Saturday, November 17, 2018

சூரனின் பின்னால் இருந்து அம்பெய்பவர் - புகைப்படங்கள்


சிறுபிராயம் முதல் பார்த்துவருகின்ற சூரன் போரினை மகனுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். நினைவுகள் பின்னோக்கி மிகவேகமாகச் சென்றிருந்தது.

சிறுவயதில் அசையாமல் நின்ற இடத்தில் நின்றபடி அம்பெறியும் கடவுளைவிட ஆரவாரமாக அங்குமிங்கும் ஆவேசத்துடன் சுற்றித் திரிந்து. துள்ளிக் குதித்து கூடியிருப்போரை உருவேற்றியபடி கடவுளுடன் சண்டை செய்யும் சூரன்மேல் அதிக ஈர்ப்பு இருந்ததில் ஆச்சரியமேதுமில்லை.


 ஒவ்வொரு முறையும் வெவ்வேறான தலைகளுடன் வந்து விதம் விதமான வண்ண நிறங்களில் அம்பெறியும் சூரர்களின் முகங்களை இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பேன்.

முதல் வந்த சூரனைவிட அடுத்துவருபவர் முதலில் அமைதியாக வந்து நேரம் ஆக ஆக முதல் வந்த சூரனை விட ஆவேசம் கொண்டு ஆடி கடவுளுக்கு மட்டுமல்ல சுற்றியிருந்த அனைவரின் மீதும் அம்பெறிந்து அட்டகாசப்படுத்திவிட்டுப் போவார்.


அடுத்த முறை அழிந்துவிடுவான் என்று ஆர்வத்துடன் பார்த்திருந்த எனக்கு சூரன் மரமாகிப் பின்னர் சேவலும், மயிலுமாக மாறியது ஆச்சரியம் தருவதாக இருந்தது. அதிர்ச்சியோடு அப்பப்பாவைப் பார்த்தேன். சூரனுக்கு அழிவில்லையடா தம்பி தனக்கு ஏலாத காலத்தில் மரமாக, சேவல், மயிலாக மாறி இருந்துவிட்டு அடுத்த வருசமும் கடவுளுடன் சண்டைபோட அதே ஆக்ரோசத்துடன் சூரன் வருவான். வா நாம இப்ப போகலாம் என்று கூறியபடி கைபிடித்து அழைத்துச் சென்றார் அவர்.


சூரன் போர் முடிந்து பார்க்க வந்தவர்கள் பக்திப் பரவசத்துடன் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் அமைதியாகவும் , நிதானத்துடனும் நடந்து கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுக்காரரைக் காட்டி இவரைத் தெரியுமா என்று கேட்டார் அப்பப்பா.

ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தேன். நீ பார்த்து பயப்பட்ட ஒவ்வொரு சூரனையும் பின்னால் இருந்து ஆட்டுவித்தவர் இவர்தான். இவர்தான் சூரனின் பின்னால் இருந்து அம்பெய்பவர் என்று அவரை அறிமுகப்படுத்தினார் அவர்.


ஒரு சிறுவனாக அந்தநேரத்தில் சூரனின் பின்னால் இருந்து அம்பெய்பவர் தொடர்பில் எனக்கு அதிக கரிசனை இருந்ததில்லை. எனவே வீடு செல்லும் ஆர்வத்தில் கூட்டத்தை இடித்துச் செல்லும் சிறுவர்களுள் ஒருவனாக எனது அன்றைய பயணத்தை முடித்திருந்தேன்.


இன்றும் அதேமாதிரியான ஒரு சூரன்போரில் மகனை முன்வரிசையில் விட்டு பின்னால் நின்றபடி பார்த்துக் கொண்டிருக்கின்றேன். எனது சிறுவயது ஞாபக மீட்டல்கள் எல்லாவற்றையும் மறக்கச் செய்வதுபோல் என்பின்னால் கூட்டத்தில் நின்ற இருவரின் உரையாடல் அமைந்திருந்தது.

அரோகரா என்ற பக்தர்களின் கோசங்களையும் தாண்டி மிக காரசாரமாக இன்றைய இலங்கையின் அரசியல் களநிலவரங்களை அவ்விருவரும் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

மாறி மாறி இலங்கை அரச ஆட்சிபீடமேறும் தலைவர்களின் குணாதிசயங்களையும், அவர்களது அரசியல் வரலாற்றையும், அவர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள ஆதரவு விபரங்களையும், அவர்களது எதிர்காலத் திட்டங்களையும் கூறி என் பின்னால் நின்ற இருவரும் வாதிட்டுக் கொண்டிருந்தனர். ஆவ்விருவரில் ஒருவர் இலங்கை அரசியல் வரலாற்றினைக் கரைத்துக் குடித்தவர் போலிருந்தது. சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த அத்தனை தலைவர்களைப்பற்றி மிக நுட்பமான தகவல்களோடு விபரித்துக் கொண்டிருந்தார்.

அந்த இருவரின் உரத்த குரல்களுக்கு நடுவில் ஒரு அமைதியான வயதானவரின் குரல் மிக நிதானமாக தம்பி நீங்க பெயர் சொல்லிச் சண்ட போடுற இருவரும் வேறவேற குணங்கொண்டவங்கதான், வேறவேற கட்சி ஆக்கள்தான் ஆனா அவங்கள பின்னால இருந்து ஆட்டிறது ஒரு சக்திதான் என்று தனது மன  உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். அவர் சொல்லியது சின்னவாக்கியந்தான் என்றாலும் இலங்கை நாட்டின் அரச பாரம்பரியத்தினை ஈராயிரம் வருடங்களாக பின்னால் இருந்து ஆட்டுவிக்கும் ஒரு மாபெரும் சக்தி பற்றிய விளக்கமாக அது இருந்தது.

அருகில் நடக்கும் அரசியல் அரட்டையில் சங்கமிக்க ஆர்வம் மேலிட்ட போதும் என் முன்னால் நிற்கும் மகனின் மீதான கவனம் சிதறினால் பின்னர் வீட்டில் நானொரு சூரன் போரினை சந்திக்க நேரிடும் என்ற பயத்தில் பின்னால் திரும்பாமல் இருந்துவிட்டேன்.

வழக்கம் போல சூரன்போர் ஓய்ந்து மகனுடன் வீடு செல்லும் போது கூட்டத்தில் நடந்துவந்த ஒருவரை அறிமுகப்படுத்தினேன். அவர் அன்றைய தினம் சூரனின் பின்னால் இருந்து அம்பெய்தவர்.


இவர்தான் மகனே இன்று நீ பார்த்த சிங்கமுகன், யானைமுகன் என்று முகங்களாலும், குணங்களாலும் வேறுபட்ட சூரர்களை இயக்கியவர். அதுமட்டுமல்ல சூரனின் பின்னால் இருந்து தொடர்ச்சியாக அம்பெய்தவரும் இவர்தான் என்றேன். இத்துடன் முடித்துக்கொள்ள மனம் ஏனோ விரும்பவில்லை

சூரன் தனக்கு சாதகமில்லாத காலங்களில் மரமாகவும் பின்னர் சேவலும் மயிலுமாக மாறி இருப்பான் ஆனால் மறுபடியும் அதே ஆக்ரோசத்துடன் அடுத்த ஆண்டும் போரில் கலந்து கொள்வான் என்றேன்.

மகன் தலையில்லாமல் நகர்த்திச் செல்லப்படும் சூரன் சிலையையும், நிதானமாகவும், அமைதியாகவும் எங்களைக் கடந்து செல்லும் சூரனின் பின்னால் இருந்து அம்பெய்பவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான்.


நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.comஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. Hi,
    It is nice and i tried to send the mail to your admin mail ID but it was not send to
    could you please give the any other email id to contact you

    ReplyDelete