Friday, May 15, 2009

கண்தழையே கந்தளாய் ஆனது

திருமலை
பண்டையில் திருமலை இராஜ்யத்தை ஆட்சி செய்த வன்னி அரசர்கள் ஆளும் வசதி கருதித் திருக்கோணமலைப் பிரதேசத்தை நான்கு பற்றுக்களாகப் பிரித்தனர். மாவட்டத்தின் மத்திய பற்றின் தலைமை இடமான தம்பலகமத்துக்குத் தெற்கே பதினான்கு மைல் தூரத்தில் கந்தளாய் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு பண்டைக்காலத்தில் சதுர்வேத மங்கலம் என்ற பெயர் இருந்தது. நான்மறை ஓதும் வேதியர்கள் வாழ்ந்து வந்ததால் இந்தப் பெயர் காரணப்பெயராக வந்ததாக அறிய முடிகிறது. இந்த ஊரில் பெரிய குளம் ஒன்றை அமைப்பதாக அநுராதபுர அரசி ஆடக சௌந்தரியுடன் விவாக ஒப்பந்தம் செய்து கொண்ட குளக்கோட்டு மன்னர், அரசியின் துணையுடன் இங்கு கட்டிய பெரிய குளத்துக்குத் திருக்குளம் என்ற பெயரே வழக்கில் இருந்து வந்தது.
பிற்காலம் அநுராதபுரத்தில் இருந்து அரசோச்சிய புவனேயகயவாகு என்னும் மன்னன் சமணனாக மதம்மாறி திரிசங்கபோதி என்ற மற்றுமோர் நாமத்தை பெற்றான் என்று திருக்கோணாசலப் புராணம் கூறுகின்றது.

இவ்வேந்தன் சைவ ஆலயங்களை இடித்தழிக்கும் நோக்கில் படைகளுடன் காட்டு வழியே சதுர்வேதமங்கலத்தை நோக்கி வந்தபோது, அவனது தீய எண்ணத்துக்கு தெய்வ தண்டனையாக திடீரென அவன் கண்கள் பார்வை குன்றி குருடாகியது.

மன்னனும் படைகளும் ஆறாத்துயரத்தில் ஆழ்ந்து அவ்விடத்திலேயே கூடாரமிட்டுத் தங்கினர். கவலையில் மூழ்கிக்கிடந்த அரசனின் கனவில் ஒரு முதியவர் தோன்றி உன் தீய எண்ணத்துக்குத் தகுந்த தண்டனை பெற்றாய் ஆயினும் இறைவனைத் துதித்து தர்மசீலனான குளக்கோட்டன் அமைத்த நன்னீர்க் குளத்தில் தீர்த்தமாடினால் உன் துயர் அகலும் என்று கூறி மறைந்தார்.

அப்பெரியாரின் கூற்றுக்கமைய பக்திப்பரவசம் அடைந்த அரசன் திருக்குளத்தில் தீர்த்தமாடிய போது அதிசயிக்கத்தக்க விதமாகக் கெட்டுப்போன கண்பார்வை மீண்டும் ஒளிவீசி பிரகாசித்தது. கெட்டுப்போன கண் தழைத்த காரணத்தால் திருக்குளம் என்று வழக்கில் இருந்த பெயர் மறைந்து கண்தழை என்ற காரணப்பெயரே வழங்கலாயிற்று.

அடுத்துள்ள சதுர்வேத மங்கலம் என்ற பெயரும் மறைந்து, கண் தழை என்ற பெயரே ஊருக்கும், குளத்துக்கும் வழங்கப்பட லாயிற்று. இப்பெயரே காலப்போக்கில் திரிந்து கந்தளாய் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

நோக்கு கண் விளங்கக் கண்ட
நுவலரும் கயத்துக்கன்பால்
தேக்கு கண்டழையாமென்னச்
சிறந்ததோர் நாமம் நாட்டிக்
கோக்குல திலகனாய குளக்
கோட்டு மன்னன் செய்த
பாக்கியம் விழுமிதென்னா
வியந்தனன் பரிந்து மன்னோ.
(திருக்கோணேஸ்வர புராணம்)

பிரமாண்டமான நீர்த்தேக்க அணைக்கட்டின் இருபுறங்களிலும் பாலை, வீரை, தேக்கு, முதிரை போன்ற மரங்கள் வானுயர வளர்ந்து அணைக்கட்டை அழகு செய்தன. அணைக்கட்டின் உச்சியில் நின்று பள்ளத்தாக்கைப் போல் தெரியும் கந்தளாய் என்ற ஊரைப் பார்த்தால் ஊரில் நெடிந்துயர்ந்து நிற்கும் தென்னைமர உச்சியில் காலைவைத்து விடலாம் போல் தோன்றும்.

இன்று இது போன்ற அரிய பல சரித்திரங்கள் மாற்றப்பட்டுவிட்டன. அணைக்கட்டோரங்களில் நின்று அழகு செய்த வான் தருக்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன.

பழைமையில் இந்தப்பகுதியில் இன்னொரு தெய்வீகச்சிறப்பும் காணப்பட்டது. அணைக்கட்டுக்கு பாதுகாப்பாக குளக்கோட்டனின் வேண்டுதலுக்கமையவே, நாராயண மூர்த்தியால் அணைக்கட்டோரம் விநாயகர் ஆலயம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இக்குளத்திலிருந்து குதித்தோடி வரும் பேராறு படிப்படியாக உள்ள கற்பாறைகளில் விழுந்து சலசலத்த ஓசையுடன் ஆலயத்தை வலமாக வளைந்து அஞ்சலி செய்து செல்வது பார்க்கப் பரவசமூட்டுவதாக இருக்கும். ஆற்றோரம் எங்கும் பலா மரங்கள் காய்களைச் சுமந்து கொண்டு நிற்கும் காட்சி மனதிற்கு உவகை ஊட்டுவதாக இருக்கும்.

இத்தகைய அழகுமிகு இயற்கைக்காட்சிகள் இன்றில்லை. ஆலயத்தை சுற்றிவளைத்து ஓடிய ஆற்றின் கிழக்குப் பகுதியைத் தூர்த்து குடியிருப்புக்களை உண்டாக்கிவிட்டார்கள். ஒரு காலத்தில் இந்த பழம் ஊரில் வேதம் ஓதும் மறையோர்கள் வாழ்ந்ததும் அதன் காரணமாக சதுர்வேத மங்கலம் என்ற காரணப்பெயர் இருந்ததும் அடியோடு மாறிவிட்டது. நாடு சுதந்திரமடைந்த பின் துரித வளர்ச்சி அடைந்து கந்தளாய்ப் பட்டினம் என்ற பெயரே நிலை கொண்டுள்ளது.

1986 இல் கந்தளாய் நீர்த்தேக்கம் உடைத்துக்கொண்ட போது நாராயணமூர்த்தியால் ஸ்தாபிக்கப்பட்ட அணைக்கட்டு விநாயகர் ஆலயம் முற்றாக அழிக்கப்பட்டாலும் சைவப்பெருமக்கள் ஆலயத்தைத் திரும்பக்கட்டி இருப்பது பாராட்டுக்குரியதாகும்.

கந்தளாய் நீர்தேக்கத்தை அமைத்தவன் இரண்டாம் அக்கிரபோதி என்று இலங்கைச் சரித்திரம் கூறுகிறது. ஆனால் இம்மன்னனுக்கு முன்முப்பத்திமூன்று வருடம் ஆட்சிசெய்த முதலாம் அக்கிரபோதி மின்னேரியாக் குளத்தைக் கந்தளாயுடன் இணைக்க ஒரு கால்வாயையும் வெட்டினான் எனச் சரித்திரம் முன்னுக்குப்பின் முரணாகக் குறிப்பிடுகிறது.

கந்தளாய்க் குளம் இருந்தபடியால் தானே முதலாம் அக்கிரபோதி கால்வாய் வெட்டி வந்தான் என்றும் ஆகிறது. முதலாம் அக்கிரபோதி கந்தளாய்க்கு கால்வாய் வெட்டி வந்தான் என்ற சரித்திரத்தின் கூற்று முதலாம் அக்கிரபோதியின் ஆட்சிக்கு முன்பும் கந்தளாயில் குளம் இருக்கிறது என்பதை ருசுப்படுத்துவதாக உள்ளது.

திருமலை இராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்த சதுர்வேத மங்கலத்தை இன்றைய கந்தளாயை தென்னிலங்கை வேந்தன் ஒருவன் வென்றான். அவன் வென்றரசன் என்றே அழைக்கப்பட்டான்.

ஏற்கனவே இருந்த கந்தளாய் குளத்தின் கிழக்குப்புற அணைக்கட்டுடன் தானும் ஒரு குளத்தை அமைத்தான் இவன். அந்தக்குளம் வென்றரசன் குளம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

அணைக்கட்டின் உச்சியில் நின்று குளத்தின் நீர்ப்பரப்பைப் பார்த்தால் கடல்போலவும், கட்டின் அடிவாரத்தில் நின்று அணையின் உச்சியை நோக்கினால் கட்டு பெரிய மலை போலவும் தெரியக்கூடியதாகக் குளம் பிரமாண்டமானதாக அமைக்கப்பட்டதெனக் காவியம் கூறுகிறது.



திருமலைஇந்தக்குளத்தின் அணைக்கட்டை முதல்முதலாக பார்ப்பவர்கள் வியப்பிலாழாமல் இருக்கமுடியாது. இயந்திர சாதனங்கள் அற்ற அந்தக்காலத்தில் இப்படி ஒரு பிரமாண்டமான அணையை அமைக்க இலட்சக்கணக்கான சனங்கள் தினந்தோறும் வேலை செய்தாலும் பல்லாயிரம் வருஷங்களாவது செல்லுமே என்ற எண்ணம் எவருக்கும் வரவே செய்யும் .

இந்த அணைக்கட்டில் தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரத்தின் சுற்று ஆராதனைகளாக வேள்வி, பொங்கல், மடை போன்ற வழிபாடுகள் பல இலட்சம் ரூபா செலவில் வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம்.

இந்தக்குளத்து வேள்வி ஆராதனைகளிலும், தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரர் ஆலயத்திலும் ஊழியம் புரிந்து கோயிலால் மாதச்சம்பளம், வயல்மானியம் பெறும் நாற்பத்தைந்துக்கும் மேற்பட்ட தொழும்பாளர் குடும்பங்கள் திருக்கோணமலை மாவட்டம் முழுவதும் பரந்து வாழ்ந்துவருகின்றனர்.

தம்பலகாமம்.க.வேலாயுதம்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

5 comments:

  1. Hi

    We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

    Please check your blog post link here

    If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Sincerely Yours

    Valaipookkal Team

    ReplyDelete
  2. மரியதாசன் கனடாFeb 28, 2009, 8:48:00 PM

    தமிழனுடைய வரலாற்றுஆவணஙகளைப பாதுகாத்து அதை எம் வருங்கால சந்ததிக்கு தெரியப் படுத்தும் அறிஞருக்கு நன்றி.

    ReplyDelete
  3. தமிழனுடைய வரலாற்றுஆவணஙகளைப பாதுகாத்து அதை எம் வருங்கால சந்ததிக்கு தெரியப் படுத்தும் அறிஞருக்கு நன்றி.

    -மரியதாசன் கனடா

    ReplyDelete
  4. நன்றி மரியதாசன் அவர்களே

    ReplyDelete