Tuesday, September 12, 2017

காத்துக் கிடக்கும் அரசியற்களம் பாட்டாளிபுரம்


திருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்றான பாட்டாளிபுரத்தில் உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் காணப்படும் போசாக்கின்மை  தொடர்பான 


என்ற பதிவின் தொடர்ச்சியாகவும், அந்த நிலைக்கான காரணங்களில் ஒன்றான கடந்த பல வருடங்களாக மறுக்கப்பட்டுவரும் சமுர்த்தி தொடர்பாகவும் இப்பதிவு அமைகிறது.

2006 இல் இடம்பெற்ற மாவிலாறு யுத்தம் இவ்வூர் மக்களை பலத்த பொருளாதார, உயிர் இழப்புகளுடன் வாகரை ஊடாக மட்டக்களப்பு நோக்கி அகதியாக்கியது. 2007 ஆம் ஆண்டில் கிளி­வெட்டி முகாமில் தங்கவைக்­கப்­பட்ட இம்மக்கள் 2009 ஆம் ஆண்டுமுதல் பல்வேறு கட்டங்களாக மீள்குடியமர்த்தப்பட்டார்கள்.

இதன்போது யுத்த அனர்த்த காலத்தில் இவர்களுக்குக் கிடைத்த அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளைக் காரணங்காட்டி அவர்களது சமுர்த்தி உதவி மறுக்கப்பட்டது.

அன்று முதல் பாட்டாளிபுரம் மக்கள் பல்வேறு தரப்பட்ட போராட்டங்கள் , கவனஈர்ப்பு நடவடிக்கைகள் என்பனவற்றை மேற்கொண்டும் இன்றுவரை சமுர்த்தி திட்டத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.


911 குடும்பங்களைச் சேர்ந்த 3049 மக்கள் வசிக்கும் இக்கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் பெண்கள் தலமைதாங்கும் குடும்பங்களாகும்.

இக்கிராமத்திலும் இதனை அண்டிய பிரதேசங்களிலும் வாழும் மக்கள் பழங்குடிகள் ( ஆதிவாசிகள் ) ஆவர். யுத்தத்திற்கு முன்னர் வேட்டையாடுதல் , தேனெடுத்தல் , கிழங்கு தோண்டுதல் , விறகு வெட்டுதல்விவசாயம் செய்தல் விலங்கு வளர்ப்பு என்று தன்னிறைவாக வாழ்ந்த சமுதாயத்தினைச் சேர்ந்தவர்கள்.

யுத்தமும், இடப்பெயர்வும் அவர்கள் வாழ்வினை சீர்குலைத்துவிட்டது. வேட்டைத் தொழில் அரசால் தடை செய்யப்பட்டதும், காட்டில் தேன் எடுப்பதிலும், கிழங்கு தோண்டுவதிலும் உள்ள நடைமுறைச் சிக்கல்களும் பூர்விக விவசாய நிலங்களும், கால்நடைகளும் இழக்கப்பட்டதும் அவர்கள் வாழ்வினை வெகுவாகப் பாதித்திருக்கிறது.

இப்போது சிலர் விறகுவெட்டிப் பிழைக்கிறார்கள். சிலர் கடல்தொழில் செய்கிறார்கள். பலரது பிரதான தொழிலாக கூலித் தொழிலே காணப்படுகிறது. இதில் மிகவும் மனவருத்தம் தரும் செய்தி என்னவென்றால் இவர்களில் 60 வீதமானவர்கள் பிச்சை எடுத்தலை தமது வாழ்வுக்கான ஆதாரமாக கொண்டிருப்பதுதான்.

யுத்தத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புகள், உடமை இழப்புகள் தவிர்த்து போதிய ஊதியமின்மை, குடிநீர்வசதி, போக்குவரத்து, மருத்துவம், மின் இணைப்பு என்பன கிடைப்பதிலுள்ள பிரச்சினைகள், சிறுவர்களின் போசாக்கின்மை, பாடசாலை இடைவிலகல், இளவயது திருமணம், சமூர்த்தி வசதி மறுப்பு, முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரப் பிரச்சினை, காணி அபகரிப்பு என்று நீண்டு செல்கிறது அக்கிராம மக்கள் அனுபவித்துவரும் துன்பங்கள்.

இங்குள்ள ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில்  போசாக்கின்மை  மிகத்தீவிரமாக காணப்படுகிறது. இக்கிராமத்தில்  280 பிள்ளைகள் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களில் 126 பேர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இப்பிரிவினரின் 45 % மாகும்.


இந்த அடிப்படை விடையங்களைப் புரிந்துகொள்வதற்கூடாகவே இம்மக்களுக்கான சமுர்த்தி திட்டத்தின் அவசியத்தினைப் புரிந்துகொள்ள முடியும்.

இலங்கை அரசு பல்வேறு தரப்பினருக்கு வரி விலக்கு, சலுகைகள், வரப்பிரசாதங்கள் என்று பல திட்டங்களை அமுல்படுத்துகிறது. இதன் மூலம் பயனாளிகள் பல இலட்சம் முதல் கோடிக்கணக்கான பணமதிப்பை சலுகைகளாகப் பெறுகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இக்கிராமத்தவர்கள் கேட்பதெல்லாம் அவர்களது வாழ்வாதாரத்துக்கான உதவியைத்தான் என்பதனை நாம் புரிந்துகொள்ளவேண்டியவர்களாகிறோம்.

நாம் நினைப்பது போன்று சமுர்த்தி திட்டம் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான சிறிய உதவித் திட்டமல்ல. உதாரணமாக சமுர்த்தி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட ஒரு குடும்பத்தில் இடம்பெறும்
திருமணத்திற்கு  7500 ரூபாய்
மரண சடங்கிற்கு 15000 ரூபாய்
வீடு கட்ட 150 000 ரூபாய்
வீடுதிருத்த 75 000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இவை தவிர குடிநீர் வசதி எடுக்க,  மின் இணைப்பு எடுக்க, சுயதொழில் செய்ய என்று நீண்டு செல்கிறது அதன் பயன்கள்.

சமுர்த்தி  திட்டம்


வறுமை குன்றிய செழிப்பான இலங்கைத் தேசமொன்றினைக் கட்டியெழுப்புதல் எனும் நோக்கும், பொது மக்களின் துணையுடன் கூடிய அபிவிருத்தியொன்றின் ஊடாக வறுமை குன்றிய நிரந்தர தேசிய அபிவிருத்தி ஒன்றிற்காக பங்களிப்புச் செய்தல் எனப்படும் பணிக்கூற்றையும் நோக்காக் கொண்டது இலங்கையின் சமுர்த்தி அதிகாரசபை.

1995 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க சமுர்த்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் பணிகள்.

விவசாயப் பிரிவு
 1. விவசாய உற்பத்தி விசேட செயற்றிட்ட மேம்பாடு
 2. ‍உள்நாட்டு உணவுப் பயிர்ச் செய்கை மேம்பாடு
 3. சிறிய அளவிலான பெருந்தோட்டப் பயிர் உரிமையாளர்களை நேர்வரிசை நிறுவனங்களின் ஊடாக ஒருங்கிணைப்புச் செய்தல்.
 4. தரிசு நிலங்களில் பயிர் செய்தல்.
 5. வீட்டுத் தோட்டப் பயிர் செய்கை அபிவிருத்தி செயற்றிட்டம்.
 6. அறுவடையின் பின்னரான தொழிநுட்பம் மற்றும் சீரிடுதல் செயற்றிட்டம்.

விலங்கு வேளாண்மை மற்றும் கடற்றொழில் நிகழ்ச்சித் திட்டம்
 1. பாலுக்காக மாடு வளக்கும் செயற்றிட்டங்கள்
 2. மாட்டுப் பண்ணைகளை ஒழுங்கு செய்தல்
 3. உயிரியல் வாயு அலகுகளை நிறுவுதல், உயிரியல் வாயு அலகுகளை ஒழுங்கு செய்தல்
 4. ஆடு வளர்ப்பு செயற்றிட்டங்கள்
 5. பன்றி வளர்ப்பு செயற்றிட்டங்கள்
 6. கோழி வளர்ப்பு செயற்றிட்டங்கள்
 7. நன்னீர் மீன் வளர்ப்பு செயற்றிட்டங்கள்
 8. சிறிய அளவிலான மீன்பிடி உபகரணங்கள்
 9. அலங்கார மீன் வளர்ப்புக்கான தாங்கிகளைத் தயாரித்தல்.
 10. பால் தயாரிப்புப் பொருட்கள்
 11. கருவாடு மற்றும் மாசி
 12. பால் விற்பனை மற்றும் பால் சேகரிப்பு

கைத்தொழில் அபிவிருத்திப் பிரிவு
 1. சிறிய அளவிலான கைத்தொழில் செயற்றிட்ட அபிவிருத்தி
 2. சுரங்க முன்னேற்பாட்டுக் கிராம அபிவிருத்தி
 3. முன்மாதிரிக் கைத்தொழில்; கிராம அபிவிருத்தி

விற்பனை மற்றும் சேவைப் பிரிவு
 1. சமுர்த்தி உள்ளக விற்பனை நிலையங்களின் மேம்பாடு
 2. அரிசி வியாபார மேம்பாடு
 3. சிகையலங்கார நிலைய மேம்பாடு
 4. சிற்றுண்டிச்சாலைகள் சேவைகளின் மேம்பாடு
 5. வாகன சர்விஸ் நிலையங்களின் மேம்பாடு
 6. சிகை அலங்காரப் பணிகளின் மேம்பாடு
 7. வீட்டுச் சேவைகளின் மேம்பாடு
 8. சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் மேம்பாடு
 9. தொடர்பாடல் நிலையங்களின் மேம்பாடு

வங்கி மற்றும் நிதிப் பிரிவு
 1. கடன் வசதிகளை வழங்கல்
 2. சேமிப்பு மேம்பாடு
தலைமைச் சங்கப் பிரிவு
 1. வாழ்வாதார செயற்றிட்டங்களுக்காக பயிற்சி பாடநெறிகளை ஏற்பாடு செய்தல்.
 2. செயற்றிட்ட அறிக்கைகளைத் தயாரித்தல்.
 3. துணைச் சேவைகளின் ஒருங்கிணைப்பு
 4. தரவு முறைமையின் பராமரிப்பு

சமூக அபிவிருத்திப் பிரிவு
 1. திரிய பியச வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டம்
 2. முன்மாதிரிக் கிராம நிகழ்ச்சித் திட்டம்
 3. சிறுவர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம்
போன்ற பல்வேறு நலத்திட்டங்களை சமுர்த்தி திட்டம் கொண்டிருக்கிறது.


காத்துக் கிடக்கும் அரசியற்களம் பாட்டாளிபுரம்

இங்குள்ள 92 வீதமான குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். இவர்களது மாத வருமானம் 3500 ரூபாய்க்கும் குறைவானது. இதன்படி நாள் ஒன்றிற்கு 110 ரூபாய்க்கும் குறைவான வருவாயினையே இக்குடும்பங்கள் பெறுகின்றன. 

இத்தகைய பின்னணியில் பல்வேறுவகையில் பாதிக்கப்பட்ட இம் மக்களுக்கு சமுர்த்தி மறுக்கப்படுவதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். ஒரு ஊர் கடந்த பலவருடங்களாக அரச நல திட்டத்தில் இருந்து புறக்கணிக்கப்படுதல் என்பது தேசிய பிரச்சனையாகிறது. எனவே மாவட்டம், மாகாணம், பிராந்தியம் தாண்டி இப்பாதிக்கப்பட்ட  மக்களுக்காக நாடாளுமன்றத்தில் யாரும் குரல் கொடுக்கலாம். 

ஏலவே பலமுறை தன்னார்வ அமைப்புக்கள் பலவற்றுடன் இணைந்து போராடியும் மக்கள் பலனின்றி இருக்கிறார்கள்.  சமுர்த்தி கிடைத்ததும் இங்குள்ள எல்லாப் பிரச்சனையும் தீர்ந்துவிடுமென்றில்லை ஆனால் அது அவர்களது இன்றுள்ள நிலைக்கு ஒரு குறைந்தபட்ச ஆறுதலையாவது தரும். எனவே  சரியாக திட்டமிட்டு அரசியல்ரீதியாக தொடர்ந்தும் போராடி இதனை வெல்ல வேண்டிய தேவை இருப்பதாகவே தெரிகிறது..

வறுமை குன்றிய செழிப்பான இலங்கைத் தேசமொன்றினைக் கட்டியெழுப்புதல் எனும் நோக்குடன் செயற்பட்டுவரும் சமுர்த்தி திட்டத்தில் இருந்து இலங்கையில் அதிகளவிலானவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் கிராமத்தவர்களான இவர்கள் விலக்கி வைக்கப்பட்டிருப்பது பற்றி இலங்கை நாடாளுமன்றமும்,  சமுர்த்தி திட்டத்திற்கு பொறுப்பான அமைச்சரும் அறிந்திருக்கிறார்களா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

அண்மைக்காலமாக பல்வேறுதரப்பினரும் திருகோணமலைத் தமிழ் அரசியலில் ஆர்வம்காட்டி வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. அவர்கள் அனைவரின் முன்னாலும்....... 

காத்துக் கிடக்கிறது  பாட்டாளிபுரம் அரசியற்களம்
போராடி வென்றால்
வாக்கு உங்களுக்கு
வாழ்வு மக்களுக்குநட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com


தொடர்புடைய பதிவுகள்....
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment