Wednesday, September 18, 2013

தம்பலகாமத்தின் இளங்கவிஞன் கணேசபிள்ளை சுமன்


தம்பலகாமத்தின் இளங்கவிஞனாகிய திரு.கணேசபிள்ளை சுமனின் ‘ஊன்றிய விழுது’ ‘பிரபஞ்சம்’ ஆகிய இரு கவிதைத் தொகுதிகள் அண்மையில் தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் வெளியிடப்பட்டன.

திருகோணமலை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.கு.திலகரத்தினம் அவர்களின் தலைமையில் இவ்வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக இடம் பெற்றது. தம்பலகாமத்தின் பிரதேசச் செயலர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இவ்விழாவைச் சிறப்பித்தார்.
ஆசிரியர் திரு.த.சிவராசசிங்கம் ,சண் இசைக்குழுவின் ஸ்தாபகர் கலைஞர் திரு.ச.முருகதாஸ் ஆசிரியர் போன்றோரின் நூல் ஆய்வுரைகள் சிறப்பாக இடம் பெற்றன. தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனாகிய திரு.க.சுமனின் இம்முயற்சியை பெரிதும் பாராட்டிய வித்தியாலய அதிபர் திரு.வே.தவராசா அவர்கள் நூல் வெளியீட்டுக்கான சகல விதமான ஏற்பாடுகளையும் தாமும் தமது ஆசிரிய குழாமும் மாணவச் செல்வங்களும் சேர்ந்து சிறப்புறச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.


திருகோணமலை ‘அம்மா பதிப்பகத்தின்’ 15வது வெளியீடாக ‘பிரபஞ்சமும்’ 19வது வெளியீடாக ‘ஊன்றிய விழுதும்’ வெளியிடப் பட்டுள்ளன. பதிப்பகத்தின் ஸ்தாபகர் கலாபூஷணம் திருமலை சுந்தா அவர்களும் கலாபூஷணம் தம்பி தில்லை முகிலன் அவர்களும் ,தம்பலகாமத்தின் பிரதேசச் செயலக கலாச்சார உத்தியோகத்தர் திரு.வி.குணசீலன் அவர்களும் வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்து விழாவைச் சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

புதுக்கவிதை வடிவமைப்பில் அமைந்துள்ள இக்கவிதை நூலை தம்பி தில்லை முகிலன் பெரிதும் பாராட்டியுள்ளார். தம்பலகாமம் பொற்கேணியைப் பிறப்பிடமாகக் கொண்ட கணேசபிள்ளை இரஞ்சிதமலர் தம்பதிகளுக்கு மூத்த பிள்ளையாகப் பிறந்தவர்தான் நமது பாராட்டுதலுக்கு உரியவரான கவிஞர் திரு.க.சுமன் அவர்கள்.


தனது ஆரம்பக்கல்வியை தம்பலகாமம் குளக்கோட்டன் வித்தியாலயத்திலும் பின்னர் க.பொ.த.சாதாரணதரம் வரை தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்திலும் கற்ற இவர் வறுமை காரணமாக கல்வி முயற்சியை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக கவலையோடு தெரிவித்தார்.

வன்செயலில் தனது தந்தையை இழந்த இவருக்கு வாழ்க்கை பல புதிய அனுபவங்களைக் கற்றுக் கொடுத்தது. இந்த அனுபவங்கள் அவரது கவிதைகளில் இளையோடுவதைக் காணலாம். தன் கையிலே கிடந்த ஒரு வளையலை விற்று கைத்தொழிலாக அரிசி மா வியாபாரத்தைத் தாய் ஆரம்பிக்க சுமன் தாய்க்கு உதவத் தொடங்கினார். ‘எல்லாப்பிள்ளைகளும் அணில் ,ஆடு எனக் கற்கின்ற காலத்தில் நான் அகப்பை உரல் உலக்கை எனக் கற்கத் தொடங்கினேன்’ என அவர் தன்னைப்பற்றி கூறும் பொழுது நம் கண்கள் பனிக்கின்றன.

தன்னைப்பற்றி அவர் கூறும் பொழுது புன்னகைத்தவாறே ‘எல்லாரும் பள்ளி சென்று படித்த காலத்தில் தான் கொள்ளி பிறக்கச் சென்றதாகக் கூறுவார். ‘வாழ்க்கை என்னும் புத்தகத்தில் வறுமை என்னும் பாடத்தை மட்டுமே தான் முழுமையாகக் கற்றுக் கொண்டதாகச் சொல்லுவார். எனினும் அவரிடம் அசையாத உறுதியிருந்தது. என்னால் முடியும் என்ற எண்ணம் இருந்தது. அதன் வெளிப்பாடே இந்த இரு புத்தக வெளியீடுகளாகும். அவருடைய தன்நம்பிக்கையை நாம் பெரிதும் பாராட்ட வேண்டும்.

எங்கும் வயலிருக்கும் எழிலோ பரந்திருக்கும்
நுங்குப் பனையிருக்கும் நேராய் வளர்ந்திருக்கும்
அங்கம் சிலிர்க்குதே அதனழகைப் பாரடா! 

என்று தனது ஊரின் சிறப்பை கவிதையில் சுமன் கூறும் பாணி தனித்துவமானது.  அவரது அயராத முயற்சியைப் பாராட்டுவோம்.

வேலாயுதம் தங்கராசா



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. நூல்கள் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete