Monday, December 31, 2018

மொன்றியல் திருமலை ஒன்றியத்தின் உதவி - புகைப்படங்கள்



திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்வி, உளவளர்ச்சி, நுண்திறன் மேம்பாடு முதலியவற்றினை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனம்  HOPE  ஆகும்.

2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்தில் இன்றுவரை சுமார் 30 குழந்தைகள் பதிவுசெய்யப்பட்டு இருக்கின்றனர். வழமையான வகுப்புகளுக்கு சுமார் 18 முதல் 24 பிள்ளைகள் கலந்துகொள்கின்றனர்.


விசேட தேவையுள்ள குழந்தைகளின் பெற்றோர்களின் நிதிப் பங்களிப்பிலும், சில நன்கொடையாளர்களின் உதவி மூலமும் செயற்பட்டுவரும் இந்நிறுவனச் செயற்பாடுகளுக்கான தேவைகள் குறித்து அதன் இயக்குனர் திரு.கிருபாகரன் , மற்றும் ஜீவநதி மூலமாக  வேண்டுகோள் விடப்பட்டிருந்தது.

பார்க்க
விசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்விக்கான உதவிகோரல்

இவ்வேண்டுகோள்களில் முக்கியமானது   ஆசிரியர்களுக்கான   கொடுப்பனவுகள்.  குழந்தைகளின் பெற்றோரினால் வழங்கப்படும் சிறுதொகைக் கொடுப்பனவே ஆசிரியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது குறிப்பிடதக்கது. சிலமாதங்களில் அவர்கள் தொண்டு அடிப்படையிலேயே வேலை செய்கிறார்கள். இந்நிலையில் அவர்களது சேவைக்குரிய கொடுப்பனவுகளின் ஒரு பகுதியினை தொடர்ச்சியாக வழங்குவதற்கு கனடாவில் உள்ள மொன்றியல் திருமலை ஒன்றியம் முன்வந்தது.




கனடா
மொன்றியல் திருமலை ஒன்றியம் 

கனடா மொன்றியல் திருமலை ஒன்றியம் தொடர்பான சிறிய அறிமுகம்.

1992 - "மொன்றியல் சன்ரைஸ் உதைபந்தாட்டக் கழகம்" எனும் பெயரில் திருமலை உறவுகள் அனைவரையும் ஒன்றிணைத்து பல சுற்றுப்போட்டிகளில் வெற்றிபெற்று பல வருடங்கள் முன்னணிக்கழகம் எனும் பெயரைத் தக்கவைத்துக்கொண்டது. அத்தோடு, தாயகத்திலே வறுமைக்கோட்டின்கீழ் வாழும் சில மாணவர்களுக்கு மாதாந்த அடிப்படையில்  அமைப்பின் உறுப்பினர்கள் மூலம் வங்கியூடாக சிறுதொகைப் பணம் அனுப்பிவைக்கப்பட்டது.

1996 - முதன்முறையாக "சன்ரைஸ் இரவு" எனும் ஒன்றுகூடல் நிகழ்வு மூலம்  திருமலை உறவுகளை மேலும் இணைத்துக்கொண்டு, "திருகோணமலை நலன்புரி சங்கம் கனடா" அமைப்பால் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட சில உதவித்திட்டங்களுக்கு மொன்றியலில் இருந்து தனது பங்களிப்பை வழங்கியது. மேலும், மொன்றியலில் சோவே ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலய 12ம் நாள் திருப்பூங்காவன உற்சவத்தினை  "திருமலை மண்ணின் மைந்தர்கள்" எனும் பெயரில் மிகச்சிறப்பாக 8 வருடங்கள் நடத்தியது.

2006 - மீண்டும் "திருமலை இரவு" ஒன்றுகூடல் நிகழ்வை சிறப்பாக நடாத்தி மேலும் பல உறவுகளை அமைப்பில் இணைத்துக்கொண்டது.

பின்னர், தாயகப்போரின் உச்சநிலை காரணமாக சிலநிகழ்வுகள் நடத்துவதை தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்த்து.

2015 - மேலும் புதிதாக மொன்றியல் வந்த திருமலை உறவுகளையும் இணைத்து "நியூஸ்டார் விளையாட்டுக் கழகம்" ஆரம்பிக்கப்பட்டு, கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2015 மற்றும் 2016 சிறப்பாக நடத்தப்பட்டது.

2017 - மொன்றியல் திருமலை ஒன்றியம் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒன்றியத்தின் "திருமலை இரவு 2017" மற்றும் நியூஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் "விளையாட்டுத் திருவிழா 2017" மிகமிக சிறப்பாக நடத்தப்பட்டது. அத்தோடு, மொன்றியல் திருமுருகன் கோவில் 4ம் நாள் இரவு உற்சவம் நடாத்தும் பொறுப்பினையேற்று சிறப்பாக நடத்தப்பட்டது.

"திருமலை இரவு 2017" ன் மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தின் ஒருபகுதி "திருகோணமலை நலன்புரி சங்கம் கனடா" அமைப்பினுடாக தென்னைமரவாடி மீள்குடியேற்றத்திற்கு வழங்கப்பட்டது.

2018 - ஒன்றியத்தின் "திருமலை இரவு 2018" 10-03-2018 அன்று மேலும் சிறப்பாக நடத்தப்பட்டது.

08-07-2018 அன்று நியூஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி மற்றும் சிறுவர் பெரியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் காலையிலும், மாலை சுப்பர் சிங்கர் இசை நிகழ்வும் பல்லாயிரக்கணக்கான மொன்றியல் மக்களுடன் முதன்முதலாக திறந்தவெளியரங்கில் இலவசமாக   நடாத்தி மொன்றியலில் பலரின் பாராட்டுக்களை பெற்றுக்கொண்டது. அத்தோடு, மொன்றியல் திருமுருகன் கோவில் 4ம் நாள் இரவு உற்சவம் இரண்டாம் வருடமாக அமைப்பினரால் சிறப்பாக நடாத்தப்பட்டது.


அண்மையில் HOPE நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வின் போது மொன்றியல் திருமலை ஒன்றியம் வழங்கிய ஆசிரியர்களுக்கான  கொடுப்பனவுகள் HOPE நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது.



விசேட தேவையுள்ள குழந்தைகளின் பராமரிப்பு என்பது வார்த்தைகளின் விபரிப்புகளுக்கு அப்பாற்பட்டது. அதனை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்களால் மட்டுமே முழுமையாகப்  புரிந்துகொள்ளமுடியும்.

விசேட தேவையுள்ள குழந்தைகளுக்கான உதவிகள் சமூகசேவை அல்ல அது நம் ஒவ்வொருவரினதும் சமூகக் கடமை என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment