Tuesday, November 06, 2018

கழனி மலைக்காட்டில் ஒரு கோயில் - புகைப்படங்கள்


கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகப் பிரதேசம் தம்பலகாமம். தம்பலகாமம் என்றதும் நம்நினைவுக்கு வருவது வயலும், வயல்சார்ந்த மருதநிலப் பிரதேசம்தான் என்றாலும் அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவில் மிக நீண்ட மலைப் பிரதேசமும், அடர்ந்த காடுகளும், இடையிடையே குறுக்கறுத்து ஓடுகின்ற ஆறுகளும், அருவிகளும், சிறு குளங்களும் கொண்டமைந்த இயற்கை வனப்பு மிக்க ஒரு பிரதேசம் தம்பலகாமத்தில் இருக்கிறது. அதன் பெயர் கழனி மலைப் பிரதேசம்.


1624 ஆம் ஆண்டு போர்த்துக்கேயப் படைவீரர்கள் கொன்ஸ்டன்டினோ டி சே நோரோனா என்பவனுடைய தலைமையிற் திருக்கோணேச்சரத்தை சூறையாடினர். அச்சூழ்நிலையில் தமது உயிரைப் பணயம் வைத்து பாசுபதர் என்றழைக்கப்பட்ட பூசகர்களும் , தொழும்பாளர்களும் (கடவுள், ஆலயத் திருப்பணிகள் செய்வோர்) ,பக்தர்களும் இணைந்து இடிபட இருந்த கோயிலுக்குள் இருந்த விக்கிரகங்களை எடுத்து மண்ணில் புதைத்து வைத்தும் ,காடுகளிலும், மலைகளிலும் மறைத்துவைத்தும் வழிபாடு இயற்றி வந்தனர் என்பது வரலாறு.

திருக்கோணேச்சரத்திற்குச் சொந்தமான சில விக்கிரகங்கள் இரகசியமாக காடுகள் வழியே எடுத்து வரப்பட்டு தம்பலகாமம் மேற்கு மலைத்தொடரில் உள்ள கழனி மலைச்சிகரத்தில் வைத்து பூசித்து வந்தனர். இதனால் இம்மலை சுவாமி மலை என்று அழைக்கப்படுகிறது. 1600களின் பிற்பகுதியில் (1635-1687) தம்பலகாமத்தில் ஆலயம் அமைக்கப்பட்டது முதல் கழனி மலைச்சிகரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விக்கிரகங்கள் இங்கு முறையாகப் பிரதிஸ்டை செய்யப்பட்டு  வணங்கப்பட்டு வருகிறது. இதனால் இவ்வாலயத்தின் பெயர் ஆதிகோணநாயகர் ஆலயம் என்றே அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கழனிமலைச் சிகரங்கள்மீது அதீத ஆர்வம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதில் முக்கியமானது திருக்கோணேச்சரத்திற்குச் சொந்தமான புராதானமான விக்கிரகங்கள் கழனி மலையில் வைத்து வழிபடப்பட்டுவந்த இடம் தொடர்பானது.

தம்பலகாமம் மேற்குமலைத் தொடரிலுள்ள கழனி மலையில் நடந்த அற்புதம் 

பலமுறை அமரர்  தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களிடம் இருந்து வாய்மொழியாக நான் கேட்டறிந்த கதையொன்றினை அவர் 1982.12.16 இல் தம்பலகாமம் மேற்குமலைத் தொடரிலுள்ள கழனி மலையில் நடந்த அற்புதம் என்ற தலைப்பில் ஆத்மஜோதி இதழில் பதிவு செய்திருந்தார்.


கழனிமலைமேல் எனது ஆர்வம் அதிகமாக இருப்பதற்கான காரணத்தை மேற்கூறிய கதையினை தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களின் மொழிநடையில் படிப்பதற்கூடாகவே புரிந்துகொள்ள முடியும்.


பழமையில் தம்பலகாமம் வயல்வெளிகளில் (மாரி) பெரும்போக வேளாண்மை செய்வதில்லை. காரணம் இங்கு மக்கள் மிகச் சொற்பமாகவே வாழ்ந்தனர். மாரி மழையும் மிகக் கடுமையாகப் பெய்யும். மாரிகாலத்தில் வயல்வெளி கடல்போல் வெள்ளம் நிரம்பிக் காட்சி தரும். ஆகவே சிறு தொகையினர்களாக வாழ்ந்த மக்கள் கோடையில் மட்டுமே அறுவடைசெய்வார்கள். மாரியில் தாயம் எறிந்து விளையாடுவதும், கோஷ்டியாகச் சேர்ந்து கழனிமலைக்கு மரை பிடிக்கப் போவதையும் பெரும்பாலும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.


இதற்கேற்ப ஜீவகாருண்யமிக்க சிவபக்தரான மயில்வாகனார் நண்பர்களின் வற்புறுத்தலுக்கிணங்க மரை வேட்டைக்கு ஒருமுறை போனார். கழனிமலைக் கானகத்தைப் பார்க்க வேண்டும் என்னும் ஆசையே அவரைக் காட்டுக்கு இழுத்துச் சென்றது என்று கூறலாம். ஒரு உயிருக்கும் ஆபத்து ஏற்படக்கூடாது இறைவனே என மனதுக்குள் வேண்டிக்கொண்டே காட்டுக்குச் சென்றார் அவர்.


தம்பலகாமத்துக்கும் மேற்கே அநுராதபுரத்திற்கும் இடையே சுமார் ஐம்பது மைல் கல்வரை விரிந்து கிடக்கும் மலை வனத்தில் தம்பலக்காமத்தையொட்டி இந்த மேற்கு மலைத்தொடர் இருக்கிறது.


மயில்வாகனார் சென்ற வேட்டைக் கோஷ்டி மேற்கு மலைத்தொடர்க்காட்டில் ஒரு மரையின் அடிச்சுவட்டை பின்பற்றி ஒருவர் பின் ஒருவராக சென்று கொண்டிருந்தது. மலை வனம் மத்தியான வேளையிலும் இருண்டு பயங்கரமாகக் காட்சி அளித்தது. ஆகாயத்தைத் தொடுவதுபோல் மரங்கள் வளர்ந்திருந்தன. மலை அடுக்குகளும் பயங்கரப் பள்ளத்தாக்குகளும், சமநிலங்களுமாகக் காடு பலவிதமாகக் காணப்பட்டது. செங்குத்தான சிகரங்களில் இருந்து அருவிகளாக விழும் ஓசை தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்தது.


வேட்டைக்காரர் மரையின் அடிச்சுவட்டைப் பின்பற்றிச் சென்றுகொண்டிருந்தனர். நீண்ட அணியில் பிற்பகுதியில் சென்றுகொண்டிருந்த காட்டுக்குப் பழக்கமற்ற மயில்வாகனாருக்கு மலம் கழிக்கும் உபாதை ஏற்பட்டதால் அணியை விட்டு விலகி ஒரு புதர் மறைவில் மலம் கழித்துச் சுத்தம் செய்து கொண்டு வேட்டைக் கோஷ்டியைத் தொடர எண்ணிப் பார்த்தபோது வேட்டைக் கோஷ்டியைக் காணவில்லை. அவர்கள் மரையடியைப் பின்பற்றி ஒரு சிகரத்தில் ஏறி மறுபுறம் இறங்கிக் கொண்டிருந்தனர்.


ஆட்களைக்காணாமல் பெரும்பீதி அடைந்த மயில்வாகனார் பெரும் குரல் எடுத்துக் கூவினார். ஒன்றும் பயனில்லை. காடு இருண்டு வந்தது. மயில்வாகனார் பரிதவித்தார். பொழுது அடங்கும்முன் இந்த மலை வனத்தை விட்டு இறங்கி ஒரு பாதுகாப்பான இடத்துக்குப் போய்விடவேண்டும் என்று ஓடினார். இப்படி நாலா புறமும் ஓடிப் பார்த்தார். அவர் போன திக்கெல்லாம் மலையே வந்தது. மலை சூழ்ந்த ஒரு சமதரைக் காட்டில் தான் அகப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு அவர் மிக வருந்தினார், அவர் வாய் அவர் இஷ்ட தெய்வமான சிவனின் நாமத்தை இடைவிடாது உச்சரித்துக் கொண்டிருந்தது. காடு நன்றக இருண்டுவிட்டது.


யானை, புலி, கரடி போன்ற கொடிய மிருகங்களின் குரல்கள் கேட்கத்தொடங்கின. முன்பின் காட்டு அனுபவம் எதுவும் அறியாத மயில்வாகனார் செய்வது அறியாது கலங்கினார். இனியும் கீழே நின்று கொண்டிருப்பது அபாயமானது என்றெண்ணிய அவர் பெரும் பிரயாசை எடுத்து ஒரு மரத்தில் ஏறி நான்கு கிளைகள் சந்திக்கும் மர இடுக்குள் வசதியாக இருந்து கொண்டார். இனிப்பயம் குறைவு ஆயினும் பசி அவரை பிடுங்கித்தின்றது. கொட்டாவிகள் விட்டபடி மர இடுக்குக்குள் கலங்கி இருந்தார். காட்டின் பயங்கரத்தை எண்ணி மரத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தவரை பசி-அலைச்சல்-சோர்வு எல்லாமாகச் சேர்ந்து நித்திரையில் ஆழ்த்தியது.


கழனி மலைக்காட்டில் ஒரு கோயில்

இப்படி எவ்வளவு நேரம் நித்திரை கொண்டாரோ தெரியவில்லை, ஏதோ ஒரு காரணத்தினால் விழித்துக்கொண்டார். ஏதோ ஒரு சத்தம். மேளச்சத்தம் கேட்பது போல் இருந்தது. அங்கே தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிவது போலவும் இருந்தது. நம்மைவிட்டு வீட்டுக்குப்போன வேட்டைக் கோஷ்டியினர்தான் தன்னைத்தேடி வருகிறர்கள் என்று எண்ணியபோது அவர் மனம் துள்ளியது. ஆண்டவனுக்குப் பல முறை நன்றி தெரிவித்துக் கொண்டார். நேரம் என்ன இருக்கும் என்று வானத்தைப் பார்த்தபோது ஆளும் மீன் வெள்ளிக் கூட்டம் உச்சிவானில் இருந்து மேற்குப்புறம் சரிந்துகொண்டிருந்தது. உத்தேசமாக விடியச்சாம வேளையாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது.

இவ்வளவு நேரமாக இந்த மரத்தில் தூங்கி இருக்கிறோமே என்று எண்ணியவராக வெளிச்சம் தெரியும் பக்கம் நோக்கிப்போக மயில்வாகனாரின் மனம் பரபரத்தது. ஆயினும் பயமாகவும் இருந்தது. இப்படிக்கொஞ்ச நேரம் சென்றது. வெளிச்சத்தையும், மேளச்சத்தத்தையும் கேட்டு மரத்தில் இருக்க அவரால் முடியவில்லை.

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இறங்கி பயத்துடன் வெளிச்சத்தை நோக்கி நடந்தார். குறிப்பிட்ட இடத்தை நெருங்கியதும் அவர் அப்படியே மலைத்துப்போனார். அவர் எண்ணியபடி அவரைத்தேடி வந்தவர்கள் கொண்டுவந்த வெளிச்சம் அல்ல அது. அது ஒரு மாபெரும் கோயில். பூசை நடைபெற்றுக்கொண்டிருந்தது. இது என்ன நாம் கனவு காண்கிறோமா? என்று தன்னை நன்றாக நிதானித்துப் பார்த்துக்கொண்டார். நல்ல விழிப்பு நிலையில் இருப்பதாகவே தெரிந்தது.


இது என்ன காட்டில் கோயில்இ அதில் இரவில் பூசை நடக்கிறதே என்று ஆச்சரியக் கடலுள் ஆழ்ந்தார். மந்திரத்தால் கட்டுண்டவர்போல் ஒரு தூண் மறைவில் நின்று பயபக்தியோடு அந்த அதிசயக் கோயிலில் தெரியும் ஆண்டவரை வணங்கினார். தீபங்கள் ஜெக ஜோதியாக ஜொலித்தன. கோயிலுக்குள் இரு பக்கத்திலும் பொன்னிறமான பக்தர்கள் சிரசில் கூப்பிய கரங்களுடன் இறைவழிபாடாற்றிக் கொண்டு நின்றனர். ஒரு இந்திரஜாலக் காட்சியைக் காண்பது போல் மயில்வாகனார் சிரசில் கூப்பிய கரங்களுடன் ஆனந்தப்பரவசமாக நின்றார்,

கோயிலில் ஏராளமான பக்தர்கள் வணக்கத்தில் ஈடுபட்டு நின்றாலும் ஒருவருடன் ஒருவர் பேசியதாகத் தெரியவில்லை. பூசை முடிந்தது, எல்லோருக்கும் அர்ச்சகர் திருநீறு, சந்தனம், தீர்த்தம், பிரசாதம் வழங்கினார். மயில்வாகனாருக்குப் பிரசாதம் கொஞ்சம் கூடுதலாகவே கிடைத்தது. இந்த ஆச்சரியங்களைக் கண்டு பசியை மறந்திருந்த அவருக்கு கோயில் அமுதைக் கண்டதும் திரும்பவும் பசி வருத்தத் தொடங்கியது. ஆகவே அந்தத் தூண் மறைவில் இருந்து தனக்குத் தரப்பட்ட அமுதில் அரைவாசிக்கு மேற்பட்ட அமுதை ஆவலோடு உண்டார். பசி குறைய நித்திரை அவரை ஆட்கொண்டது. தூணோடு சாய்ந்த மாதிரியே அவர் அயர்ந்து நித்திரையானார்.

அவர் திடுக்கிட்டு விழித்துக்கொண்டபோது பொழுது விடிந்து சிறிது நேரம் சென்றிருந்தது. கோயிலில் ஒரு மனிதரையும் காணவில்லை. மலை வனத்தின் மத்தியில் தெய்வீகமாகத் தோன்றும் அந்த ஆலயம் அவருக்கு வியப்பையும் பயத்தையும் ஊட்டியது. இரவு வழிபாடு ஆற்றிய அந்தச் சுவர்ணநிற மனிதர்கள் யார்? அவர்கள் எங்கே போய் இருப்பார்கள் என்றெல்லாம் அவ்விடத்தில் நின்று சிந்தித்துப் பார்க்க அவருக்குப் பயமாக இருந்தது. கோயிலை நோக்கி பலமுறை வணங்கிய மயில்வாகனார் பிரசாதம் தந்த ஐயர் கிழக்குப் பக்கத்தை நோக்கிப் போகுமாறு கையால் காட்டி இருந்தமையால் அந்தத் திசை நோக்கி விரைவாக நடக்கத் தொடங்கினார்.

இந்த அற்புதத்தை ஊரவர்களுக்கு காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் போகும் வழியைப் பிறகு கண்டுபிடிப்பதற்காக பச்சைக் குளைகளை முறித்துப் போட்டுக் கொண்டே விரைவாக நடந்தார். இப்போது அவரிடம் ஒரு புதுத்தென்பு காணப்பட்டது. பிற்பகல் ஒரு மணிவரை ஆகிக்கொண்டிருந்தது. தூரத்தில் பறை மேளச்சத்தமும், துப்பாக்கி வேட்டு முழக்கங்களும் மிக இலேசாகக் கேட்கத் தொடங்கின. தன்னைத்தேடி ஆட்கள் வருகிறர்கள் என்ற மகிழ்வோடு மேளச்சத்தம் கேட்கும் திசையை நோக்கிப் பச்சைக் குளைகளை முறித்துப் போட்டவாறு மயில்வாகனார் விரைவாக நடந்தார். இப்போது அவரைத் தேடி வந்த கோஷ்டியும் அவரும் ஒரு இடத்தில் சந்தித்துக் கொண்டனர். அவரைத் தேடி வந்த கோஷ்டியினருக்கு அவரைப் பார்த்ததும் பேராச்சரியமாக இருந்தது.


காட்டில் தொலைந்துபோன மனிதன் சந்தனம் பூசிக்கொண்டு வருவது அளவில்லாத வியப்பை ஊட்டியது. அதை விட அவர் சொன்ன காட்டில் கண்ட கோயிலின் கதை இன்னும் வியப்பில் ஆழ்த்தியது. அவர்களால் அதை நம்பமுடியவில்லை. ஆயினும் அவர் அணிந்திருந்த சந்தனம் அவர் வழங்கிய அமிர்தம் போன்ற கோயில் பிரசாதம் அவர்களை நம்பவைத்தது. பொழுது சாய்ந்துவிட்டாலும் அவர் முறித்துப்போட்டு வந்த பச்சைக் குளைகளைக் கண்டுபிடிக்க முயன்றனர். இரண்டு மூன்று குளைகளைக் கண்டதும் அவர்கள் உற்சாகம் அதிகரித்தது, பிறகு எவ்வளவு தேடியும் அடையாளத்துக்காக முறித்துப் போட்டு வந்த குளைக்கொப்புகளைக் காணமுடியவில்லை. ஆகவே அவர்கள் வீட்டுக்குத் திரும்பி அவர்களுடன் மற்றும் பல கோஷ்டிகளும் போய் தேடல் நடத்தினர்.


சிலர் காட்டில் தங்கி இருந்து அதிசயமான ஆலயத்தைப் பார்க்கும் ஆவலுடன் தேடினர். என்ன தேடியும் மயில்வாகனார் குறிப்பிடும் கோயிலை எவராலும் இன்றுவரை காணமுடியவில்லை.


தம்பலகாமம்.க.வேலாயுதம் 
1982.12.16 

என்று முடிகிறது அந்தக் கதை. இது மரபுவழி வந்த கதையென்றாலும் அதன்  கரு இப்பிரதேச மக்களின் ஆழ்மன ஏக்கங்களின் வெளிப்பாடாக இருக்கிறது. கழனி மலைப் பிரதேசத்தின் பகுதிகள் வனப்பாதுகாப்பு பிரிவினரின் கண்காணிப்பில் உள்ளது. எனவே முறையான அனுமதியுடனேயே அதனுள் பயணிக்க முடியும். அத்துடன் இங்கு கரடிகளின் நடமாட்டம் அதிகம். சட்டவிரோதமாக காட்டுக்குள் சென்றுவரும் பலரும் கரடிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி நடைபெறுவதுண்டு. சிலவேளை கரடிகள் காட்டில் இருந்து வெளிப்பட்டு ஊர்மனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதும் உண்டு. இவை தவிர இங்கு சிறுத்தைகளின் நடமாட்டமும் உண்டு.

கழனிமலைக்காட்டில் ஆய்வுகள் அவசியம்

போர்த்துக்கீசருக்குப் பயந்து திருக்கோணேச்சரத்திற்குச் சொந்தமான புராதானமான விக்கிரகங்களை கழனி மலையில் வைத்து வழிபட்டுவந்த அடியவர்கள் அவை முழுவதையும் தம்பலகாமம்  ஆதிகோணநாயகர் ஆலயத்திற்கு கொண்டுவந்திருப்பார்களா? என்ற ஐயம்கலந்த வினா வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியிலும், ஆலயத் தொண்டர்கள் மத்தியிலும், மக்களிடையேயும் விடைகாணாத வினாவாக தொடர்ந்தவண்ணம் இருக்கிறது.

தம்பலகாமம்  ஆதிகோணநாயகர் ஆலயம் அமையப்பெற்ற காலம் முதல் சுமார் 350 வருடங்களாக திருகோணமலையின் ஆட்சி அதிகாரம் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் , பிரான்சியர் , பிரித்தானியர் என்று பல காலணித்துவ ஆட்சியாளர்களின் கைகளுக்கு மாறிக்கொண்டிருந்தது. எனவே திருக்கோணேச்சரத்திற்குச் சொந்தமான வரலாற்றுப் பொக்கிசங்கள் ஏதேனும் அதன்மீது அதீத அன்புகொண்ட கோயில் தொழும்பாளர்களால் கழனி மலைச்சிகரத்தில் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் எனக்கருதப்படுகிறது.

தொடர்ச்சியான தேடல்களும், முறையான ஆவணப்படுத்தல்களும் இன்னும் விடுவிக்கப்படாத கழனிமலைக் காட்டின் இரகசியங்களை வெளிக்கொண்டு வருவதற்கான சிறந்த  வழிமுறை என்பதில் ஐயமில்லை. தம்பலகாமம் கழனி மலைப் பிரதேசம் பல வரலாற்று ஆய்வாளர்களின், ஆர்வலர்களின் வரவிற்காக காத்திருக்கிறது.

நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.comநன்றி - புகைப்படங்கள்இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment