Tuesday, April 21, 2015

'கொட்டியாபுரத்துச் சிங்கம்' - (கி.பி 1600-1700) - புகைப்படங்கள்


நண்பர் Dr. அரு­மை­நாதன் ஸதீஸ்­குமார் சம்­பூரைப் பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர்.  சம்பூர் மகா வித்­தி­யாலயம்,  திரு­கோ­ண­மலை ஸ்ரீ கோ­ணேஸ்­வரா இந்துக் கல்­லூரி ஆகி­ய­வற்றின் பழைய மாண­வர். இவர் தற்­போது திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லையில் வைத்தியராக கட­மை­யாற்றிக் கொண்­டி­ருக்­கிறார். சமூக அக்கறையும், இடைவிடாத வரலாற்றுத்தேடலும், மொழிப்பற்றும் கொண்டவர்.

அவரது சம்பூர் பிரதேசத்தின் தொன்மை என்ற வரலாற்று நூல் 2013 இல் வெளிவந்திருந்தது.  2014 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வெளிவந்த சிறந்த நூல்களை எழுதிய ஆசிரியருக்கான விருதினை இந்நூல் அவருக்குப் பெற்றுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


நண்பர் வைத்தியகலாநிதி ஸதீஸ்குமார் உடன் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின்  தலைமையில் தமிழர் வரலாற்றாதாரங்கள் தேடும் பயணமொன்றில் கலந்துகொண்ட நினைவுகள் எனது வாழ்வில் மறக்கமுடியாதவையாகும்.


தொடர்ந்தும் விடாமுற்சியுடன் வரலாற்றுத் தேடல்களில் ஈடுபட்டுவரும் சம்பூர் ஸதீஸ் தனது இரண்டாவது நூலான 'கொட்டியாபுரத்துச் சிங்கம்' என்னும் வரலாற்றுக் குறுநாவலை 25.04.2015 மாலை 4.00 மணிக்கு வெளியிட இருப்பதையிட்டு எனது மகிழ்ச்சியையும் ,வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நட்புடன் ஜீவன்.
...............................................................................................................................................................
'கொட்டியாபுரத்துச் சிங்கம்'  நூலில் இருந்து சில பகுதிகள்


கொட்டியாபுரத்துச் சிங்கம் நூலிற்கான அறிமுகங்களில் இருந்து சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு. இவை அந்நூலில் இடம்பெற்றிருக்கும் முழுமையான கட்டுரை வடிவங்கள் அல்ல என்பதனைக் கருத்தில் கொள்க..
...................................................................................................................................................
 Dr. அரு­மை­நாதன் ஸதீஸ்­குமார்


வரலாற்றுத் துறையில் எனக்கு ஏற்பட்ட ஆர்வம் காரணமாக எனது சம்பூர் மண்ணின் வரலாற்றை முதலில் பதிவு செய்து 2013ஆம் ஆண்டில் வெளியிட்டேன். இதற்காக பல நூல்களைத் தேடி வாசிக்கும் போது திருகோணமலை மாவட்டம் சார்ந்த பல வரலாற்றுத் தகவல்கள் என்னை வியக்க வைத்தன. அதிலே குறிப்பாக கொட்டியாபுரப்பற்று (மூதூர்,சேருவில, வெருகல்) பிரதேசத்தை ஆட்சி செய்த “இளஞ்சிங்க வன்னிமை” காலத்தில் (கி.பி 1600-1700) இங்கு இடம்பெற்ற சிலசம்பவங்கள் இவ்வன்னியனார் நாட்டுப்பற்றும்,  தமிழ்ப்பற்றும் நிறைந்தவர் என்ற உணர்வை என்னுள் ஏற்படுத்தியது. இதுவே இச் சரித்திர குறுநாவல் பிறக்கக் காரணமாகும்.

இந்நாவலானது இளஞ்சிங்க வன்னியனார் ஒல்லாந்தப்படைகளுடன் போர் புரிந்து அதிலே வெற்றி பெற்று அவர்களை கொட்டியாபுரப் பகுதியில் இருந்து விரட்டியடித்தமை, வெருகல் சித்திரவேலாயுதர் காதல் என்னும் நூல் கண்டியரசன் இராசசிங்கன் முன்னிலையில் அரங்கேற தலைமை வகித்தமை ஆகிய இரு உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு
வரையப்பட்ட ஒரு கற்பனை கலந்ததாக அமைந்துள்ளது. எனினும் இங்கே செனரத் மன்னன், இராசசிங்கன், குமாரசிங்கன், விஐயபாலா,கொன்ஸ்ரான்ஸ்டைன் டீ சா மற்றும் வீரக்கோன் முதலியார் ஆகிய
உண்மையான கதாபாத்திரங்களுடன் இக்கதை நகர்கிறது. பல பிற்காலப் பரம்பரை வன்னிமைகளோடு தொடர்பு பட்ட நகரமாக மேன்காமம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதனால் இதுவே இக் கொட்டியாபுரப்பற்றின் தலைநகரமாக இருந்திருக்க இடமுண்டு. அத்தோடு இங்கு கூறப்படும் ஏனைய இடப்பெயர்களுள் அனேகமானவை இன்றளவும் உச்சரிக்கப்படுபவைகளாக உள்ளன. இவைகள் யாவும் கொட்டியாபுரப்பற்று பிரதேசத்தின் வரலாற்றுப் பதிவுகளாக அமையும் என்றெண்ணி மகிழ்கின்றேன்.


இக் குறுநாவலை 2014 ஆம் ஆண்டில் தொடர்ந்து இருபது வாரங்களாக தமிழ் மக்களின் கிழக்குப் பிராந்திய பத்திரிகையான மலைமுரசு பத்திரிகை
“கொட்டியாபுரத்து சிங்கம்” என்னும் தலைப்பில் பிரசுரித்திருந்தது. தமிழ் இலக்கிய வாசகசமூகம் இக்குறுநாவலை இன்முகத்துடன் ஏற்றுக்
கொள்ளும் என்ற எதிர்பார்ப்புடன் இந்நாவலை திறக்கின்றேன்.

............................................................................................................................................
கலாபூசணம் மூதூர் முகைதீன்

இலக்கியத் துறையில் கால் பதிக்க விரும்பும் இளம் படைப்பாளிகள் பெரும்பாலும் கவிதை, சிறுகதையிலேயே அதிக நாட்டம் கொண்டவர்களாக தங்கள் படைப்பாற்றலை வெளிக்கொணர்வதை நாம் அதிகம் கண்டிருக்கிறோம். ஆனால் இதனை புறந்தள்ளும் வகையில் வரலாறு, நாவல் போன்ற இலக்கிய கனதியான பரப்புகளில் நின்று தன் கன்னிப் படையலாக ஒரு வரலாற்று நூலினை எழுதி அறிமுகமானவரே சம்பூர்மண் ஈன்ற மைந்தன் வைத்திய கலாநிதி அ.ஸதீஸ்குமார் அவர்கள்.
           
 “சம்பூர் பிரதேசத்தின் தொன்மை" என்னும் வரலாற்று நூலின் மூலம் தன் முதல் தடத்தை இலக்கிய உலகில் பதித்து அதற்காக கிழக்கு மாகாண  கலாசார பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் சிறந்த நூலுக்கான விருதையும் 2014ம் ஆண்டு பெற்றதன் மூலம் தனக்கும் எமது பிரதேசத்திற்கும் பெருமை தேடித்தந்தவர் அ.ஸதீஸ்குமார். இதனை தொடர்ந்து 'கொட்டியாபுரத்து சிங்கம்' என்ற இவ்வரலாற்று நாவலை இலக்கிய சுவைஞர்களுக்கு நல்லதொரு  தீனியாக படைத்தளித்துள்ளார்.

 கடந்த கால் நூற்றாண்டுகால உள்நாட்டு யுத்தத்திற்கு பிறகு பலராலும் அதிகம் பேசப்படும் ஒரு ஊராக சம்பூர் பிரசித்தம் பெற்று விளங்குகின்றது. ஒரு காலத்தில் புகழ்மிக்க வரலாற்றைக் கொண்ட சம்பூர் கிராமம் இன்று பல்வேறு காரணிகளால் அழிக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட  ஒரு இடமாக உலகின் கண்களில் காட்சியாக்கப்பட்டுள்ளது.  இங்கு வாழ்ந்த மக்களின் இருப்பு இன்று கேள்விக்குறியாக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ள இந்நூல் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பலாம் இலக்கிய படைப்புகள் காலத்தின் கண்ணாடி என்பார்கள். அந்தவகையில் இந்நாவல் காலத்தின் தேவைகருதி எழுதப்பட்டதாகவே நான் பார்க்கிறேன்.

இதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள், நிகழ்வுகள் பற்றி இன்றைய தலைமுறையினர் யாரும் அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். இத்தகைய வரலாற்று சிறப்புகள் கொட்டியாரப்பற்று பிரதேசத்தில் இருந்துள்ளதை இந்நூல் மூலமாகவே அறிந்து நானும் ஆச்சரியப்பட்டேன். கொட்டியாரப்பற்றில் புதைந்துபோன ஒரு வரலாற்றுப் புதையலை அகழ்ந்தெடுத்து அதனை அனைவருக்கும் அறியப்படுத்தும் அரியதொரு முயற்சியில் ஆசிரியர் தன் முத்திரையை பதித்துள்ளார்.

இதில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்ததாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தின் புவியியல் அமைப்பு, இடப்பெயர்கள், பயணமார்க்கங்கள் யாவும் இன்றுள்ளது போலவே அன்றும் காணப்பட்டதை இந்நூலில் அறியக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  மேலும் இந்நாவலின் நாயகனான இளஞ்சிங்கனின் தோற்றம், அந்நிய படையெடுப்பு, கண்டிப் பயணம், காதல்,  போர் போன்ற பல விடயங்களை அன்றைய கலாசார பண்பாட்டுச் சூழலோடு ஆசிரியர் நகர்த்திச் செல்லும் பாங்கு சங்ககால இலக்கியக் காட்சிகளை நினைவுபடுத்துவதாக   உள்ளது.

 இதனை வாசிக்கும்போது வன்னிமை சிற்றரசின் இளவரசர் இளஞ்சிங்கன், வெற்றிமாறன், தாமரை போன்ற கதாபாத்திரங்களுடன் நாமும் வாழ்வதுபோன்ற உணர்வு நிலையே மனதில் ஏற்படுகின்றது. புதிய சொற்பிரயோகங்களைக் கையாண்டு ஆற்றொழுக்கான நடையுடன் சுவைபட கதையைக் கூறும் ஆசிரியரின் எழுத்தாற்றல் மிகவும் பாராட்டும்படியாக உள்ளன.
.......................................................................................................................................................
இரா.ஸ்ரீஞானேஸ்வரன் (மலைமுரசு)

தமிழர்களின் வரலாற்றைக் கட்டுரைகளாகவும், கதைகளாகவும் குறுந்தொடர்களாகவும் எழுதி அவற்றைப் புத்தகங்களாக எமக்காகவும், எதிர்காலச் சந்ததியினருக்காகவும் விட்டுச் செல்ல மிகச் சிலரே எம்முடன் இருக்கின்றனர். அவ்வாறான மிகச் சிலரில்  ஒருவரே வைத்திய கலாநிதி சம்பூர் ஸதீஸ்! அவர் என்னுடன் அறிமுகமாகிய பின்னர் இவ் வரலாற்றுக் குறுநாவல் எமது பத்திரிகையான மலைமுரசில் தொடராக வெளியாகியது.

ஒரு நாடு, இனம், மொழி, பண்பாடு, தனிமனிதன், தலம், பொருள், போர் எனப் பல இருந்தாலும், முக்கியமாகப் பார்க்கப்படுவது உலகில் மனித இனம் தோன்றிப் பரவிப்  பெருகி அழிந்து தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மாந்தரினங்களின் பழமை, தொன்மை, நாகரிகம், வாழ்வியல் என்பவற்றை எழுதுவதே வரலாறு என வணக்கம்லண்டன் என்ற வலைத்தளத்தில் வாசிக்கக் கிடைத்தது. எனவே எமது பழமை, தொன்மை, நாகரிகம், வாழ்வியல் ஆகியவற்றைத் தேட முயலும் பண்டைத் தமிழரின் வரலாறானது அக்கால மக்களின் நாளாந்த வாழ்வியலைப் பாடுவதைக் குறைத்துக்கொண்டு அக்காலத்தில் கோலோச்சிய மன்னர்களின் வீரதீரத்தையும், காதலையும்  முன்கொண்டுவரும் முயற்சிகளையே எம்முள் இழையோடச்செய்துள்ளது.

அதன்பாற்பட்டு வரலாற்றை எந்த இலக்கிய வடிவத்திற்குள் அடக்கி மக்களுக்குப் படைப்பது என்பதில் காலத்திற்குக் காலம் வேறுபாடுகள் காணப்படுவதுடன் அவற்றை வரைபவர்களின் இரசனைகளுக்கேற்பவும் அவர்கள் தேர்வு செய்யும் இலக்கிய வடிவம் வேறுபட்டு நிற்கின்றது. அதன்போக்கில் தற்போது வரலாற்றைச் சுவை மிக்க கதைகளாக மாற்றும் முயற்சியின் படியொன்றாகவே இக்குறுநாவலை நான் பார்க்கின்றேன். கொட்டியாபுரத்துச் சிங்கம் என்ற இந்தக் குறுநாவலில் பேசப்பட்டுள்ள இடங்கள் எமக்கு மிகப் பரிச்சயமான இடங்களே. ஆனால் கதைமாந்தரோ எமது வரலாற்றில் எமக்காகப் போரிட்ட, ஆனால் எம்மால் நனவுலகில் எட்டமுடியாத மனிதர்கள்.

பரிச்சயமான இடங்களின் ஊடாகப் பரிச்சயமற்ற மாந்தர்களை உலாவச் செய்யும் ஸதீஸ்,  நாம் நனவுலகில் காண முடியாது என எவர்களை எண்ணிக்கொண்டிருக்கின்றோமோ அவர்களை எம் கண்முன்னே நிறுத்த முயற்சிக்கின்றார். அதில் அவர் பெற்ற வெற்றி கணிசமானது. இவ்வெற்றியினால் கவரப்படுகின்ற வாசகன் அந்த வரலாற்றுக் கதைமாந்தர் தொடர்பாக மேலும் அறிந்துகொள்ளத் தூண்டப்படுகின்றான். இவ்வாறு தூண்டப்படும் வாசகன் கொட்டியாபுர வரலாற்றை வாசிக்கத் தொடங்கிவிடுவான். ஸதீஸ் அதற்கான ஆரம்பத்தை தனது குறுநாவல் ஊடாக உருவாக்கித் தந்துள்ளார்.
..........................................................................................................................................................
கலாபூசணம் வே.தங்கராசா

Dr.ஸதீஸ்குமார் திருகோணமலையின் சம்பூர் மண்ணின் புதல்வர். தளராத வரலாற்றுத்தேடலோடு,  அயராது அவற்றை ஆவணப்படுத்தும் ஆவலும் கொண்ட துடிப்பான இளைஞர். அவரது இடையறாத முயற்சியின் வெளிப்பாடுதான் இந்தக் குறுநாவல்.

கதையின் நாயகனான கொட்டியாரப்பற்று இருமரபுத்துய்ய இளஞ்சிங்க வன்னியனார் வீரமும், தமிழ்ப்பற்றும் ஒருங்கே கைவரப்பெற்றவர். அவரது காலத்தில் கொட்டியாரப்பற்று நிர்வாகத்தின் கீழ் இருந்த நிலங்களைக் கைப்பற்ற ஒல்லாந்தரால் மேற்கொள்ளப்பட்ட படைநடவடிக்கையை வீரத்துடன் எதிர்கொண்டவர்.

கிராமங்களுக்குள் நுளைந்த ஒல்லாந்தப் படையினரை கொட்டியாரப்பற்று இளஞ்சிங்க வன்னியனாரின் படைகள் சுற்றிவளைத்துத் தாக்கியதில் படையெடுத்துவந்த 46 படைவீரர்களில் 45 பேர் கொல்லப்பட ஒரு ஒல்லாந்துச் சிப்பாய் மட்டும் உயிர் தப்பியதும், அந்நிகழ்வினை அடுத்து ஒல்லாந்துப்படை திருகோணமலைக் கோட்டைக்குள் முடங்கியதும் அவரது வீரத்தின் ஒரு அடையாளம்.

துன்னுமிரு மரபுந் துய்யவிளஞ் சிங்கமெனும்
வன்னிமை பொற்பாதம் வணங்கையினி சொல்லாதை

என்று ‘வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல்’ தந்த தம்பலகாமத்தின் முதுபெரும் கவிஞன் வீரக்கோன் முதலியார் பாடி வெருகல் ஆலய மண்டபத்தில் தேச மக்கள் கூடியிருந்த மகாநாட்டில் இருமரபுத்துய்ய இளஞ்சிங்க வன்னியனார் முன்னிலையில் அதனை அரங்கேற்றியது அவரது மொழியார்வத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இன்னும் வெளிப்படுத்தப்படாத பல வரலாற்றுப் பொக்கிசங்களால் நிறைந்த பூமி திருகோணமலை. அதில் வாழ்ந்த சரித்திர நாயகன் கொட்டியாரப்பற்று இருமரபுத்துய்ய இளஞ்சிங்க வன்னியனாரை நம்மனக்கண் முன் கொண்டுவரும் இந்தப் படைப்பு மிகச்சிறந்த ஆவணப்படுத்தல் என்பதில் ஜயமில்லை.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

 1. வணக்கம்
  ஐயா.
  நினைக்கும் போது மகிழ்ச்சியாகஉள்ளது . யாரும் அறியாத வரலாற்று சுவட்டை தூசி தட்டி இந்த நூற்றாண்டில் உள்ள இளைய சமுதாயத்துக்கு கொடுக்கும் ஒரு அழியாக் பொக்கிஷம்..இந்த நேரத்தில் வைத்தியகலாநதி சதீஸ்குமார் அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நிகழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.

  நிகழ்வை மிகச் சிறப்பாக எழுத்தாக்கம் செய்து அனைவர் பார்வைக்கும் தெரியும் படி பதிவாக பதிவிட்டமைக்கு எனது நன்றிகள் ஐயா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. எமது தமிழினம் இவ்வளவு வரலாற்றுப் பெருமைகளுக்கும் சொந்தமானது என எண்ணும்போது உள்ளம் நெகிழ்கிறது ஐயா. நன்றி வரலாறு தொடரட்டும்

  ReplyDelete