Wednesday, April 01, 2015

ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வரலாற்றுப் பொக்கிசங்கள் - புகைப்படங்கள்


திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா  சிறப்புற இடம்பெற்று வருகிறது. திருகோணமலை நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இவ்வாலயம் ஈழத்திலுள்ள தொன்மையான சக்திபீடங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. இவ்வாலயத்தின் தோற்றக்காலம் பற்றிய தரவுகள் தெளிவாக கிடைக்கவில்லையாயினும் 11ம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற்று விளங்கியமைக்கான சான்றுகள் உள்ளதாக பேராசிரியர் திரு.செ.குணசிங்கம் அவர்களின் குறிப்புகளில் இருந்து தெரியவருகிறது.

காலணித்துவ ஆக்கிரமிப்பின் போது இங்கிருந்த புராதான ஆலயம் அழிக்கப்பட்டிருக்கிறது. அந்நியரின் ஆக்கிரமிப்பிலிருந்து தற்காலிகமாக பாதுகாத்துக்கொள்ளும் நோக்குடன் ஆலய வளவில் புதைத்து வைக்கப்பட்டதாக கருதப்படும் செப்புக் கிடாரமும், அதற்குள் வைத்துப் பாதுகாக்கப்பட்டிருந்த பத்திரகாளி அம்பாளின் விக்கிரகத்தினையும் கீழே படத்தில் காணலாம்.


 முதலாம் இராஜேந்திர சோழனின் புகழ் பேசும் இரு மெய்க்கீர்த்திகள் திருகோணமலை நகரப் பகுதியில் கிடைக்கப்பெற்றன. அவற்றுள் ஒன்று திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம் கட்டப்பட்ட போது அவ்வாலயத்தில் வைத்துக் கட்டப்பட்ட புராதான தூணில் உள்ளது. அதனைப் பலமுறை தேடியபொழுதும் இதுவரை எனக்கு நேரடியாக பார்க்கக் கிடைக்கவில்லை.  எனினும் அக்கல்வெட்டு உள்ள தூணின் அரிய புகைப்படத்தினை தந்துதவியவர் திருகோணமலையின் மூத்த புகைப்படப்பிடிப்பாளர் திரு.பாக்கியநாதன் அவர்கள்.

இந்தத் தூணின் நான்கு பக்கங்களிலும் முதலாம் இராஜேந்திர சோழனின் புகழ் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அத்தூணின் ஒரு பகுதி சீமேந்துப் பூச்சினால் மறைந்துவிட ஏனைய மூன்று பக்கங்களிலிருந்த வாசகங்கள் மட்டுமே வாசிக்கக் கூடியதாக இருந்தது.
மேலும் வாசிக்க...
 திருகோணமலையில் சோழர்களின் மெய்க்கீர்த்திகள் - புகைப்படங்கள் 

இவ்வாசகங்களிலிருந்து வரலாற்றுரீதியான முக்கிய விடையங்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அதனை ஒரு ஆலயத்திற்கான நன்கொடைச் சாசனமாகக்கருதமுடியும். திரு.சோமாஸ்கந்த குருக்கள் உதவியுடன் திரு.நா..தம்பிராசா அவர்களின் முயற்சியினால் பேராசிரியர் செ.குணசிங்கம் அவர்களால் வாசிக்கப்பட்டு வீரகேசரி மூலம் 1972 ஆம் ஆண்டில் வெளிப்படுத்தப்பட்ட இக்கல்வெட்டின் நான்காவது பக்கத்தை வாசிப்பதற்கான முயற்ச்சி 2004ஆம் ஆண்டில் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டபோதும் பயனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Three Cola Inscriptions from Trincomalee S.Gunasingam 1979

Three Cola Inscriptions from Trincomalee S.Gunasingam 1979



இக்கல்வெட்டுடன் ஒரு பிற்கால நன்கொடைச் சாசனமும் இங்குள்ளது.  1878 ஆம் ஆண்டுக்குரிய ‍அக்கல்வெட்டு வருமாறு.

உ  காளி அம்மனுக்கு
அயி  செம்புலிங்கம்
செய்து கொடுத்தது
1878
தை  மீ
ஆசாரி
த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. சிறந்த வரலாற்றுப் பதிவுகளைத் தரும் தங்கள் முயற்சிகளைப் பாராட்டுகிறேன்.
    தொடருங்கள்

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    அறிய முடியாத தகவல் தங்களின் வரலாற்று பதிவு வழிஅறிந்தேன் பகிர்வுக்கு நன்றி ஐயா...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. தங்களின் கருத்துறைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete