Tuesday, November 01, 2016

'நாங்கள் விட்டில்கள் அல்ல' கவிதை நூல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்


சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மு.செளந்தரராஜன் அவர்கள், மறைந்த தனது சகோதரர் கவிஞர் பரஞ்சோதி அவர்கள் வாழும் காலத்தில் எழுதிய கவிதைகளினை தற்போது தொகுத்து 'நாங்கள் விட்டில்கள் அல்ல' எனும் கவிதை நூலினை தயார் செய்திருந்தார். இந்த கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது திருக்கோணமலை புனித சூசையப்பர் கல்லூரி கேட்போர் கூடத்தில் 22.10.2016 சனிக்கிழமை மாலை 03.00 மணிக்கு இடம்பெற்றது.

நிகழ்வுக்கு விவேகானந்தா கல்லூரி முன்னாள் அதிபர் திருமலை நவம் தலைமை தாங்கினார். விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டது. தமிழ் மொழி வாழ்த்தினை திருக்கோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மாணவிகள் இசைத்தனர். ஆசியுரைகளை திருக்கோணமலை மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் அடிகளார் மற்றும் பிரம்மஸ்ரீ இரவிச்சந்திர குருக்கள் ஆகியோர் வழங்கினர். வரவேற்புரையினை திருக்கோணமலை உதவிக் கல்விப் பணிப்பாளர் தர்மலிங்கம் வழங்கினார்.

நூலாசிரியர் பற்றிய அறிமுக உரையினை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நாகேஸ்வரன் நிகழ்த்தினார். நூலினை திருக்கோணமலை மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் அடிகளார் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பிரதிகள் வழங்கப்பட்டன.

நயவுரையினை சிரேஷ்ட சட்டத்தரணியும், கொழும்பு தமிழ்ச்சங்க முன்னாள் தலைவருமான இராஜகுலேந்திரா நிகழ்த்தினார். நினைவுரைகளை முன்னாள் ஈரோஸ் உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத், திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் வழங்கினர். ஏற்புரையினை 'செல்லமுத்து வெளியீட்டகம்' இயக்குநர் யோ.புரட்சி வழங்கினார்.

இந்த நிகழ்வில் மறைந்த கவிஞர் பரம்சோதி அவர்கள் நினைவாக, சுவிட்சர்லாந்தில் வசிக்கும் அவரது சகோதரன் செளந்தரராஜன் ஒழுங்கமைப்பில் கற்றல் ஊக்குவிப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக உதவி என்பன வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளை பவித்ரன் மற்றும் கல்யாணி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிகளை சுவிட்சர்லாந்தில் வசிக்கும் கவிஞர் பரம்சோதி அவர்களின் சகோதரன் செளந்தரராஜன் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கிய உலகில் இணைந்துள்ள 'நாங்கள் விட்டில்கள் அல்ல' இக்கவிதை நூலில் 144 கவிதைகள் இடம்பெற்றுள்ளது.

தகவல் , புகைப்படங்கள் - விழா ஏற்பாட்டுக்குழு


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment