Wednesday, September 18, 2013

ஆலங்கேணி எனும் அற்புதக் கிராமம் - கேணிப்பித்தனின் ஞாபகமீட்டல்

ஆலங்கேணி

உப்பு நீர்ச் சிற்றாறு ஊரும் - தென்றல்
ஓடி வந்து மரஞ்செடியில் சாரும்
செப்பலியும் மீனினமும் கூடும் - ஊரி
சேர்ந்து ஊதச் சிள்வண்டும் பாடும்.

கண்ணா வேர் மூச்செறிந்து வெடிக்கும் - கேட்ட
கான் குருவி மேலெழுந்து நடிக்கும்
மண் அளைந்து நண்டு விளையாடும் - மேதி
மாவலியின் தண் கரையை நாடும்

தென்னை யோடு மாபலாவும் ஆடும் - நாவில்
செந்தமிழும் தேன்சுவையும் கூடும்
புன்னை பனை பூச்சொரிந்து வீசும் - பசு
புற்தரையில் மேய்ந்து சுகம் தேடும்.

வயல் விளைந்து வண்டியிலே ஏறும் - மனம்
வானுயரும் உழைப்பினிலே மூழ்கும்
செயல் நிறைந்து ஆலங்கேணி படுக்கும் - சனம்
செய் தொழிலில் ஈடுபட்டுக் கிடக்கும்

இது ஆலங்கேணியைப் பற்றி என்னால் பாடப்பட்ட பாட்டு. ஆலங்கேணி நான் பிறந்து வளர்ந்த இயற்கை எழில் கொஞ்சும் கிராமம். ஆலங்கேணி கொட்டியாரக்குடாக் கடலின் தாலாட்டில் கிடக்கிறது. பனைகளும் தென்னைகளும் ஓலைகளை வீசிச் சுகம் காட்டும். 

கடற்கரையோரமாக அடம்பன் கொடி ஊதாநிறத்தில் பூக்களை விரித்துப் படர்ந்து மூடியிருக்கும். இடையிடையே இராவணன்மீசை எனப்படும் ஒருவகைப் புல்லினப் படர்கொடி தொட்டந்தொட்டமாக வளர்ந்திருக்கும். அதன் காய்கள் முற்றி முட்பந்தாகப் புல்லைவிட்டுக் கழன்று காற்றில் உருண்டு ஓடும். அவற்றை எடுத்துச் செல்வோம். வீட்டு வளைகளில் வைத்தால் எலி எட்டியும் பார்க்காது. அதன் முள் குத்திவிடும். 

கடற்கரையில் இருந்து சுமார் மூன்று கிலோமீற்றருக்கு அப்பால் ஆலங்கேணிக் கிராமக் குடியிருப்பு இருந்தது.  உப்புநீர்ச் சிற்றாறுகள் கிராமத்தைச் சூழ்ந்து ஓடும்.  இரண்டு ஆலமரங்கள் சமதூரத்தில் நின்றன. அதன் நடுவே ஓரு  கேணி இருந்தது. அதனால் ஆலங்கேணி என்ற பெயர்வரக் காரணமாக இருந்ததாக எம்முன்னோர் கூறிவைத்தனர். அக்கேணிதான் ஆலங்கேணி விநாயகரின் தீர்த்தக் குளமாக இருந்தது. 

ஆலங்கேணியில் திண்ணைப்பள்ளிக் கூடங்கள்தான் இருந்தன. ஒரு ஆலமரத்தின் கீழ் ஆனைமுகன் கோயில் இருக்கிறது. கோயிலின் முன்னால் திண்ணைப்பள்ளிக்கூடம் இருந்தது.  திரு.த.குழந்தைவேல் அதன் ஆசிரியராக இருந்து அருஞ்சேவை செய்துள்ளார். பல திண்ணைப்ள்ளிக்கூடங்களை ஒற்றுமைப் படுத்தி ஒன்றாக்கினார். பின்னர் அவரது முயற்சியினால் பாதிரிமாரின் கவனம் ஆலங்கேணிப் பக்கம் திரும்பியது. 

மூதூரில் 1838ல் புனித அந்தோனியார் பாடசாலை தொடங்கப்பட்டதும் ஆலங்கேணிப் பாடசாலையையும் பொறுப்பேற்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.  பாதிரிமாரின் முயற்சியினால் திண்ணைப் பள்ளிக்கூடம் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையாக 1896ல் மாற்றம் பெற்றது. நீர்கொழும்பில் இருந்து வந்த வெள்ளை மரியான்பிள்ளை தலைமையாசிரியராக முதன்முதலாகக் கடமையாற்றினார். அவருக்கு மாதச் சம்பளம் ஆறு ரூபாய் என்றால் வியப்பாக இருக்கும். அவருடன் மேரிலூர்து என்ற ஆசிரியையும் கடமையாற்றினார்.  

எனது பாட்டனாரும். ஆச்சியும் இப்பாடசாலையிலேயே படித்தனர். எனது மாமனார் காலத்தில் திரு. சுப்பிரியான் பெர்னாந்து தலைமையாசிரியராக வந்ததும் மறுமலர்ச்சி தோன்றியது. ஊர்ப்பெரியவர்களின் ஒத்தாசையுடன் 1934ல் இன்றைய இடத்தில் ஆலமரத்தின் கீழ் பாடசாலையை இடம் மாற்றினார். பாடசாலை சிலுவை வடிவத்தில் அரைச்சுவரோடு தென்னோலையால் வேயப்பட்டு எடுப்பாக இருந்தது. அப்பாடசாலையில் கற்று நான் ஆங்கில ஆசிரியராக வந்தபின்னும் அதேவடிவத்தோடுதான் இருந்தது. ஆனால் பாடசாலை ஏற்றம் பெற்றது. 

ஆலங்கேணி மக்கள் இன்றும் சுப்பிரியான் பெர்னாந்து அவர்களை நினைவு கொள்கின்றனர். எனது தாயார் அவரைப் பற்றிய புகழை அடிக்கடி கூறுவார். “நீயும் அவரைப்போல் கல்விக்காகச் சேவைசெய்யவேணும்” என்பார். எட்டாம் வகுப்புவரை கற்பிக்கப்பட்டது. மேற்படிப்புக்குச் சிலர் மூதூர் சென்றனர். சிலர் மட்டக்களப்புக்குச் சென்றனர். 

இன்று கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்கியுள்ள ஆலங்கேணி அன்று தம்பலகாமம் பற்றோடு இருந்தது. கி.முன் கந்தளாய்க் குளம் கட்டப்பட்டு குளக்கோட்டு மன்னனின் ஆட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே ஆலங்கேணி என்றொரு கிராமம் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. சோழரின் படையெடுப்பாலும், பொலனறுவை இராசதானி உருவாக்கத்தாலும் கிழக்கு மாகாணம் அந்த இராச்சியத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. 

இலங்கையில் கஜபாகு மன்னனின் காலத்தில் கண்ணகி வழிபாடு தொடங்கப்பட்டது. கோவலன், கண்ணகி கதை பரவியது. இளங்கோவடிகளது சிலப்பதிகாரம் பத்தினியம்மன் கோயில்களில் பாடப்பட்டன. பத்தினி அம்மன் வணக்கமுறை எல்லாச் சமயத்தாருக்கும் பொதுவாகக் கணிக்கப்பட்டது. சிங்களவர்களும் பத்தினிதெய்யோ என்று போற்றுகின்றனர். வழிபாடு செய்கின்றனர். நீரோட்டுமுனை, ஆலங்கேணி, தாமரைவில் உப்பாறு போன்ற கிராமங்களிலும் அம்மன் கோயில்கள் எழுந்தன. 

 மாகாமத்தின் குளக்கட்டில் மூர்க்கமாதா அம்மனது கோவில் இருந்தது. அங்கு வேள்வி நடக்கும். அதற்குக் கந்தளாய். தம்பலகாமம். ஆலங்கேணி, உப்பாறு, கொட்டியாபுரம், சேனையூர், சம்பூர் கிராமங்களில் இருந்து மக்கள் வருவார்கள். பூசாரிமார் சம்பூரில் இருந்தும் தம்பலகாமத்தில் இருந்தும் ஆலங்கேணிப் பூசாரிவெட்டையில் இருந்தும் வருவாவார்கள். ஆயிரம், வெற்றிலை, பாக்கு, பழம் எனப் படைத்து வேள்வி நடக்கும்.

குளக்கோட்டு மன்னன் காலத்திலிருந்து திருகோணமலைப் பிரதேசம் நான்கு நிலப்பரப்புக்களாக வகுக்கப்பட்டிருந்தது. தம்பலகாமம் பற்று தம்பைநகரைத் தலைநகரமாகக் கொண்டிருந்தது. தம்பைநகரின் துறைமுகம் என்பது தற்போதைய கப்பல்துறையாகும். 


திருகோணமலை மாவட்டத்தில் ஆலங்கேணியும் பழங்பெரும் கிராமம். அந்தக் காலத்தில் கொடுக்கல் வாங்கலின் போது ‘புறோநோட்டு’ எழுதிக் கையெழுத்துப் பெறும் நடைமுறையிருந்தது. கடன் கொடுப்பவர், கடன் பெறுபவரிடம் இருந்து எழுதியெடுக்கும் பத்திரம் அது.  அந்தப் புறோநோட்டு என்ற பத்திரத்தில் ‘திரு.தம். ஆலங்கேணியில் இருக்கும் …’ என்றுதான் தொடங்கி எழுதப்படும். அதாவது திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமப் பற்றில் உள்ள ஆலங்கேணி.’ என்ற பொருள்பட எழுதுவார்கள். நான் எனது கைபட எனது தந்தையார் சொல்லச் சொல்ல எழுதிய புறோநோட்டுகள் எராளாம். எனக்கு இன்றும் நினைவில் உள்ளது. 

எனது தந்தையிடம் இருந்து முனைச்சேனையில் இருந்த மதாரிசா. நெல் வாங்கிச் சென்றபோது இவ்வாறான நோட்டை எழுதிக் கொடுத்தேன். பின்னர் நெல்லைத் திருப்பிக் கொடுத்ததும் அந்தப் புறோநோட்டு உரியவரிடம் கொடுத்துக் கிழித்தெறியப்படும். இது 1955 வரை தொடர்ந்தது.

பிரித்தானியர் ஆட்சியின்போது கடற்கரை ஓரங்கள் நிலச்சுவாந்தார்களுக்குப் பகிர்ந்தளிக்கப் பட்டன. சுதேசமக்கள் பழையபடி உள்நாட்டுப் பக்கங்களை நாடிச் சென்றனர். பூசாரிவெட்டை வெறுமையாகியது. கடற்கரைக்கும் எங்கள் கிராமத்துக்கும் இடையில் பெரிய தொன்னந்தோட்டம் இருந்தது. அத் தென்னந்தோட்டத்தைக் கடந்துதான் ஆலங்கேணிக் கிராமத்துக்குச் செல்லவேண்டும். அத்தென்னந்தோட்டம் 1972ல் உச்சநிலவரம்புச் சட்டத்தினால் அரசாங்கத்தின் உடமையாயிற்று. 

எங்கள் ஊரில் சிலரை அவர்களது சொந்தப் பெயர்களைச் சொன்னால் தெரியாது.  அவர்கள் ஆடிய கூத்தின் கதாபாத்திரத்தில் புகழ்பெற்றதனால் அப்பாத்திரங்களின் பெயர்களாலேயே அழைக்கப் பெற்றனர். உதாரணமாக வைரமுத்து என்பவரை ‘மகாராசா’ என்றும், சின்னத்தம்பியை சகுனி என்றும், இராசேந்திரம் என்பவரை சன்னியாசி என்றும், நல்லதம்பியை அனுமார் என்றும் கேட்டால்தான் மக்களுக்குப் புரியும். இவர்களெல்லாம் பெயர்பெற்ற நாடக நடிகர்கள்.  

நான் அப்பொழுது சிறுவன். பாடசாலையையே எட்டிப்பார்க்காத பருவம். எங்கள் கிராமத்தில் கூத்துப் போடுவார்கள். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் பத்தினியப்பாவின் வீடு இருந்தது. பத்தினியர் எனக்குத் தாத்தாமுறை. அவர் அண்ணாவியார் தாமோதரத்துடன் சேர்ந்து நாடகமும் கூத்தும் பழக்குவார். 

‘சத்தியவான் சாவித்திரி,’ ‘சாரங்கதாரா’, ‘இராமநாடகம்,’ ‘பவளக்கொடி’, ‘அல்லியரசாணி’ எனப் பழக்கி அரங்கேற்றுவார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து பெரும்பாலும் நாடகம்தான் பழக்குவார்கள். பாடியபடியே ஆர்மோனியம் வாசிப்பதில் பத்தினியர் கெட்டிக்காரர். அவர்தான் மியூசிக் டைரக்ரர். அவரது மகன் கனகரத்தினம் பாடுவதோடு ஆர்மோனியமும் வாசிப்பார். அத்துடன் வேடமிட்டு நடிப்பார். அண்ணாவியார் தாமோதரம் கூத்தைவிடவும் நாடகம் பழக்குவதில் விண்ணன். நாடகத்தில் சிறுசிறு வேடமேற்று நடிக்கவும் செய்வார். 

ஊரூராய்ச் சென்று நாடகமும் கூத்தும் பழக்குவார்.  கிராமங்களில் இளைஞர்கள் நாடகம் பழகுவதில் முன்நிற்பார்கள். அதிகமாக இருள்பரந்த பின்னர்தான் கூத்துப் பழக்குவார்கள். அவர்களுக்கு அந்தநேரம்தான் பொருத்தமானது. பகல் முழுவதும் வயலில் வேலைகள் நடக்கும். இரவு நடுச்சாமம் வரை ஆட்டமும் பாட்டமுமாக இருக்கும்.

தம்பலகாமத்தில் கணபதிப்பிள்ளை அண்ணாவியார் பிரபலமானவர். அவரும் எங்கள் ஊரில் நாடகமும் கூத்தும் பழக்கி அரங்கேற்றினார். அவரது நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். எங்காவது ஒரு கிராமத்தில் ஒரு நாடகமேனும் நடைபெறும். பக்கத்துக் கிராம மக்கள் வண்டில் கட்டி வந்துபார்ப்பார்கள்.  எப்படியும் மூன்று மாதத்துக்கு ஓருமுறையேனும் நாடகம் அல்லது கூத்து அரங்கேற்றம்  நடைபெறும். 

எங்கள் ஊரின் மத்தியில் பெரிய வெற்றுக்காணி இருந்தது. அங்குதான் அரங்கேற்றம் நடைபெறும். பெரிய மேடை அமைத்துத் திறந்த வெளியரங்கில் கூத்து அரங்கேறும். திருகோணமலை கணேசன் தியேட்டரில் இருந்து கூத்துக்குரிய உடைகளையும், திரைகளையும் கொண்டு வருவார்கள். அரங்கத்தில் அழகான திரைகள் தொங்கும். அரசமாளிகைகள், பூங்காவனங்கள் என வண்ணப்பாடுகள் அமைந்த திரைச்சீலைகளைக் கட்டுவார்கள். பெற்றமக்ஸ் வெளிச்சத்தில் நாடகம் நடைபெறும். நாடகம் அல்லது கூத்து விடியவிடிய நடைபெறும். சுற்றிவரக் கடைகள் இருக்கும். தடபுடலாக வியாபாரம் நடைபெறும். 

திருகோணமலை நகரை எங்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. தெரிந்ததெல்லாம் அயலில் உள்ள கிராமங்கள்தான். அதிகமாக நகரத்துக்கு வருவதில்லை. காரணம்? வெள்ளைக்காரருக்குப் பயம். அப்போது பிரித்தானியர் ஆட்சி நடந்த காலம். கூத்துப் பழகும் நாட்களில் சிறுவர்களாகிய நாங்கள் போயிருந்து பார்ப்போம். எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. எனது அண்ணன் கந்தசாமி இராசகுமாரன் சாரங்கதாராவாக நடிக்கும் போது அதைப்பார்த்து அழுதுமிருக்கிறேன். எங்கள் மாமா மயில்வாகனம் புல்லாங்குழல் வாசிப்பார். நன்றாக நடித்துப் பாடுவார். இராச உடுப்புக்களில் அவர்களைப் பார்ப்பதில் எங்கள் ஊர்மக்களுக்குப் பெருமிதம். கூத்து முடிந்ததும் ஊர் ஊராக உலா வருவார்கள். அவர்கள் பின்னால் சிறுவர்கள் தொடருவார்கள்.

பிரித்தானியருக்கு முன்னர், பாட்டன் பூட்டன் காலத்தில் அதாவது குளக்கோட்டு மன்னன் காலத்தில் தம்பலகாமம் பகுதிகளில் தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்திருந்தனர். அக்காலத்தில் அம்மன் கோயில்கள் அதிகமாக இருந்தன. இப்போது சின்னக்கிண்ணியா என்று அழைக்கப்படும் நீரோட்டு முனைக் கிராமத்தில், இன்றைய ஆஸ்பத்திரியின் முன்னால் இருக்கும் அம்மன் கோயில் மட்டும் எஞ்சியுள்ளது. அந்தக் கோயிலின் விழாக்காலத்தில் கூத்து தற்போதிருக்கும் ஜாயா வித்தியாலயம் இருக்கும் வெளியில் நடக்கும். பெருந்திரளான மக்கள் கூடுவார்கள். 

1784-ஜூன் 07ந்திகதி டச்சுக்கார ஆளுநர் வான்சென்டன் தம்பலகாமத்துக்குச் சென்றார். அவர் அங்கு கண்டவற்றை இவ்வாறு தருகிறார்.

ஆதிகோணநாயகர் கோவில்

“நான் 1784 ஜூன் மாதம் 7ந் திகதி பிரசித்தி பெற்ற தம்பலகாமம் கோயிலை தரிசித்தேன். பிரதம குரு என்னை வரவேற்றார். திருநீறும், பூக்களும் தந்தார். ஆயிரங்கால் மண்டபக் கோயிலை போத்துக்கீசர் அழித்தபோது, அவர்களிடம் இருந்து காப்பாற்றிய இரண்டு சிலைகளையும் காட்டும்படி கேட்டேன். முதலில் பின்வாங்கியவர் ஒருவாறு இணங்கினார். விளக்குகளை எரியவிட்டு அவற்றைக் காட்டினார். நான் தூரத்தே நின்று எனது தொலைநோக்கியூடாகப் பார்த்தேன். ஒரு பீடத்தில் கோணேசரைக் கண்டேன். அவரது இடப்பக்கத்தில் ஈஸ்வரி அம்மன் இருந்தார். இரண்டு சிலைகளும் ஆடை ஆபரணங்களோடு இருந்தன.  

இச்சிலைகள்   கந்தளாய்க் குளத்தினை அமைத்த குளக்கோட்டு மன்னனால் கொண்டு வரப்பட்டவை. ஆயிரங்கால் மண்டபக் கோயிலுக்குக் கொடுக்கப் பட்டவை. இச்சிலைகள் பாரம்பரியப்படி பூவுலகின் மத்திய பகுதியில் உள்ள மலைகளில் இருந்து கொண்டுவரப்பட்டவை.    இது உண்மையோடு கூடிய உருவகமாகும் என நினைக்கிறேன்.

தம்பலகாமம் கண்டிய மன்னரின் ஆட்சியில் இருக்கும்போது வயல்களில் இருந்து பெறும் வருமானத்தில் அரைவாசி அல்லது இருபதில் ஒரு பகுதியைக் கோயிலுக்குக் கொடுத்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. விளைச்சலும் இல்லை. கோயிலுக்கு வருவாயும் இல்லை. கொமான்டர் ஸ்கொறன் 600 பறா நெல்பெற்றுத் தருவதற்கு  உடன்பட்டார். ஆனால் அவரின் மறைவின் பின் ஒன்றும் நடக்கவில்லை. தேசவளமைச் சட்டத்தின்படி வயல், தோட்ட வருவாயில் பத்து வீதம் கோணேசர் கோயிலுக்குக் கொடுக்கவேணும். ஆனால் டச்சுக்காரக் கொம்பனி எல்லாவற்றையும் தனதாக்கிக் கொண்டது.” என்று  பிரதம குரு கூறியதாக டச்சுக்கார ஆளுநர் வான்சென்டன்  குறிப்பிட்டிருக்கிறார்.

தம்பலகாமத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க ஆதிகோணநாயகர் கோவில் இருக்கிறது. அக்கோயிலின் உற்சவவிழா ஆண்டுதோறும் ஆனி உத்தரத்தில் தொடங்கும். தொடர்ந்து பதினெட்டு  நாட்கள் திருவிழா நடக்கும். பத்தாவது திருவிழா ஆலங்கேணி கிராமத்து மக்களின் திருவிழாவாகும். ஆடியமவாசையில் தீர்த்தமாடும் பெருவிழா நடைபெறும். 

தீர்த்த உற்சவத்துக்காகக் கோணேசர் தம்பலகாமத்தில் இருந்து ஊர்வலமாக  முள்ளியடி, வாரிவெட்டுவான், சூரங்கல், வில்வெளி, சல்லிக்கிளப்பு, சமாவைத்ததீவு ஊடாக ஆலங்கேணி விநாயகர் ஆலயத்துக்கு வந்து ஒரு இரவு தங்கியிருப்பார். அப்போது பல சமய கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறும். மறுநாள் தாமரைவில் ஊடாக உப்பாற்றுத் துறையைக் கடந்து மகாவலி ஆறு சங்கமிக்கும் துறைமுகத்தில் அமைந்துள்ள சிறிய கோயிலில் தங்கியிருப்பார். 

திருகோணமலை மாவட்டத்தின் மூலைமுடுக்குக் கிராம மக்களும் ஒன்றுகூடுவார்கள். இரவிரவாக திருக்கரைசைப் புராணம் பாடப்படும். சமய கலாசார நிகழ்வுகள் நடைபெறும். மறுநாள் அதிகாலை ஆடியமவாசை கூடும் சுபவேளையில் மகாவலிக் கங்கையில் தீர்த்தமாடப் படும். இதுவொன்றே ஆலங்கேணியின் வரலாற்றுக்குச் சான்றாகும். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அத்தனை கிராமங்களுடனும் ஆலங்கேணி இரத்ததொடர்பினைக் கொண்டிருக்கிறது.

ஆலங்கேணிக்கும் மட்டக்களப்புக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதேபோல் யாழ்ப்பாணத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. திருமணத்தொடர்புகளும், கலை பண்பாட்டியல் முறையிலும் தொடர்புண்டு. அறுவடைகாலங்களில் வத்தைகள் எனப்படும் பெரிய பாய்மரக்கப்பல்கள் நீரோட்டுமுனைத் துறையிலும், கண்டற்காடு, பாற்துறையிலும் தரித்து நிற்கும். கொடுக்கல் வாங்கல் நடைபெறும். பலர் திருமணத்தொடர்புகளும் வைத்துள்ளனர். தமிழர் கிராமங்களிடை நிறையவே திருமணப் பந்தங்கள் தொடர்புள்ளன. 

ஆலங்கேணியில் புராதனமான பிரசித்திபெற்ற அம்மன் கோயில் தற்போதிருக்கும் அம்மன் கோயிலுக்கு முன்னால் அழிபாட்டில் உள்ளது. பூமிக்குள் புதையுண்டு போய்க்கிடக்கிறது. கல்மலையென நினைத்து பலர் அக்கற்களை அகற்றி வீடுகட்டுவதற்காக விற்றுமுள்ளனர். அவ்விடத்தில் மக்கள் குடியிருப்புக்கள் உள்ளன.. சில ஆண்டுகளுக்கு முன்னர் கிணறு கட்டுவதற்காக நிலத்தைக் கிண்டியபோது ஒரு கல் வெளிப்பபட்டது. அதில் பல எழுத்துக்கள் தென்பட்டன. படிப்பறிவில்லாத மக்கள் அக்கல்லைத் துணிதோய்ப்பதற்குப் பயன்படுத்தியுள்ளார்கள். இப்போது அந்த எழுத்துக்கள் சிதைந்து விட்டன. அரிய புகழ்பெற்ற கோயில்கள் அந்நியர் படையெடுப்பினால் அவர்களால் அழிக்கப்பட்டுவிட்டன. 

பூசாரிமார்களுக்கு நிவந்தமாகக் காணிகளை அரசர்கள் வழங்கியிருந்தார்கள். பூசாரிமார்கள் வாழ்ந்த பகுதி பூசாரி வெட்டையானது. அங்குதான் சரவணமுத்துப் பூசாரி, தம்பிமுத்துப் பூசாரிமார்களின் மூதாதையர்கள் வாழ்ந்தார்கள். ஒவ்வொரு தமிழ்கிராமங்களுக்கும் பெரிய கேணியிருக்கும்;. வயல்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு அடப்பனார் வெட்டை நிவந்தமாகக் கொடுபட்டு அவர்கள் அங்கு வாழ்ந்தார்கள். 

பல அம்மன் கோயில்கள், இடிபாடடைந்த நிலையில் அழிந்து அவற்றின் எச்சங்கள் புதையுண்டு போய்க்கிடக்கின்றன. ஆலங்கேணி, உப்பாறு, தாமரைவில், மாகாமம், சுங்கான்குழி, தீனேரி, பாண்டியனூற்று, கற்சுனை, சாவாறு, சாந்தாப்பணிக்கன், கீரைத்தீவு, பெட்டைக்குளம், வைராவெளி, கண்டல்காடு, போன்ற இடங்களில் இன்றும் அச்சிதைவுகள் உண்டு. பட்டியனூற்றுக் காட்டினுள் பெரியதொரு சிவன்கோயிலின் சிதைவுகள் உண்டு. எனது பாட்டனாருடன் குடும்ப சகிதம் அக்கோயிலுக்குப் போய்ப் பொங்கலிட்டு வந்திருக்கிறேன். 

எங்கள் கிராமங்களில் கிராமியக் கலைகள் வளர்ச்சியுற்றுத் திகழ்ந்தன. நாட்டார் பாடல்கள் வாய்களில் வலம்வந்தன. சேனைப் பயிர்ச் செய்கையும், நெற்செய்கையும் மற்றும் வாழ்வாதாரத் தொழில்களும் மக்களுக்கு நல்ல ஓய்வைக் கொடுத்தன. அதனால் நாடகக்கலை ஆங்காங்கே விமரிசையாக நடந்து கொண்டிருந்தன. பல கிராமிய விளையாட்டுக்கள் நடைபெற்றன. சிறப்பாகச் சித்திரை புத்தாண்டு காலத்தில் போர்த்தேங்காய் அடிக்கும் போட்டிகள் நடைபெறும். நீரோட்டுமுனை அம்மன் கோயிலுக்கு அண்மையிலும். ஆலங்கேணிக் கோயிலடிச் சந்தியிலும், ஈச்சந்தீவுச் சந்தியிலும் போர்த்தேங்காய் அடிக்கும் போட்டி நடைபெற்றதைக் கண்டிருக்கிறேன். கறுவல்தம்பிப் பரியாரிதான் இதற்குத் தலைமை தாங்குவார்.

கிளித்தட்டு. மல்யுத்தம், சீனடி, சிலம்படி, வண்டிற்சவாரி போன்ற நிகழ்வுகளை தமிழ் மக்கள் நடத்தினர். சிறப்பாக ஊஞ்சல் ஆடலும் அதற்கேற்ற பாடலும் கும்மி கோலாட்டமும் பெண்களது சிறப்பான நிகழ்ச்சிகளாகச் சித்திரைக் கொண்டாட்டத்தின்போது எங்கள் ஊரில் நடைபெறும். நான் இளைஞனாக இருக்கும்போது இவ்வாறான நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து நடத்தியுள்ளேன். தைப்பொங்கல் கோலகலமாகக் கொண்டாடப்படும். அடுத்தநாள் மாட்டுப் பொங்கல் சந்தோசத்தை ஊட்டும். காளைகளின் கழுத்தில் பணமும் வடைமாலைகளும் கட்டிவிடுவார்கள். அவற்றை விரட்டிப் பிடித்துப் பரிசினைத் தட்டிக் கொள்ளும் விளையாட்டு அற்புதமாக இருக்கும். ஆலங்கேணியில் அன்றைய தினம் முஸ்லிம் இளைஞர்களும் கலந்து கொள்வார்கள்.

நான் வாழ்ந்த காலத்தில் எனக்குப் பலவழிகளிலும் சிந்திக்க வைக்கக் கூடிய பெரியவர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் அதிகம் படிக்கவில்லை. ஆகக்கூடியதாக ஐந்தாம் வகுப்புவரைதான் கற்றிருப்பார்கள். ஆனால் அவர்களது அனுபவங்கள் பேராசான்களது அறிவுக்குச் சமமாகும். இலக்கிய இலக்கண அறிவுடையோராக வாழ்ந்தார்கள். மனதால் செல்வந்தராகவும், கலையார்வம் மிக்கவர்களாகவும் சோதிடத்திலும், வைத்தியத்திலும் வல்லவர்களாகத் திகழ்ந்தார்கள். 

விருந்தினர் பதிவு

கலாபூஷணம் கேணிப்பித்தன் ச.அருளானந்தம் B.A.M.Lit,D.A.PhD,SLEAS.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. Dear Dr,
    Thanks a lot. Today morning your father was encouraged and congratulated me.' Pampin kaal pamputhan ariyum. Try to bring his books early as possible
    Kernipiththan

    ReplyDelete
  2. அருமை தங்களை தொடர்பு கொள்ளமுடியுமா

    ReplyDelete
    Replies
    1. நன்றி , தொடர்புகளுக்கு - admin@geevanathy.com

      Delete