Wednesday, November 30, 2016

திருமலைக் கொடுமைகள் 1985 - ஒரு துன்பியல் ஆவணம்



2003 ஆம் ஆண்டின் நடுப்பகுதியது. விடுமுறை முடிந்து மீள பல்கலைக்கழகம் செல்வதற்கான பயணநாள். வீடு பிரிந்து செல்லும் அன்றைய பயணம் பெரும் சலிப்பைத் தருவதாக இருக்கும் என்ற எண்ணமே மனச்சோர்வைத் தந்தது. என்ன செய்வது நெருங்கி வரும் பரீட்சைகள் பற்றிய பயம் பின்னால் இருந்து உந்தித்தள்ள அரைமனதோடு அதிகாலை வேளையிலேயே பயணப்பொதிகளுடன் புறப்பட ஆயத்தமானேன்.

திருகோணமலைப் பேருந்து நிலையத்தில் நின்ற யாழ்ப்பாணத்திற்கான பேருந்து பல்கலைக்கழக மாணவர்களாலும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களாலும் மற்றும் சாதாரண பயணிகளாலும் நிறைந்திருந்தது. என்னுடன் சேர்ந்து பயணித்த பலரின் முகங்கள் வீடு பிரிந்த சோகத்தாலும், சோதனைச்சாவடிகள் பற்றிய பயத்தினாலும் இறுகியிருந்தது. சமாதான காலமென்றாலும் பாதைகளில் எதிர்ப்படும் பாதுகாப்புக் கெடுபிடிகள் பயணங்களின் சுவாரசியங்களை விழுங்கி ஏப்பமிட்டுக் கொண்டிருந்த காலமது.

அளவுக்கதிகமான பயணிகளுடன் அந்தரித்துக்கொண்டிருந்த பேரூந்து நேரக்காப்பாளனின் ஞாபகப்படுத்தலின் பின் மெல்ல தனது பயணத்தினை ஆரம்பித்தது. சனநெரிசலில் உடல் பிதுங்கிக்கொண்டிருக்க யன்னலூடு கடந்துபோகும் இடங்களைப் பார்த்தபடி என் நேரம் கரைந்துகொண்டிருந்தது. உவர்மலை, (இ)லிங்கநகர், உப்புவெளிச் சந்தி (அபயபுர சந்தி) என்று கடந்து அனுராதபுரச் சந்தியில் நின்ற பேருந்தில் பன்குளத்தைச் சேர்ந்த பலர் ஏறிக்கொண்டார்கள். மகிந்தபுர, கன்னியா, இராஜராஜப் பெரும்பள்ளி (வெல்கம் விகாரை) என்று ஒவ்வொரு இடத்திலும் நின்று பயணிகளை ஏற்றிகொண்டு வந்த பேருந்து பன்குளத்தை நோக்கி வேகமெடுத்துச் சென்று கொண்டு இருந்தது. இடையில் ஏறி இருந்தவர்கள் பன்குளத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள்.



பன்குளம் என்றதும் திடுக்கிட்டவனாக புத்தகப் பைக்குள் மடித்து வைக்கப்பட்டிருந்த முன்னட்டை கிழிக்கப்பட்டிருந்த திருமலைக் கொடுமைகள் என்ற சிறிய நூலை அவசரமாக எடுத்து வாசித்தேன். ஈழநாடு அலுவலக நிருபர் திரு.கா.யோகநாதன் அவர்களால் 1985 யாழ்ப்பாணத்தில் இருந்த திருமலை அகதிகளின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்து உருவாக்கப்பட்ட நூலது.

இலங்கையின் இன முரண்பாட்டின் விளைவுகளை பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்களாகப் பதிவு செய்த ஆவணங்களில் ஒன்றாக திருமலைக் கொடுமைகள் என்ற இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது. நீண்டநாள் தேடலின் விளைவாக, மிகுந்த சிரமத்தின் மத்தியில் கிடைக்கப்பெற்றிருந்த அந்த நூலைப் பலமுறை வாசித்திருந்தேன். அதனால் பன்குளம் பற்றிய பகுதியினை இலகுவில் அடையாளம் காண முடிந்தது.



பன்குளத்தைச் சேர்ந்த ஒருவர் தமக்கு ஏற்பட்ட இன்னலைக் கூறுகின்றார் என்ற அறிமுகத்துடன் தொடர்கிறது அந்த வாக்குமூலம்.

“ எங்கள் வீட்டைச் சுற்றி வெடிச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. ஒரு கோஷ்டியினர் சில தமிழ்ப் பொடியன்களையும் ஒருவயோதிபரையும் சுட்டுவிட்டார்கள். நாங்கள் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு ஒரு சில துணிகளை எடுத்துக் கொண்டு காட்டுக்குள் போய் ஒளிந்திருந்தோம். 2 நாள் காட்டுக்குள் இருந்தோம். 30 பேர் வரை காட்டுவழியாக 10 மணித்தியாலம் நடந்து நிலாவெளிக்கு வந்தோம். சாப்பாடு எதுவுமே இல்லை. நிலாவெளி முகாமில் தங்கியிருந்தோம். நிலாவெளியிலும் இருக்க முடியாமல் கலவரங்கள் நடந்ததினால் நாங்கள் வள்ளத்தில் முல்லைத்தீவுக்கு வந்து சேர்த்தோம்.

“ நாங்கள் இந்தியா போகும் நோக்கத்தில் தான் இருக்கின்றோம். எங்களுக்கு இந்த நாட்டில் ஒன்றுமில்லை. வீடு வாசல் வண்டில் மாடு நெல் எல்லாவற்றையும் முடிச்சுப் போட்டார்கள். ஏன் ஊருக்குப் போக வேண்டும்? ஒரு கிழமையால் பார்த்த போது வீட்டில் ஒன்றுமே இல்லை. காடையர்கள் , குண்டர்கள் எல்லாம் சேர்த்து கொள்ளையடித்துவிட்டார்கள். பன்குளத்தில் மட்டும் 20 பேரை வெடி வைத்திருக்கிறார்கள்.

நான் கண்ணால் கண்டேன். ஆறு பேர் தொப்பி போட்ட ஊர்காவல் படையினர் சுட்டுக்கொண்டு போனார்கள், வயல் கரையில் மாடுமேய்த்த பொடியனை சுட்டார்கள். நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சுடப்பட்டவர்கள் எல்லாம் தமிழர்கள் தான். எல்லோரும் பன்குளத்தைச் சேர்ந்தவர்கள். அன்று உடனே பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டேன். காட்டில் இருந்துபார்த்தால் இரவில் வீடுகள் எரிவது தெரியும். இவ்வாறு பாதிக்கப்பட்டவரின் உணர்வுகளைப் பதிவுசெய்திருக்கும் நூலாசிரியர் அக்கால திருமலை நிலவரங்களைக் கீழ்வருமாறு கூறுகிறார்.

பன்குளத்தில் மட்டுமல்ல திருமலை முழுவதும் நிலைமை மிகவும் மோசமென்பது அகதிகளை சந்தித்த போது தெரியவந்தது. இந்த நிலைமையிலும் திரும்பவும் அங்கு சென்று வாழவும் சிலர் விரும்புகிறார்கள் அமைதி ஏற்படும் நஷ்டஈடு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்திருந்த அந்த வாசகங்கள் எந்தவித மாற்றமும் இல்லாமல் எங்கள் வாழ்க்கையில் பலமுறை வந்த போயிருக்கிறது. 1983, 1985, 1990 என்று பலமுறை இடம்பெயர்ந்த பன்குளம் மக்கள் 2002 முதல் மீண்டும் தங்கள் வாழிடங்களை நோக்கி மீள்குடியேற எத்தணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பன்குளத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் எல்லோரும் திரும்பி வந்திருப்பார்களா ?. ஒவ்வொரு முறையும் விட்ட இடத்தில் இருந்து வாழ்க்கையை ஆரம்பிப்பதும் மீண்டும் உயிர்காக்க ஓடுவதுமாக இருக்கும் அவர்களது மனநிலை இப்போது எப்படி இருக்கும் ? என்பதுபோன்ற பல சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கிய 95Km தூரம் பன்குளம் பற்றிய நினைவுகளோடு கரைந்து போனது.

மொறவெவ (முதலிக் குளம்), மகதில்வெவ (பெரிய விளாங்குளம்), கோமரங்கடவெல (குமரன் கடவை), ஹொரவப்பொத்தான (உறவுப்பெற்றானை) என்று பேருந்து நடத்துணர் உரத்த குரலில் இடப்பெயரைக் கூவி பயணிகளை இறக்குவதும் ஏற்றுவதுமாக இருந்தார்.

தொடர்ச்சியாக நடந்த இந்த இடப்பெயர்வுகளுக்கு முன்னால் அவர் சொல்லி வந்த இடங்களுக்கு அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்ட தமிழ்ப் பெயர்கள் இருந்ததை அவர் அறிந்திருப்பாரா என்று தெரிந்திருக்கவில்லை.

நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com

www.noolaham.org  இணைய நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் திருமலைக் கொடுமைகள் நூலினை தரவிறக்கி வாசிக்க படத்தின் மீது சுட்டவும்




இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. சிறந்த ஆய்வு
    அருமையான பதிவு

    ReplyDelete
  2. தேவையான பதிவு

    ReplyDelete