Wednesday, September 20, 2017

விசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்விக்கான உதவிகோரல்


திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்வி, உளவளர்ச்சி, நுண்திறன் மேம்பாடு முதலியவற்றினை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனம்  HOPE  ஆகும்.விசேட தேவையுள்ள குழந்தைகளின் பராமரிப்பு என்பது வார்த்தைகளின் விபரிப்புகளுக்கு அப்பாற்பட்டது. அதனை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்களால் மட்டுமே முழுமையாகப்  புரிந்துகொள்ளமுடியும்.

2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்தில் இன்றுவரை சுமார் 30 குழந்தைகள் பதிவுசெய்யப்பட்டு இருக்கின்றனர். வழமையான வகுப்புகளுக்கு சுமார் 18 முதல் 24 பிள்ளைகள் கலந்துகொள்கின்றனர்.பெற்றோரின் வறுமைநிலை, பிள்ளைகளை வகுப்புகளுக்கு கொண்டு வருவதிலுள்ள போக்குவரத்துப் பிரச்சனைகள், விசேட கல்வி முறை தொடர்பில் போதிய விழிப்புணர்வு இன்மை போன்ற காரணங்களால் சுமார் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் இத்தகைய வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

விசேட தேவையுள்ள குழந்தைகளின் பெற்றோர்களின் நிதிப் பங்களிப்பிலும், சில நன்கொடையாளர்களின் உதவி மூலமும் செயற்பட்டுவரும் இந்நிறுவனம் சமீபகாலமாக பல நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது. அவை

01. குழந்தைகளின் கல்விச் செயற்பாட்டுக்கான நிரந்தரக்  கட்டடம் - தொடக்ககாலம் முதல் தற்காலிகமாக ( இலவசமாக ) வழங்கப்பட்ட நிறுவனங்களின் கட்டிடங்களில் குழந்தைகளின் கல்விச் செயற்பாடுகள் நடைபெற்று வந்தது. தற்போது இயங்கிவரும் நிறுவனக் கட்டிடத்தில் இருந்து விரைவாக வெளியேற வேண்டிய நிலை இருப்பதால் அவர்களது கற்றல் செயற்பாடுகள் கேள்விக்குறியாகியுள்ளது.

02. மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் - நன்கொடையாளர்களின் உதவியில் தங்கி இருக்கிறது.
பார்க்க.விசேட தேவையுள்ள குழந்தைகளுக்கு கற்றல்  உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்

03. தளபாடங்கள் - இதுவரை செயற்பட்டு வந்த தற்காலிக கட்டிடங்களில் இருந்த தளபாடங்களையே இக்குழந்தைகள் தங்கள் தேவைக்காக பயன்படுத்தி வந்தனர்.

04. மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி - பெரும்பாலான தூர இடங்களில் இருந்து வரக்கூடிய மாணவர்கள் போக்குவரத்துக் காரணங்களால் மேற்படி வகுப்புகளில் இணைய முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

05. ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் - குழந்தைகளின் பெற்றோரினால் வழங்கப்படும் சிறுதொகைக் கொடுப்பனவே ஆசிரியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது குறிப்பிடதக்கது. சிலமாதங்களில் அவர்கள் தொண்டு அடிப்படையிலேயே வேலை செய்கிறார்கள்.

06. நிர்வாகச் செலவுகள்  - விளையாட்டுப்போட்டிகள், கலைநிகழ்வுகள் என்பன நன்கொடையாளர்களின் நிதியுதவியினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனினும் ஆசிரியர்களின் தகைமைகளை மேம்படுத்தல், திட்ட விரிவாக்கம் என்பன நிதிச்சிக்கலால் தடைப்பட்டிருக்கின்றன.

07. மருத்துவ. உளநல உதவிகள் - குழந்தைகளுக்கான மாதாந்த இலவச மருத்துவ முகாம்கள்

உத்தியோகபூர்வமற்ற தகவல்களின்படி திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 1500 முதல் 1800 விசேட தேவையுள்ள குழந்தைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 150 முதல் 200 பேர்வரை அரச பாடசாலைகளில் அவர்களுக்குரிய விசேடவகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள்.

எனவே தேவை மிக நிறைந்த எமது பிரதேசத்தில் விசேட தேவையுள்ள குழந்தைகளுக்கான கல்வி மற்றும்பிற செயற்பாடுகளுக்காக இந்நிறுவனத்தின் சேவை அவசியமானதொன்றாகிறது.

விசேடதேவையுள்ள குழந்தைகளின் நலனில் அக்கறைகொள்ளும் எவரேனும் நேரடியாகவோ அல்லது உங்களது உறவினர், நண்பர்கள் மூலமாகவே இந்நிறுவனத்தின் செயற்பாடுகளை நேரில் அவதானித்து அதன் தேவைகளைக் கண்டறிந்து அதில் உங்களால் முடிந்தஉதவிகளைச் செய்யமுன்வரலாம். ஏனெனில் உதவிகள் எப்போதும் பணம் சம்மந்தப்பட்டதாக மட்டுமே இருப்பதில்லை.

எமது சமுகத்தின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இருக்கின்ற இச் சமூதாயப்பணி
ஆர்வமுள்ள நன்கொடையாளர்களுக்காக காத்திருக்கிறது.


 நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com


விசேட தேவையுள்ள குழந்தைகளின் கைவண்ணங்கள்

 


விசேட தேவையுள்ள குழந்தைகளுக்கு கற்றல்  உபகரணங்கள் 


தளபாடங்கள் 


25.09.2017
தற்காலிகமாக செயலிழந்து போகிறது HOPE  (நம்பிக்கையல்ல)


தற்போது செயற்பட்டுவரும் கட்டடத்தில் இருந்து வெளியேற வேண்டி இருப்பதாலும், திருகோணமலை  நகராட்சி மன்றத்தால் வழங்கப்பட்ட கட்டடத்தில் பல திருத்த வேலைகள் செய்யவேண்டி இருப்பதாலும் 

தற்காலிகமாக செயலிழந்து போகிறது HOPE  நிறுவனம்.

விசேட தேவையுள்ள குழந்தைகளும் , பெற்றோரும் , நிறுவன  இயக்குணரும் ஊழியர்களும்,  நலன்விரும்பிகளும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. Don't worry என்னால முடியுமான உதவிகளை செய்ய முயற்சிக்கிறேன்

    ReplyDelete