Saturday, July 22, 2017

பாட்டாளிபுரம் அன்புடன் அழைக்கிறது. – புகைப்படங்கள்


திருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்றான பாட்டாளிபுரத்திற்கு பயணிக்கும் வாய்ப்பு இருவாரங்களுக்கு முன்னர் வாய்த்திருந்தது. சிலவருடங்களுக்கு முன்னர் மருத்துவ முகாம் ஒன்றிற்காக நண்பன் Dr. இளங்கோவுடன் பாட்டாளிபுரம் சென்றுவந்ததன் பின்னர் இதுவே எனது இரண்டாவது பயணம்.

இந்தப் பயணத்திற்கான ஒழுங்கினை Dr. சசிதரன் அவர்கள் செய்திருந்தார். அவருடன் Dr..சரவணபவன், Dr..ரவி, திரு நிதுசன் ஆகியோர் உடனிருந்தனர்.


திருகோணமலையில் இருந்து ஆரம்பித்த பயணம் மூதூர் நகரின் சீரான வீதிகளுக்கூடாக பாட்டாளிபுரம் நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது.


நாம் வாழும் உலகில் எம்மைச்சுற்றி இப்படியான நிலையிலும் மக்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு உதாரணமான கிராமங்களில் இதுவும் ஒன்று.

செப்பனிடப்படாத மேடுபள்ளமான வீதி சிறு காடுகளுக்கூடாக நெளிந்து வளைந்து சென்றுகொண்டிருந்தது. கூப்பிடு தொலைவில் ஆள்நடமாட்டமே இல்லாத வீதிதனில் பயணிக்கையில் வாகனம் பழுதாகி விடக்கூடாதே என மனம் வேண்டிக் கொண்டது.யுத்தம் எவ்வளவு கொடியது என்பதற்கு அதன் வடுக்களையெல்லாம் தாங்கி இன்னும் அதிலிருந்து வெளியேறி சாதாரண வாழ்வுநிலைக்கு வரமுடியாமல் தவிக்கும் இதுபோன்ற கிராமங்களே சாட்சி.

வீதியோரத்தில் மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட ‘பாட்டாளிபுர’ என்ற பெயர் பலகையோடு அறிமுகமாகிறது இக்கிராமம்.


இக்கிராமத்திலும் இதனை அண்டிய பிரதேசங்களிலும் வாழும் மக்கள் பழங்குடிகள் ( ஆதிவாசிகள் ) ஆவர். யுத்தத்திற்கு முன்னர் வேட்டையாடுதல் , தேனெடுத்தல் , கிழங்கு தோண்டுதல் , விறகு வெட்டுதல், விவசாயம் செய்தல் , விலங்கு வளர்ப்பு என்று தன்னிறைவாக வாழ்ந்த சமுதாயத்தினைச் சேர்ந்தவர்கள்.

யுத்தமும், இடப்பெயர்வும் அவர்கள் வாழ்வினை சீர்குலைத்துவிட்டது. வேட்டைத் தொழில் அரசால் தடை செய்யப்பட்டதும், காட்டில் தேன் எடுப்பதிலும், கிழங்கு தோண்டுவதிலும் உள்ள நடைமுறைச் சிக்கல்களும் பூர்விக விவசாய நிலங்களும், கால்நடைகளும் இழக்கப்பட்டதும் அவர்கள் வாழ்வினை வெகுவாகப் பாதித்திருக்கிறது.


இப்போது சிலர் விறகுவெட்டிப் பிழைக்கிறார்கள். சிலர் கடல்தொழில் செய்கிறார்கள். பலரது பிரதான தொழிலாக கூலித் தொழிலே காணப்படுகிறது.


2006 இல் இடம்பெற்ற மாவிலாறு யுத்தம் இவ்வூர் மக்களை பலத்த பொருளாதார, உயிர் இழப்புகளுடன் வாகரை ஊடாக மட்டக்களப்பு நோக்கி அகதியாக்கியது. அன்று தொடங்கிய அவல வாழ்வு மீள்குடியமர்வின் பின்னரும் இன்றுவரை தொடர்கிறது.

யுத்தத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புகள், உடமை இழப்புகள் தவிர்த்து போதிய ஊதியமின்மை, குடிநீர்வசதி, போக்குவரத்து, மருத்துவம், மின் இணைப்பு என்பன கிடைப்பதிலுள்ள பிரச்சினைகள், சிறுவர்களின் போசாக்கின்மை, பாடசாலை இடைவிலகல், இளவயது திருமணம், சமூர்த்தி வசதி மறுப்பு, முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரப் பிரச்சினை, காணி அபகரிப்பு என்று நீண்டு செல்கிறது அக்கிராம மக்கள் அனுபவித்துவரும் துன்பங்கள்.

2011 இன் இறுதிப்பகுதியில் அரச சார்பற்ற நிறுவனத்தால் கட்டி முடிக்கப்பட்டு நீண்டகாலம் வைத்தியர் இல்லாமையால்  இயங்காமல் இருந்த பாட்டாளிபுர ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் தற்போது சிறிய, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயங்குவதற்கான முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறது.


களத்தில் தகவல்சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது மிகவும் கவனத்தை ஈர்த்ததும், மனத்தைக் கனக்கச் செய்ததுமான விடையத்தை முதலில் பகிரலாம் என நினைக்கிறேன். இங்குள்ள ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் போசாக்கின்மை மிகத்தீவிரமாக காணப்படுவது கவலையளிப்பதாக இருக்கிறது.

பாட்டாளிபுரம் ,இலக்கந்தை , நல்லூர், வீரமாநகர், நீலாக்கேணி ஆகிய ஐந்து கிராமங்களில் மொத்தமாக 3096 பேர் வசிக்கின்றனர். அவர்களில் 280 பிள்ளைகள் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களில் 126 பேர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இப்பிரிவினரின் 45 % மாகும்.


Severe Acute Malnutrition (SAM) , Moderate Acute Malnutrition (MAM)

இப்பாரிய பிரச்சனைக்கு நம்முன்னால் இரண்டு வழிமுறைகள் இருக்கிறது.
01. நிலைமையின் தீவிரத்துக்கு ஏற்ப அவசரமாக தற்காலிக உதவிகளைப் பெற்றுக்கொடுத்தல்.
02. அரச, அரச சார்பற்ற , புலம்பெயர் அமைப்புகளின் அனுசரணையுடன் நீண்டகால திட்டங்களை வகுத்துச் செயற்படுதல்.

உண்மையில் இந்த பதிவும், படங்களும் அங்குள்ள நிலைமையின் தீவிரத்தை உங்கள் மனக்கண்ணின் முன் கொண்டுவந்திருக்குமா? என்று தெரியவில்லை. ஆனால் ஒருமுறை நேரில் அங்கு நீங்கள் பயணித்தால் பல நாட்களுக்கு உங்களால் நிம்மதியாக உறங்கமுடியாது என்பது மட்டும் நிச்சயமான உண்மை.

உதவும் மனம் படைத்த நல்லுள்ளங்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம், 
பாட்டாளிபுரம் உங்களை அன்புடன் அழைக்கிறது.

நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.comஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. யுத்தம் தந்த வடுக்களை விட அவர்களது சொந்த வயல்நிலங்களை முஸ்லீம்கள் ஆக்கிரமித்துக் கொண்டமை யுத்தத்தின் பின்னரான மீள் எழுச்சித் திட்டங்களில் இப்பிரதேசம் அரச அதிகாரிகளினால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டமையும் அதனால் மனதளவில் ஏற்பட்ட பாதிப்புக்களும் சுய தொழில் வாய்ப்பின்மையினால் ஏற்பட்ட வறுமை கல்வியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு சீரான மருத்துவ வசதியின்மை போன்றவையே இக்கிராமத்தின் இந்நிலைக்கு காரணமாக இருக்கின்றது

    ReplyDelete
  2. யுத்தம் தந்த வடுக்களை விட யுத்தத்தின் பின்னர் புறக்கணிக்கப்பட்டமையே இக்கிராமத்தின் இன்றைய நிலைக்கான காரணமாக இருக்கின்றது

    ReplyDelete
  3. Thank you for your information Dr

    ReplyDelete