Wednesday, July 12, 2017

துளைகொண்ட அபூர்வ பானை கந்தளாயில் - புகைப்படங்கள்


திருகோணமலையின் நகரப்பகுதியில் இருந்து சுமார் 40 Km தூரத்தில் அமைந்திருக்கும் வயல்வெளியும், மலைகளும் ,பிரமாண்டமான நீர்த்தேக்கமும் கொண்டமைந்த இயற்கை வனப்பு நிறைந்த பூமி கந்தளாய். இன்று கந்தளாயில் 13679 குடும்பத்தினைச் சேர்ந்த 50961 மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 40467 பேர் சிங்களவர்கள்;, 8746 பேர் முஸ்லீம்கள் ,1748 பேர் தமிழர்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் இன்றைய நிலையில் மிகச்சிறிய அளவில் தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் ஒன்றாக கந்தளாய் இருக்கிறது. கந்தளாய் நகரப்பகுதியில் இருந்து சில நிமிடப் பயணத்தில் பேராறு என்னும் இடம் இருக்கிறது. இங்கு ஒரு சிவாலயம் இருக்கிறது. இவ்வாலய வளவில் புராதான சோழர்காலக் கோயிலின் சிதைந்த பாகங்களைக்கொண்ட சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் , கல்வெட்டுக்கள் என்னபன பாதுகாக்கப்பட்டு வருகின்றன.சில வருடங்களுக்கு முன்னால் சோழர்கால கல்வெட்டுக்களைக் காண்பதற்காக வைத்திய கலாநிதி. ஜெயகாந்த் உடன் கந்தளாய்ச் சிவன் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அப்போது கோயிலின் அயலில் வசிக்கும் திரு. இரவிராஜனும் அவரது மகனும் அக்கல்வெட்டுக்களைப் பார்ப்பதற்கு உதவி புரிந்தனர்.

ஆயிரம் வருடப் பழமை வாய்ந்த சோழர்காலப் புராதான பொருட்களைப் பார்த்த சந்தோசத்தில் வீடு திரும்ப எத்தனித்த வேளை அதிஷ்டவசமாக ஒரு மட்பாண்டத்தினைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது.


 நிலைக்குத்தாக   சரிபாதியாக உடைந்த அந்த மட்பாண்டம். அது, உணவு சமைப்பதற்கான பானையன்று. அதன் வாய்ப்பகுதி அகலமானது. அதன் கழுத்துப் பகுதியில் மாவிலை போன்ற சித்திர வேலைப்பாடுகளைக் கொண்டது. அத்துடன் வாய்ப்பகுதியில் சிறிய துளைகள் ஒரே வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. பானையின் வேலைப்பாடுகள் அசாதாரணமானவை.

அது சமுதாயத்தில் உயர்மட்டத்தில் இருந்தவர்களிடையே புழக்கத்தில் இருந்த மட்கலம். அது அரண்மனை அல்லது வழிபாட்டுத்தலம் ஒன்றின் உடைமையாக இருந்திருக்கும் என்பதனை உணரக்கூடியதாக இருந்தது.

வசிப்பிடத்தில் அகில், சாம்பிராணி போன்ற வாசனைப்பொருட்களை எரித்து நறுமணம் பரப்பும் புகையினை வெளிப்படுத்துவதற்கும், வேப்பங் கொட்டை முதலானவற்றை எரித்து நுளம்புகளை அகற்றுவதற்கும் இவை பயன்படக் கூடியது.

துளையிடப்பட்ட இப்பானை மிகமுக்கியத்துவம் வாய்ந்த அரும்பொருள். இப்பானையினை புகைப்படம் மூலமாக பார்த்த பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் அதிலுள்ள பிராமி எழுத்துக்கள்  வேள் ணாகன் (நாகன்)  என அடையாளங்காண முடிவதாக பதிவுசெய்துள்ளார். நாகரோடு தொடர்புடைய தமிழ்ச் சாசனங்கள் இப்பானையில் காணப்படுவதால். இது வேள்நாகனின் அரண்மனைக்கு உரியதாகவோ அல்லது வேள் நாகனால் வழிபாட்டுத்தலம் ஒன்றிற்கு வழங்கப்பட்டதாகவோ இருத்தல்வேண்டும்.

உலகின் ஒவ்வொரு நிலப்பரப்பின் வரலாறும் அங்கு வலிமையுடன் நிலைபெறும் மக்கள் கூட்டத்தினரால் எழுதப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் பழமையில் வலிமையுடன் இருந்த மக்கள் கூட்டம் காலப்போக்கில் வலிமை குன்றிப்போவதும், சிலவேளைகளில் முற்றாக மறைந்து போவதும் உண்டு. அதுபோலவே புதிதாகக் குடியேறிய மக்கள் கூட்டம் வலிமை பெற்று நிலைபெறுவதோடு புதிய ஒழுங்குகளை அங்கு உருவாக்கி விடுவதும் உண்டு. இந்த மாற்றங்களை வரலாற்றுப்பக்கங்கள் நெடுகிலும் நாம் காணக்கூடியதாய் இருக்கும்.

இன்றைய காலகட்டத்தில் மிகக்குறைந்த விகிதாசாரத்தில் தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசமாக தம்பலகாமமும், கந்தளாயும் இருக்கின்றது. இங்கு கிடைக்கப்பெற்ற இவ்வரிய பொக்கிசங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களிடம் சமர்ப்பித்திருந்தேன். அவரது அயராத முயற்சியினால் இந்த இடங்களில் பராதான காலம் முதல் தமிழர்கள் செல்வாக்குடன் வாழ்ந்த செய்தி உலகிற்கு உறுதிப்படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது.


கந்தளாய் துளைகொண்ட அபூர்வ பானை  தொடர்பான கட்டுரை பேராசிரியர் சி.பத்மநாதன் பேரன்பினால் அவரது நூலான இலங்கைத் தமிழர் வரலாறு என்ற நூலின் கட்டுரைகளில் ஒன்றாக 326வது பக்கத்தில் இடம் பிடித்திருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வெளியீடாக  வெளிவர இருக்கும் இந்நூல் நம் இளையோரை கந்தளாயில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத தமிழர் வரலாற்றுத் தடங்களை நோக்கி நகரச்செய்யும் என்பதில் ஐயமில்லை.


நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com

ஜீவன்
பயணம் தொடரும்........

மேலும் வாசிக்க
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

6 comments:

 1. வாசனையை வெளியேத்தவும், சாம்பலை வெளியேத்தவும் வழி இருக்கா?! படங்கள் அருமை

  ReplyDelete
 2. ஈக்கிள் குச்சிகளால் ஏற்படுத்தப்பட்ட துளைகள் அவை

  ReplyDelete
 3. Dear Dr
  Once I went to kantalai school. Mr.Sinnathamby was the principal of Parameswara.m.v. He organised a function. I was there for two days ans showed lot of such things. The present principal also told of historical things. You have brought such things to light through Geevanathy. Thnk you verymuch. Jeep it up. Shnmugam Arulanantham

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தகவல்களுக்கும் வாழ்த்துக்கும்

   Delete
 4. அருமையான வரலாற்றுத் தகவல்

  ReplyDelete