Monday, February 17, 2014

பாலுமகேந்திரா

பாலுமகேந்திரா

1992ம் ஆண்டு அது.
வண்ண வண்ணப் பூக்கள் தேசிய விருதைப் பெற்றிருந்த காலம். கலைப்படப் பிரியர்களின் தாகம் தீர்த்த "வீடு", "சந்தியாராகம்" என்பன இலக்கியவாதிகளால் உரத்துப் பேசப்பட்டுக்கொண்டிருந்தது. அண்ணாசாலையை ஒட்டி முதுமையினால் தள்ளாடிக்கொண்டிருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டடத்தை இடிக்க நாள் குறிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த ஒற்றை அறையில் வறுமையில் வாடும் நாயகி மௌனிகா பாண்டியராஜனுடன் வாழ்க்கை நடாத்தும் "என் இனிய பொன்னிலா" திரைப்படம் வளர்ந்து கொண்டிருந்தது. அந்த அறையைத் தின வாடகைக்கு எடுத்து படமாக்கி கொண்டிருந்தார் பாலு மகேந்திரா.
 உதவியாளர்களின் கையில் இருந்த தையற்கடைக்காரனின் நாடா காட்சிகளின் இடைவெளியை துல்லியமாக அளவிட பாலுவின் கமரா கோணங்களைக் கணக்கிட்டு அங்கும் இங்குமாக நகரத் தொடங்கியது. அந்தச் சிறிய அறைக்குள் கமராவின் கோணங்களை மாற்றிக் கொண்டிருந்தார் அவர். அதில் பருந்தின் துல்லியம் இருந்தது.

வார்த்தைகளை மௌனமாக்கி காட்சிகளைத் திரைமொழியில் பேச வைத்த ஒளிச் சிற்பி பாலு மகேந்திரா இன்றில்லை. கதையை நேர்த்தியாகச் சொல்லிய வண்ணம் வார்த்தைகளின்றி திரைமொழியால் பேசிய பாலு வெளியில் அதிகம் பேசத் தெரியாதவர். அவருக்கு இருந்த அதிகம் அலட்டிக்கொள்ளாத இயல்பு தான் சினிமாவிலும் எதிரொலித்தது. இலக்கியம், திரைப்படம் என்று வந்துவிட்டால் அளந்தெடுத்த வார்த்தைகளால் பேச்சைக் கல கலப்பாக்கிவிடுவார். அமெரிக்கா, ஜேர்மன் என ஏதாவது புதிய படங்கள் பற்றி பேச்சு எழுந்தாலே அவற்றை உதறிக் காயவிடுவது போல அங்குலங்களாக அலசிவிடுவது அவருக்குரிய கலை.

அவரது திரைப்பிரவேசம் 1977இல் "கோகிலா" தெலுங்குத் திரைப்படத்துடன் ஆரம்பமானது. நாயகன் கமல்ஹாசன், தயாரிப்பு செ.கணேசலிங்கன். பாலுவின் அந்தரங்க நண்பர் செ.கணேசலிங்கன் . கணேசலிங்கனும் பாலுவும் சந்திக்காத நாட்களை ஒருவர் எண்ணிச் சொல்லிவிடலாம். இறுதி வரை பாலுவின் பார்த்தசாரதி கனேசலிங்கன் தான்.

பாலுவின் வீடு திரைப்படம் மிக அற்புதமான ஒரு காவியம். ஊழல் கொடுமையானது என்பதை வேறு எவரும் இவ்வளவு இலகுவாக நெற்றிப் பொட்டில் அடித்துச் சொல்லியிருக்க முடியாது. பாலுவின் உளிபட்டு ஒளி பெற்ற கலைஞர்கள் ஆஸ்தான நாயகி அர்ச்சனா, பாகவதர் சொக்கலிங்கம் ஆகியோர் வாழ்ந்து காட்டிய காவியம்.

பாராட்டுகள் அவரை மௌனமாக்கிவிடும். சந்தியாராகம் திரைப்படம் அவரது சாதனைப்படம். தூர்தர்ஷன் தயாரிப்பு. அது திரைப்படமாக்கியவுடன் எனது மனைவியையும் என்னையும் அழைத்து மூவருமாக அவரது வீட்டில் பார்த்தோம். திரைக்காட்சிகளையும் பாலுவின் கண்களையும் ஒரே கணத்தில் இடையிடையே பார்த்தேன். நான் அவரது வேறு படங்களிலும் இதை திருட்டுத்தனமாகச் செய்திருக்கின்றேன். கலையையும் அந்தக் கலை படைத்த கண்களையும் சேர்த்து ரசித்துப் புரிந்துகொள்வது ஒரு சிலிர்ப்பான அனுபவம். ஒவ்வொரு கட்டங்களையும் ஆழ்ந்த கரிசனத்தோடு பார்க்கும் போது ஏற்படும் அவரது முக மாற்றங்களும் நெற்றி சுருக்கலும் பேசாத விமர்சனமாக இருந்தது.

சந்தியாராகம் முதுமை குறித்து தர்க்கத்தை முன்வைக்கும் ஒரு காவியம். அதில் தாத்தாவாக நான்கு முழ வேட்டியும் காந்திச் சிரிப்புமாக வேதனையைத் தாங்கி வாழ்ந்து காட்டிய பெரியவர் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் அவர் தான் சொக்கலிங்கப் பாகவதர். பாலுவின் மனதைப் பறித்தவர்களில் பாகவதர் ஒருவர். பாகவதரிடம் வேலை வாங்குவது கொஞ்சம் சிரமம். செவிப்புலன் குறைந்த நிலையில் இருந்தார், தும்பைப் பூ தாடியும் மீசையுமாக பாகவதரின் சிரிப்பும் பேச்சும் யாருக்கும் பிடித்துவிடும்.

படம் முடிந்ததும் பாலு முதுமை குறித்த அச்சத்தை வெளிப்படையாகப் பேசினார். அப்பொழுது அவர் நடுத்தர வயதில் தான் இருந்தார். ஒரு மிகப் பெரிய கலைஞனின் வெளிப்படையான மனம் தெரிந்தது. ஒருபுறம் சொக்கலிங்க பாகவதர், மறுபுறம் பாலுவின் பேச்சு. அன்று இரவு மாறி மாறி முகங்கள் வந்து சென்றன. சில காலங்களின் பின் பாகவதரின் பேச்சைத் துவக்கினேன். பாகவதரின் மரணம் அவரைப் பாதித்திருந்தை ஏக்கத்தோடு சொன்னார். நட்புக்காக கலங்கும் மனிதனாக இருந்தார். பாலுவின் முதுமை தளர்ச்சியாக இருந்தாலும் இறுதி வரை "அடுத்த தலைமுறைக்காக" வாழ்ந்தவர்.

கற்பித்தல் அவருக்கு இயல்பாக இருந்தது. பாலுவின் கையில் சிக்கி விஸ்வரூபம் எடுத்தவர்களில் "பரதேசி" பாலா மறக்க முடியாத இளைஞன். சன் தொலைக்காட்சியில் பாலுவின் "கதை சொல்லும் நேரம்" ஒளிபரப்பட்ட காலம். மௌனிகா வேறுபட்ட கதைகளுக்காக நாயகி நடித்துக்கொண்டிருந்தார். அர்ச்சனா, ஷோபா என்ற பாலுவின் நட்சத்திரங்களுக்கு இருந்த முதிர்ச்சி ஆரம்பத்தில் மௌனிகாவிடம் இருந்ததில்லை. திரையில் தோன்றிய போது பதினாறைக்கூட தொட்டிருக்காதவர். ஒவ்வொரு கட்டமும் படமாக்கிய பின் தரையில் அமர்ந்திருக்கும் தன் தாயின் மடியில் முகம் புதைத்துப் படுத்துவிடுவாள். அவ்வளவு குழந்தைத்தனம். சில வருடங்களின் பின்னர் பாலுவின் " கதை சொல்லும் நேரத்தில்" மௌனிகாவின் முதிர்ச்சி பளிச்சிட்டது. அது பாலுவின் மௌனத்தால் சாதித்த உழைப்பு.

அவரது கலைப் படத்திற்காக தோற்றம் எடுத்தவர்களில் அர்ச்சனா ஒருவர். கறுப்பு - வெள்ளைப் படங்களில் அவருக்கு இருந்த ஈடுபாட்டிற்கு வரப்பிரசாதமாக வந்து சேர்ந்தவர் அர்ச்சனா. வீடு படத்தில் அர்ச்சனாவின் புகழ் டில்லி வரைக்கும் சென்றது. ஷோபாவின் வறுமைச் சிரிப்பைக் கலையாக்கிய "அழியாத கோலம்" தமிழ்த் திரைத்துறைக்குப் பெருமை சேர்த்தது.  அவரது அழியாத கோலங்கள் குறித்து விரிவாக விவாதித்திருக்கின்றேன். ஷோபா என்ற கிராமத்து குயிலை யாரும் மறக்க முடியாது. நண்பர் பாலு பெற்றது இழந்ததும் அந்தப் படத்தில் தான் என்பதைப் பலதடவைகள் மௌனமாகப் புரிந்திருக்கின்றேன்.

இசைஞானி இளையராஜா தான் பாலுவின் ஆஸ்தான இசையமைப்பாளர். என் நினவு சரியாக இருந்தால் அது வாஹினி ஸ்ரூடியோ. இசை அமைப்பிற்காக நூற்றூக்கு மேற்பட்ட கலைஞர்கள் கூடியிருந்தார்கள். தேனீ போல ஒவ்வொரு கலைஞனுக்கும் குறிப்புக்களைச் சொல்லிவிட்டு ஒலிக்கூடத்திற்குள் வந்துவிட்டார் இசை ஞானி. பாலு காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டார். இசையமைப்பு தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்டங்களையும்  மீளச்சரிபார்த்துகொண்ட ஆர்வத்தில் அவரது ஒலிப்பதிவு அறிவு தெரிந்தது. என் வியப்பை புரிந்துகொண்டு "அது தான் பாலுவின் உழைப்பு" என இசை ஞானி சொன்னது இன்றும் நினைவில் உண்டு.

 பாலுவுக்கு இளையராஜாவுக்கும் இடையில் இருந்தது நட்பல்ல, உண்மையில் ஒரு பக்தி. ஒரு தடவை என் சொக்கிலேட் பழக்கத்தை கைவிட முடியவில்லையே என என் பேச்சு தொடங்கிய போது பையில் சொக்கிலேட் இல்லாமல் ஒரு நாள்கூட வெளியே போனதில்லை என அவர் குழந்தையாக குதூகலித்ததார். இனி அது நினைவில் வரும் போதெல்லாம் என் நெஞ்சை நெருடும்.

பாலுவின் இலங்கையின் நினைவு அவரது பல படங்களில் மௌனமாக இழையோடி இருந்தது. யாருக்கோ எங்கேயோ சொல்வது போல தன் உணர்வுகளை தன் படங்களில் இழையோட மாத்திரமே முடிந்தது. இந்தியச் சூழல் அவருக்கு போட்டிருந்த கண்ணுக்குத் தெரியாத காற்று வேலிகளில் கூரிய முட்கள் நிறைந்திருந்தது. தாண்ட முடியாத தீ வட்டம் சுற்றியிருந்தது. அது பலருடைய கண்ணுக்குப் புலப்படாதவை. அவருடைய ஆன்மைவை நெருங்கியவர்களுக்கு அதற்குள் எரிந்துகொண்டிருந்த கனலின் வெப்பத்தை உணரமுடிந்தது. அமிர்தகழி, மட்டக்களப்பு திரைத்துறைக்கு அளித்த மிகப் பெரிய கொடை பாலு.



கனகசபாபதி சரவணபவன்விருந்தினர் பதிவு
கனகசபாபதி சரவணபவன்


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. வணக்கம்
    அவரின் இழப்பு நமது தமிழுக்கு ஒரு வீழ்ச்சி என்றுதான் சொல்ல முடியும் அவரின் ஆத்மா சாத்தியடையட்டும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மிக்க நன்றி தங்கள் கருத்துரைக்கு.

    ReplyDelete