Friday, September 27, 2013

'தமிழ்த் தேரர்கள் ஆற்றிய பணிகள்' - இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 2

புத்தர்

தமிழ்ப் படைத்தளபதி கணவதி தண்டநாதனார் பாதுகாப்பில் இருந்த திரியாய் விக்கிரமசலாமேகன் பெரும்பள்ளி

1980 ஆம் ஆண்டு திருகோணமலை நகரத்துக்கு வடக்கே புல்மோட்டைக்குச் செல்லும் பாதையில் 35 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் திரியாய் பகுதியில்  மயிலன்குளம் என்னுமிடத்தில் ஒரு தமிழ்ச் சாசனம் அடையாளம் காணப்பட்டது.

கி.பி 1128 இல் எழுதப்பட்டதாகக் கருதப்படும் இச்சாசனம் ஜயபாகு மன்னனின் 18 ஆம் ஆண்டுக்குரியதாகும். அக்காலப்பகுதியில் திரியாய் பகுதியில் இருந்த உதுத்துறை விக்கிரமசலாமேகன் பெரும்பள்ளி என்னும் பௌத்தப் பள்ளி தமிழ்ப் படைத்தளபதி கணவதி தண்டநாதனார் பாதுகாப்பில் இருந்ததை இது உறுதிப்படுத்துகிறது.
சோழருடைய ஆட்சி விலக்கப்பட்ட பின்னரும் திருகோணமலையில் செல்வாக்கு கொண்டிருந்த தமிழ்ப் படையான வேளைக்காறப் படை இங்கு விக்கிரமசலாமேகன் நாற்படை என குறிப்பிடப்படுகிறது. அத்துடன் இதிலிருந்த நாற்படையினர் பௌத்த சமயச் சார்புடையவர்கள் என்பதனையும் அறியக்கூடியதாக இருக்கிறது.

இதேவேளை 13 ஆம் நூற்றாண்டுக்குரியதாகக் கருதப்படும் பதவியாவிலுள்ள வேளைக்காற சாசனம் லோகநாதன் என்னும் சேனாதிபதி பௌத்த விகாரம் ஒன்றினை அமைத்து அதன் பாதுகாவலராக வேளைக்காறரை நியமித்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே இன்று இலங்கையில் வடகிழக்குப் பகுதியில் காணப்படும் புராதான பௌத்த விகாரைகள் தொடர்பான புரிதலுக்கு இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' பற்றிய ஆராய்வு அவசியமாகிறது.

புத்தர்

'தமிழ்த்  தேரர்கள் ஆற்றிய பணிகள்' 

பௌத்தத்தின் திரிசரணம் அல்லது மும்மணி என அழைக்கப்படுவது "புத்தம், தர்மம், சங்கம் ". இதில் 'சங்கம்' என்றால் பௌத்த பிக்ஷுக்களின் கூட்டம். இதுவே இந்த மதம் உலகமெங்கும் பரவுவதற்குக் காரணமாயிருந்தது.

இவர்கள் அந்தந்த நாடுகளில் பேசப்படும் தாய்மொழியில் தங்கள் சமய உண்மைகளை எழுதியும், பேசியும் வந்தனர். இது தமிழில் பௌத்தம் தொடர்பான இலக்கண, இலக்கியங்கள் பலதோன்றுவதற்கு காரணமாக இருந்தது.

'தமிழ் பௌத்தம்'  எறக்குறைய கி.மு 2ம் நூற்றாண்டு முதல் கி.பி 10ம் நூற்றாண்டு வரையில் தமிழ் நாட்டில் உயர் நிலை பெற்றிருந்தது. இதில் தமிழ் பௌத்த துறவி என்றவுடன் நம் கண்முன் வருபவர் கோவலன் மகள் மணிமேகலை.

மணிமேகலை - ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலா காவியத்தின் தலைவி. கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒரு புத்தத் துறவியாக வளர்த்தாள்.

மணிமேகலை புகார்ப்பட்டினத்துக்கு அருகில் இருந்த சக்கரவாளக் கோட்டத்தில்  இருந்த குருடர், முடவர், பசிநோய்கொண்ட வறியவர் முதலியவர்களுக்கு உணவு கொடுத்து ஆதரித்த செய்தியை  மணிமேகலையின் 17ஆம் காதை சொல்கிறது.  அத்துடன் சிறைக்கோட்டம் சென்று சோழ அரசன் ஆதரவுடன் அதனை அறக்கோட்டமாக்க மாற்றி சிறையில் வாடும் மக்களுக்கு உணவு கொடுத்த  செய்தியை  மணிமேகலையின்  19ஆம் காதை உரைக்கிறது.

இதுபோலவே தமிழ்த் தேரர்கள் நாட்டுமக்களுக்கு நன்மை புரிந்து கொண்டே பௌத்தமதத்தின் கொள்கைகளையும் போதித்து வந்தபடியால், 'தமிழ் பௌத்தம்' தமிழ்நாட்டில்  நன்கு பரவியது.

புத்தர்

தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெறுவதற்காகப் போட்டியிட்ட நான்கு வடநாட்டுச் சமயங்களில் ஆசீவகமதம் பின்னடைந்துவிட பௌத்தம், ஜைனம், வைதீகம் என்னும் மூன்று மதங்களுக்கு இடையில் பிற்காலத்தில் சமயப்போர் நிகழ்ந்தது.இது கலகங்களாக மாறி அதனை அடக்க அரசன் தலையிட்ட செய்தியை  மணிமேகலை இவ்வாறு பதிவு செய்கிறது.
"ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்;
பற்றா மாக்கள் தம்முட னாயினும்,
செற்றமுங் கலாமுஞ் செய்யா தகலுமின் "

சாத்தமங்கை முதலிய இடங்களில் சம்பந்தரும்,சிதம்பரத்தில் மாணிக்க வாசகரும் பௌத்தருடன் வாதம் செய்து அவர்களைத  தோற்பித்துச் சைவராக்கியதும், இலங்கைக்குத் துரத்தியதும் வரலாறு.

கி.பி. 8 ம் நூற்றாண்டில் சமண சமயக் குருவான பேர்பெற்ற ஆச்சாரியரான அகளங்கர் காஞ்சிபுரத்தில் பௌத்த கோயிலாக இருந்த காமாட்சி அம்மன் ஆலயத்தில் பௌத்த பிக்குகளுடன் சமயவாதம் செய்து அவர்களை வென்றார். தோல்வியுற்ற பிக்குகள், இலங்கைக்கு சென்று விட்டனர்.

                            த.ஜீவராஜ்                                                                           தொடரும்....


ஆதாரங்கள்

1. இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பேராசிரியர்.சி.பத்மநாதன்.2006.
2. பௌத்தமும் தமிழும் - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)
3. சமணமும் தமிழும் -  மயிலை சீனி. வேங்கடசாமி




இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. அருமையான கட்டுரை.
    நன்றி

    ReplyDelete