Sunday, May 24, 2009

தமிழறிஞர் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்

Thampalakamam
‘இந்த மண்ணுலகம் இறைவன் படைத்துவைத்த மேடை. இந்த உலகம் என்னும் நாடகமேடையில் மாமனிதர்கள் தோன்றி நடித்து வியத்தகு சாதனைகள் புரிந்து காலத்தால் மறையாத காரியங்கள் பல ஆற்றியுள்ளனர். உண்டு,உடுத்து, உறங்கி, இதுதான் வாழ்க்கை என்று பெரும்பாலானோர் கிடைத்தற்கரிய மனித வாழ்க்கையைப் பாழ் செய்தாலும், கணிசமானவர்கள் தாங்கள் இந்த உலகத்தில் பிறந்ததற்குத் தொண்டாக உலக முன்னேற்றத்துக்கு உகந்த முறையில் கடனாற்ற வேண்டியது நியதியாகும்.’  என தம்பலகாமம் தந்த தமிழறிஞர் அமரர் கனகசபை வேலாயுதனார் தனது ‘இந்திய ஞானிகளின் தெய்வீகச் சிந்தனைகள்’ நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் யாவும் பிரம்மத்தின் கூறுகள்தாம். இதனை அவரே பிரமத்தை விளக்குவதற்குப் பல உதாரணங்களைத் தந்து இராமகிருஷ்ண பரமஹம்சர் நரேந்திரன் என்னும் சுவாமி விவேகானந்தருக்குச் சொல்லிய’ நானும் பிரம்மம், நீயும் பிரம்மம், இந்தச் சுவர்கூடப் பிரம்மத்தின் ஒரு பகுதிதான் என விளக்குகிறார். தமிழறிஞர் அமரர் கனகசபை வேலாயுதனார் எவ்வளவு பெரிய மேதை என்பதை இவரது நூல்களை வாசிப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள். 
தமிழறிஞர் அமரர் கனகசபை வேலாயுதனார் தம்பலகாமம் தந்த பெரும் பொக்கிசம். அவர் இவ்வுலகில் தொண்னூற்றிரண்டு ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்த் தொண்டாற்றியவர். ஏந்த நேரமும் கொடுப்பில் ஒரு குமிண்சிரிப்புக் குடிகொண்டிருக்கும். இறக்கும் வரை இலக்கியங்களைக் கற்பதிலும், ஆக்குவதிலும் தம் வாழ்நாட்களைப் பயனுடையதாக ஆக்கியவர். 

நமது சமுதாயம் அறிஞர்கள் உயிருடன் இருக்கும்போது போற்ற மறந்து விடுகிறது. முதுமை பொல்லாதது. அந்த முதுமையிலும் இளைஞானாக எழுதிக் கொண்டிருந்தவர். அழகன் முருகன் கையிலுள்ள வேலாயுதம் ஆன்மாக்களுக்கு அருள்பாலிக்கும் அற்புதமான ஆயுதம். தம்பலகாமம் தந்த தமிழறிஞர் அமரர் கனகசபை வேலாயுதம் தமிழை எழுதிக்காக்கும் வேலாயுதம். அவரது புகழை அவரது மகன் கவிஞர் வே.தங்கராசா அவர்கள் ’மகன் தந்தைக்காற்றும் உதவி, இவன்தந்தை என்னோற்றான் கொல்’ என்பதற்கேற்ப செயற்பட்டு அவரது ஆக்கங்களை வெளிக் கொணர்ந்து காட்டுகிறார். 

தமிழறிஞர் அமரர் கனகசபை வேலாயுதனாரின் இழப்பு தமிழ்கூறும் நல்லுலகினுக்குப் பேரிழப்பாகும். பிறப்பு என்று ஒன்றிருந்தால் இறப்பும் இருக்கும். இந்த நியதியை யாராலும வையகத்தில் மாற்றமுடியாது. நாம் சட்டையை மாற்றுவதுபோல். இந்த ஆத்மா கட்டையை மாற்றிக் கொள்கிறது அவ்வளவுதான். ஆன்னாரின் ஆக்கங்களை வெளிக்கொண்டு வருவதுதான் அவருக்கு ஆற்றும் தொண்டாகும். அவர் என்றென்றும் தமிழ்கூறும் நல்லுலகத்தில் வாழ்வார். அன்னரின் ஆத்மசாந்திக்காய் இறையைப் பிரார்த்திக்கும் இவன் -

கேணிப்பித்தன் ச.அருளானந்தம்.இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment