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ‘வணிகத்துறை’ பட்டதாரியான திரு.ச.முருகதாஸ் ஆசிரியர் வாத்தியக் கலைஞர்கள் இல்லாத குறையை கணனிப்பொறிமூலமாகப் பெற்றுக் கொண்டு காரியத்தில் துணிந்து இறங்கினார்.

இன்று அவர் உருவாக்கிய ‘சண்இசைக்குழு’ வளர்ந்து பெருகி மூதூர் ,நிலாவெளி ,மட்டக்களப்பு ,சல்லி ,சேனையூர் ,கட்டைபறிச்சான் ,தம்பன் கடுவை போன்ற வெளியிடங்களிலும் நிகழ்ச்சிகளைத் தரமாக வழங்கும் நிலைக்கு வளர்ந்துள்ளது. குறிப்பாக பெரும்பாலும் கலாபூசணம் கந்தர்வகான இசைமணி திரு.க.சண்முகலிங்கம் அவர்களினதும் அவர் இளவல் கலைஞர் திரு.க.மகாலிங்கம் அவர்களினதும் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமே ‘சண்இசைக்குழுவில்’ பாடி வருகின்றனர்.

குறிப்பாக கலைஞர் திரு.க.மகாலிங்கம் அவர்களின் மகனாகிய திரு.ம.நாகராசா அவர்கள் தனது குரல் இனிமையாலும் அளவான சங்கீத ஞானத்தாலும் இரசிகப் பெருமக்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறார். முருகதாஸ், நாகராசா ,கிரிதரன் ,டிலக்ஷனா ,விதுஷா, நிஷாஷா, துஷாந்தி ,அஜந்தன் பிரகாஷ் ,யோகராசா மணிவண்ணன் ஆகிய இளங்கலைஞர்கள் ‘சண் இசைக்குழுவில்’ இணைந்து கொண்டு பலரும் வியந்து பாராட்டும் வண்ணம் பாடி  வருகின்றனர்.

கணனி இசையில் தமது பாடல்களை பலரும் வியக்கும் வண்ணம் பாடி வந்த ‘சண் இசைக்குழுவினர்’ விரைவில் இசைக்கருவிகளின் பின்னணியில் பாட பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். இலண்டனில் புலம்பெயர்ந்து வாழும் தம்பலகாமத்தைச் சேர்ந்த அன்பர்கள் இசைக்கருவிகளை வாங்குவதற்கு தாமே முன்வந்து நன்கொடையளித்திருக்கும் இனிப்பான செய்தி எமது காதுகளுக்கும் எட்டியுள்ளது.

சண் இசைக்குழுவினரின் பாடல்களை அவர்களது இணையத்தளமான shanisaikuzhu.blogspot.com மில் கேட்டு இரசிக்கலாம்.

வேலாயுதம் தங்கராசா


மேலும் வாசிக்க
இசைமணி திரு.க.சண்முகலிங்கம்


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!

    - கஜேந்திரசர்மா

    ReplyDelete
  2. Dear Dr
    Thampalakamam is not only famous for its fertile soil and cultivation, but also famouse for its tradition and culture, art and craft. The people are naturally gifted in their lifestyle and mindset. I learned a lot from the faomouse author Veleyuthanar. He has the Val (pen) as arms to safe guard Tamil culture and literature. Thanks to Thanka fir his researches. We have to document all these for our generation
    Kernipiththan

    ReplyDelete