Thursday, September 07, 2017

திருகோணமலையில் அகழ்வாய்வுப் பணிகள்


திருகோணமலையில் சமகாலத்தில் மூன்று இடங்களில் அகழ்வாய்வு முயற்சிகள் நடைபெறுவதாக அறியமுடிகிறது. அவை

1. திருக்கோணேச்சரம் கோட்டை மதில்
2. கந்தளாய்ச் சிவாலயம்
3. திருமங்கலாய்  சிவாலயம் என்பனவாகும்.

கன்னியா பிரதேசத்தில் ஏலவே இடம்பெற்ற ஆய்வு முயற்சிகளும், அதனைத்தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும் நம்மில் பலரை மேற்படி அகழ்வாய்வுகளில் ஆர்வங்கொள்ளச் செய்திருக்கிறது. எனினும் வழமை போலவே சந்தேகங்களும், நம்பிக்கையீனங்களும் நம்மைச் சூழ்ந்திருக்கிறது.இன்றுள்ள சூழல் நமக்கு சில முக்கிய விடையங்களின் அவசியத்தினை உணர்த்துவதாக உள்ளது.

1. புராதான ஆலய வழமைகளைப் பழமையில் இருந்ததுபோல் இன்றும் பேணவேண்டியதன் அவசியம். - இது அண்மையில் கன்னியாவில் இருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம். குறித்த தலம் எதற்கு பிரசித்தமானதோ அந்த வழமைகளை தொடர்ந்தும் பின்பற்றி எமக்கான உரிமையினை உறுதிப்படுத்திக்கொள்ளல்.

2. முதல்நிலை வரலாற்றுத் தகவல்களை சேகரித்தலும் பதிவு செய்தலும். -  வரலாற்றைப் பதிவு செய்தலை சமூகக் கடமையாக கருதி கிடைக்கும் முதல்நிலைத் தகவல்களை ஆர்வம் உள்ளவர்கள் பதிவு செய்தல். தொல்பொருள், வரலாற்று துறைசார் வல்லுணர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளல்.

3அடியவர்களின் தலயாத்திரையினை ஊக்குவித்தல் - நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலயாத்திரையாக வருவோருக்கு உதவக்கூடிய வகையில் யாத்திரிகர் மடங்களை அமைத்தல். அவர்களுக்கு உதவும் வகையில் திருகோணமலையில் உள்ள தொன்மையான வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய வழிகாட்டி கைநூலினைத் தயாரித்தல்.

4. சிறுவர்கள் மத்தியில் வரலாற்றுணர்வை விதைத்தல்.  அறநெறிப்பாடசாலை மாணவர்களை தொன்மையான தலங்களுக்கு சுற்றுலாவாக அழைத்துச் சென்று அவற்றின் முக்கியத்துவம் தொடர்பில் அறிவுறுத்துதல்.

5. இளையோர் இணைந்து வரலாற்றுக் கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்தலும் அதன் முடிவுகளை ஆவணமாக்கலும்.

6. சமய , சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து வருடத்தில் ஒருமுறையேனும் கலை, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் விழாக்களை ஒழுங்கு செய்தல். ( குறிப்பாக திருமங்கலாய் சிவாலயம், பறையன்குளம் எல்லைக்காளி , கப்பல்துறைக்  கண்ணகி அம்மன் போன்ற ஊர்மனைகளில் இருந்து தூரமாக காட்டிற்குள் இருக்கும் புராதான ஆலயங்களில்)

7. ஏனைய ஆலயங்களுடனும் , சமய நிறுவனங்களுடனும் உறவினைப்பேணி ஒன்றிணைந்து செயற்படல்.

8. பௌதீக கட்டமைப்பை விட ஆலய இயங்கு நிலைக்கு முக்கியத்துவம் கொடுத்தல். உதாரணமாக இருக்கும் சிறிய கோபுரத்தினை உடைத்து பெரிய கோபுரம் கட்டுவதற்குப் பதிலாக அந்தப்பணத்தில் ஆலயவளவில் அறநெறிப்பாடசாலை அமைத்தல். ஒரு உயர்ந்த கோபுரம் தரும் பலனைவிட நீண்டகால நோக்கில் முறையாகச் செயற்படும் அறநெறிப்பாடசாலைகள் பயன்தரும்.

9. சமூக , சமய விடையங்களில் முன்னின்று செயற்படல்.

10. பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வேளையில் அவற்றினை உணர்வுபூர்வமாக அணுகாமல், அறிவுபூர்வமாக அணுகி நீண்டகால நோக்கில் முடிபுகளை எடுத்தல்.

போன்ற பல்வேறு திட்டங்களை செயற்படுத்தவேண்டிய கட்டாய நிலையினில் நாம் இருப்பதாகவே தோன்றுகின்றது.இத்தகைய சூழ்நிலையில் இலங்கையில் அமுலில் இருக்கும் தொல்பொருள் தொடர்புடைய முக்கிய சட்டங்கள் தொடர்பில் அறிந்திருத்தல் அவசியமாகிறது.

தொல்பொருளியல் பாதுகாப்பிடத்தைப் பிரகடனப்படுத்தல் தொடர்புடைய தகவல்கள் அதன் முக்கியத்துவம் கருதி இங்கு பகிரப்படுகிறது. இவை இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான  www.archaeology.gov.lk   இருந்து பெறப்பட்டவையாகும்.        


தொல்பொருளியல் பாதுகாப்பிடத்தைப் பிரகடனப்படுத்தல்.

ஏதேனும் ஒரு காணியில் தொல்பொருள் இருப்பதாக அடையாளம் காண்கின்றபோது குறித்த காணி அரசாங்கத்திற்கு அல்லது தனியாருக்கு உரிமையான காணியாக இருப்பினும்கூட அதில் அத்துமீறிய பயிர்ச்செய்கை, குடியேற்றம், நிர்மாணம் என்பவற்றைத் தடுப்பதற்கும் அதன் நிலையான நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும் அக்காணியை தொல்பொருளியல் பாதுகாப்பிடமாகப் பிரகடனப்படுத்த முடியும்.

நிலப்பகுதியை அடையாளம் காணுதல்.
 1. பிரதேச அலுவலகத்திலிருந்து அவதானிப்பு அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்தல்.
 2. சம்பந்தப்பட்ட திட்டவரைபடங்களையும் அளவைத் திட்டங்களையும் கேட்டனுப்புதல்.

காணி, அரசாங்கக் காணியா அல்லது தனியார் காணியா என்பதைப் பிரதேச செயலகத்திலிருந்து அறிந்துகொள்தல்.
 1. தனியார் காணியாக இருக்கின்றபோது அதன் உரிமையாளரின் உரிமை தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்தல்.
 2. அரச காணியாக இருப்பின் சம்பந்தப்பட்ட காணியின் விபரங்களைப் பெற்றுக் கொள்தல்.
 3. குறித்த நிறுவனத்திடம் திட்டவரைபடம், அளவைத்திட்டம் என்பவற்றைக் கேட்டனுப்பல்.
 4. தனியார் காணியொன்றைச் சுவீகரிப்பதற்கு உரிமையாளரின் சம்மதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
 5. அவருக்கு / அவளுக்கு நட்டஈடு செலுத்த வேண்டும்.
 6. குறித்த பணிக்காக மதிப்பீட்டு அறிக்கையொன்றை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும்.
 7. பிரதேச செயலாளர் அளவை கட்டளையொன்றை வழங்க வேண்டியது அவசியமாகும்.
 8. பிரதேச செயலகத்தில் மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் குறித்த நிறுவனத்தின் தலைவர் மூலம் அமைச்சு செயலாளரின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
 9. இதன்பொருட்டு சம்பந்தப்பட்ட மாதிரிப்படிவங்களை நிரப்ப வேண்டும்.
 10. காணி ஒரு மில்லியன் ரூபாவுக்கு அல்லது அதைவிட குறைந்த தொகைக்கு மதிப்பிடப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சரின் அங்கீகாரத்தையும் அதற்கு மேற்பட்ட மதிப்பீடாக இருந்தால் அமைச்சரவை அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
 11. அதன் பின்னர் பிரதேச செயலாளர் நட்டஈட்டைச் செலுத்தியதன் பின்னர் காணியைத் தொல்பொருளியல் பாதுகாப்பிடமாகப் பிரகடனப்படுத்துவதற்கு உரிய அறிவித்தல் வரைவை மும்மொழிகளிலும் தயாரிக்க வேண்டும்.
 12. அவ்வரைபை அதன்பின்னர் சட்டவரைஞருக்கு அனுப்பி அதன் பின்னர் அரசாங்க அச்சகத்தின் அதிபரைக்கொண்டு அச்சிட்டுக்கொள்ள வேண்டும்.
 13. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தால் அதுவும் உள்ளடக்கப்படுதல் வேண்டும்.
 14. அரச காணியாக இருக்கும் சந்தர்ப்பங்களில் அக்காணி உரித்தாக இருக்கின்ற நிறுவனத்தின் உடன்பாட்டைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் காணி ஆணையாளர் நாயகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
 15. அதன் பின்னர் மேற்குறிப்பிட்டவாறு தொல்பொருளியல் பாதுகாப்பிடமாகப் பிரகடனப்படுத்தப்படல் வேண்டும்.
 16. அத்தகைய அரச காணியொன்றில் அத்துமீறிக் குடியேறியவர்கள் இருப்பின் வெளியேற்றும் கட்டளையின் மூலம் அவர்களைக் காணியிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
 17. நட்டஈடு செலுத்த வேண்டியிருக்கின்ற ஒரு சில அரச காணிகள் தொடர்பாக மேற்குறிப்பிட்ட நடவடிக்கையையே பின்பற்ற வேண்டும்.

இதுசம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.
 1. பிரதேச செயலகம்
 2. மாகாண சபை
 3. பிரதேச சபை (உள்ளூராட்சி நிறுவனம்)
 4. மகாவலி அதிகாரசபை.
 5. காணி ஆணையாளர் திணைக்களம்.
 6. காணி மீட்டல் திணைக்களம்.
 7. காடு பேணல் திணைக்களம்.
 8. வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்.
 9. காணி அமைச்சு.

புராதன நினைவுச் சின்னங்களைப் பிரகடனப்படுத்துதல்.

1940ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் 16, 17, 18, 19ஆம் பிரிவுகளின் பிரகாரம் வர்த்தமானியில் அறிவித்தல் ஒன்றை வெளியிடுதவதன் மூலம் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் புராதன நினைவுச் சின்னங்களைப் பிரகடனப்படுத்த முடியும்.

1988ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க தொல்பொருள் (திருத்த) சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம், 100 வருடங்களைக் கடந்த வரலாற்று ரீதியாகவும் தொல்பொருளியல் ரீதியாகவும் பெறுமதி மிக்க புராதன நிர்மாணங்கள், புராதன நினைவுச் சின்னங்களாகப் பிரகடனப்படுத்தப்படும்.

1940ஆம் ஆண்டின் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் 16, 17ஆம் பிரிவுகளின் கீழ் அரச காணிகளில் அமைந்துள்ள புராதன மரங்களைப் பேணிப் பாதுகாக்கும் பொருட்டு குறித்த கட்டிடங்களையும் மரங்களையும் புராதன நினைவுச் சின்னங்களாகப் பிரகடனப்படுத்தமுடியும்.

தனியார் காணிகளில் இருக்கின்ற புராதன நிர்மாணங்கள் தொடர்பாக எதிர்ப்புகள் அழைக்கப்பட்டதன் பின்னர் கட்டளைச் சட்டத்தின் 19வது பிரிவின் பிரகாரம் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாகப் பிரகடனப்படுத்த முடியும்.

சிற்சில இடங்களைத் தொல்பொருளியல் நினைவுச் சின்னங்களாகப் பிரகடனப்படுத்தியதன் பின்னர் அவற்றை நவீனமயப்படுத்தும் பணிகள் சேர்த்தல் அல்லது பேணிப் பாதுகாக்கும் பணிகள் என்பவற்றிற்காகத் தொல்பொருளியல் திணைக்களத்தின் முறையான அங்கீகாரத்தைப் பெறவேண்டியது கட்டாயமென 21வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரகடனப்படுத்தப்பட்ட நினைவுச் சின்னமொன்றை அழிக்கின்ற அல்லது சேதப்படுத்துகின்ற அல்லது திரிவுபடுத்துகின்ற ஆளெவரும் தவறாளியாகின்ற அதேநேரத்தில் நீதவான் ஒருவர் எதிரில் வழக்கு விசாரணையின் பின்னர் 50,000/- ரூபாவுக்குக் குறையாத 250,000/- ரூபாவுக்கு மேற்படாத அபராதத்திற்கு அல்லது 2 வருடங்களுக்குக் குறையாத 5 வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனைக்கு இன்றேல் இவ்விரு தண்டனைகளுக்கும் உள்ளாகுதல் வேண்டும். வழக்கு விசாரணை முடிவடையும் வரை தவறாளிக்கு பிணை வழங்கமுடியாது எனவும் சட்டம் மேலும் குறிப்பிடுகிறது.

தொல்பொருளியல் நிலையங்கள் மற்றும் அவற்றின் குறைந்தபட்ச சூழலைக் கவனத்திற்கொண்டு தொல்பொருட்களுக்கும் பிரகடனப்படுத்தப்பட்ட நினைவுச் சின்னங்களின் தொல்பொருளியல் மதிப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் மேற்குறிப்பிட்ட கட்டளைச் சட்டத்தின் 24(1) ஆம் பிரிவின் கீழ் கட்டளைகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் 400 மீற்றர் தூரத்திற்குள் கட்டிடங்களை அமைத்தல், கற்குழிகளை உண்டாக்குதல், சுரங்கங்கள் அகழ்தல், வெடிவைத்தல் என்பவற்றைத் தடைசெய்ய முடியும்.

இவை தவிர மேலும் பல தொல்பொருள் தொடர்புடைய விதிமுறைகளை
இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து வாசித்து அறியலாம்.


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments: