Saturday, May 16, 2009

தம்பலகாமம்

தம்பலகாமம்
இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகச் சிவவழிபாடு நடைபெற்று வரும் தெய்வீகச் சிறப்பு உள்ளதால், ஊர் பெயருக்கு முன்னால் திரு என்ற சிறப்பும் சேர்ந்து திருத்தம்பலகாமம் என்று அழைக்கப்பட்டு வருகின்றது. மிகுந்த அருள் சிறப்புடைய மகாதலங்களுக்கே ஸ்தல புராணம் இருக்கின்றது. திருத்தம்பலகாமம் கோணேஸ்வரர் ஆலயத்துக்கு ஸ்தலபுராணம் இருப்பதுடன் தம்பலகாமம் ஊருக்கும் புராணம் இருக்கிறது.
திருக்கோணமலைக் கோணேஸ்வரத்தின் ஸ்தல புராணமான திருக்கோணேசலப்புராணமே தம்பலகாமம் கோணேஸ்வரத்தின் புராணமாகவும் இருக்கிறது. இப்புராணம் திருக்கோணமலை நகரச் சிறப்பு, கோணேஸ்வரம் திருக்கோணமலைக்கு வந்த விபரங்கள், கோணேஸ்வரத்தின் தெய்வீக அருள் சிறப்பு போன்றவைகளைக் கூறுகிறது. அத்துடன் திருக்கோணாசலப் புராணம் தம்பை நகர்ப்படலம் என்ற அதிகாரத்தில் தம்பை நகரின் வளச்சிறப்பு, தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரத்தின் அருள் சிறப்பு, வழிபாட்டுமுறை போன்றவைகளை விபரமாகக் கூறுகிறது.

ஆகவே திருக்கோணமலை, தம்பலகாமம் கோணேஸ்வரங்கள் இரண்டுக்கும் பொதுவான ஸ்தல புராணம் திருக்கோணேசலப் புராணம் என்பது தெரிய வருகிறது. கோணேஸ்வரம் பற்றிய நூல்கள் தம்பலகாமத்தை தம்பை நகர் என்றே கூறுகின்றது. திருக்கோணேசலப்புராணம் தம்பை நகர்ப்படலத்திலுள்ள ஒரு பாடல் பின்வருமாறு:-

கரிய குவளைத் தளிர் மேய்ந்து
கடைவாய் குதட்டித் தேன் ஒழுக
எருமை கிடந்து மூச்செறியும்
எழிலார் தம்பை வளநாட்டில்

இப்பாடல் தம்பை நகர்ப் பிரதேசத்திலுள்ள நீர்வள, நிலவளச் சிறப்பைப் பற்றிக் கூறுகின்றது. இப்பாடல் குறிப்பிடும், நில, நீர்வளம் தற்போதைய தம்பலகாமத்தை ஒத்ததாக உள்ளதால் பழைய தம்பை நகரின் தெற்குப் பகுதி என்று தம்பலகாமத்தைக் கூறலாம்.

தம்பை நகரின் நகரப் பகுதி எங்கே? என்றுதான் தேடவேண்டி உள்ளது. இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் கப்பல் துறைக்கடலைக் கடல் துறையாகக் கொண்டு இலங்கையின் சரித்திர தொடக்க காலத்துக்கு முன், தம்பை நகர் பெரிய வணிக நகராக இருந்தது.

மனித வாழ்க்கையில் பொருள் வகிக்கும் முக்கியம் கருதிப் பெரியோர்கள் அறிவுரைக்கேற்ப தம்பை நகர்த் தமிழ் வாலிபர்கள் தங்கள் கடல் துறையான கப்பல் துறைக்கடலில் இருந்து மரக்கலங்களின் வழியாக தாம் வங்கப் பெருங்கடலைக் கடந்து வேறு நாடுகளுக்குச் சென்று பொருளீட்டி வந்தனர்.

தென்பாரதத்தில் நடந்த புறநானூறு சம்பவங்கள் இங்கும் இடம்பெற்றன என அறியக் கிடக்கின்றது. இப்படித் தமிழ்ச் சைவர்களின் வாழ்விடமான தம்பை நகரில் கலகங்கள் ஏற்பட்டு உயிர் இழப்புக்கள் அதிகரித்து வந்ததால் பலர்
அங்கு வாழ முடியாத சூழ்நிலை ஏற்படவே வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர் எனினும் ஒரு பிரிவு மக்கள் தங்கள் பிரதேசத்தை விட்டுப்போக மனமில்லாமல் தெற்குப் பகுதிக்கு வந்து வடக்கே பால்துறைக் கடல்வரை உள்ள தாழ்ந்த பிரதேசத்திலுள்ள திடல்களில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.


தம்பலகாமம்
இதுவே இன்றைய தம்பலகாமம் என்று கூறப்படுகின்றது. ஊர்ப்பேர்கள் திடல்கள் என்று இருப்பதும் இதற்குச் சான்றுபகர்கிறது. நெல்வயல்களுக்குள் கால்மைலுக்குக் குறைந்த இடைவெளியில் சங்கிலித் தொடர்போல் இருபத்திநான்கு சிறு ஊர்கள் வலமாக, வளையமாகக் காணப்படுகின்றன.

இந்த ஊர்களில் தமிழ் உழவர்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களிடம் சுதேசவைத்தியக்கலையும், நாடகம், நாட்டியம், வாய்ப்பாடு போன்ற சங்கீதக் கலைகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ந்தோங்கி வந்தன.

மாரி காலங்களில் பெரும் சத்தமாகக் கத்தும் தவளைகளின் ஒலியுடன், சுற்றி இருக்கும் ஊர்களில் கூத்துப் பழக்கும் கொட்டகைகளில் இருந்து எழும் மிருதங்கங்களின் ஒலியும் சேர்ந்து ஒலிக்கும்.

வேர் பிடுங்கி குளிசை தயாரிக்கும் பரியாரிமாரும், வயல்களில் நெல் விளைவிக்கும் உழவர்களும் கால்களில் சலங்கையணிந்து அரங்கேற்றும் மேடைகளில் ஜல் ஜல் என்று தாளந்தீர்ந்து நடித்துப் பார்வையாளர்களை மகிழ்விப்பார்கள்.

மருந்தீந்து பிணியகற்றும் பரியாரிமார்கள் சிறந்த புகழ்பெற்ற
பெற்றோர்கள் இட்ட இயற்பெயர் மறைந்து பாத்திரப் பெயருடன்
வாழ்ந்தனர், இன்னும் வாழ்பவர் பலருளர்.

சினிமா வந்தது. அரச உதவியுடன் ஆங்கில வைத்தியம் வந்தது. செழித்து வளர்ந்தோங்கி வந்த இரு கலைகளும் அருகி மறைந்தன. பிரிட்டிஷ் ஆட்சி இருக்கும் வரையும் கிண்ணியாவில் வசித்த மகாத்தாஜியார் என்ற கனவான் தம்பலகாமம் அருகிலுள்ள கடலை அரசிடம் இருந்து குத்தகையாகப் பெற்று கடலுக்குக் காவல் போட்டு பலமுறை முத்துக் குளிப்பை நடத்தினார்.

இந்தக் கடலின் மேற்புறம் முத்துக் குளிப்பையொட்டி முத்து நகர் என்ற பெயருடன் ஒரு நகர் தோன்றி வளர்ந்து வந்தது. தம்பலகாமம் வடக்கில் கடலருகே உள்ள நெல்வயலுள் முத்துச் சிப்பிகளைக் கொண்டு குவித்து அறுத்து முத்தெடுத்து விட்டுச் சிப்பிகள் உயர்ந்த ஊரான இடம் கடலருகே சிப்பித்திடல் என்ற காரணப் பெயருடன் இன்றும் உள்ளது. தம்பலகாமத்திலுள்ள வயல்வெளிகளில் செந்நெல் அமோகமாக விளைந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வந்தர்கள் ரூபா நோட்டுத்தாளை எடுத்து வந்து தம்பலகமத்தில் மாதக்கணக்கில் தங்கி தரகர்களை வைத்து நெல் வாங்கி மூட்டைகளாகச் சேர்த்துக் கடல் வழியாகவும் ரயில் மூலமாகவும் யாழ்ப்பாணம் கொண்டு போவார்கள். முத்துக் குளிக்கும் காலங்களிலும், நெல்வயல்களில் அறுவடை நடைபெறும் காலங்களிலும் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரம் தொழிலாளர்களும் வந்து கூடுவார்கள்.

தம்பலகமப் பற்றிலுள்ள கிண்ணியா, ஆலங்கேணி, உப்பாறு, முனையிற்சேனை, நெடுந்தீவு, குறிஞ்சாக்கேணி, காக்காமுனை, சூரன்கல், கந்தளாய் போன்ற ஊர்களுக்குத் தம்பலகமம் தலைமை தாங்கித் தொழில் ஈந்து வருவதால் தம்பலகமத்தை தாய் ஊரென்றும் அருகிலுள்ள ஏனைய ஊர்களைச் சேயூர்கள் என்றும் அழைப்பது
வழக்கமாகும்.

மேற்படி சேயூர்களில் ஒரு பத்திரம் எழுதுவதானால் திருத்தம்பலகாமப் பற்றைச்சேர்ந்த கிண்ணியா, ஆலங்கேணி, கந்தளாய் என்று எழுதுவதே வழக்கமாகும்.

தம்பலகாமம்.க.வேலாயுதம்


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. மிகவும் பயனுள்ள பதிவு. தம்பலகாமம் பற்றி பல விடயங்களை அறிந்து கொண்டேன்.

    திருக்கோணேசலப் புராணத்து பாடலனின் "
    கரிய குவளைத் தளிர் மேய்ந்து
    கடைவாய் குதட்டித் தேன் ஒழுக
    எருமை .." வரிகளை ரசித்தேன்.

    ReplyDelete
  2. நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களே

    ReplyDelete
  3. very good. i am from thampalakamam. now in uiversity of peradeniya. Do you want any help please send email.

    ReplyDelete