Saturday, October 08, 2022

திருக்கோணேச்சரத்தில் பணியாற்றிய தேவரடியார்கள்

கோயில் திருப்பணிக்காக தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்கள் தேவரடியார்கள். பண்ணிசை பாடுதல், நடனமாடுதல்,இசைக்கருவிகளை இசைத்தல் என்பன தேவரடியார்களின் முக்கிய பணி என்று கருதப்பட்டாலும்  ஆலய வளாகத்தை சுத்தப்படுத்துதல், பூமாலை கட்டுதல், விளக்கெரித்தல் சில சமயம் மடப்பள்ளி வேலைகளில் உதவி செய்தல் போன்ற பல்வேறு பணிகளை தேவரடியார்கள் மேற்கொண்டார்கள்.

திருக்கோணேஸ்வரத்தில் தேவரடியார்கள் 

கோணேசர் கல்வெட்டில் மாணிக்கம் வரவு என்ற பகுதியில் கயவாகு மன்னன்  கோயில் தொழும்பாளர்  தொடர்பில் திட்டம் பண்ணிய பகுதி கீழ்வருமாறு அமைந்திருக்கிறது.

1. புவிபுகழ் பொன்னவராயன் கொடுத்தது நாகரத்தின மாணிக்கம் தம்பிரான் ஏற்றுக்கொண்டது.

2. செகமது புகழுஞ் சிதம்பரராயன் கொடுத்தது நவரத்தின மாணிக்கம் இராசர் ஏற்றுக்கொண்டது.

3. கருணையங்கடலான் காலிங்கராயன் கொடுத்தது கனகரத்தின மாணிக்கம் வன்னிமையேற்றுக் கொண்டது.

4. மதப்புவியென்னும் மகாகொம்பராயன் கொடுத்தது மரகதரத்தின் மாணிக்கம் காராளர் ஏற்றுக்கொண்டது.

5. சித்தசனிகர்க்குந் தென்னவராயன் கொடுத்தது வயிரரத்தின மாணிக்கம் மீகாமனேற்றுக் கொண்டது.

6. திருவுறைமார்பன் செம்பகராயன் கொடுத்தது பளிங்குரத்தின மாணிக்கம் கம்மாளரேற்றுக் கொண்டது.

‘இந்த மாணிக்கங்களை யேற்றுக் கொண்ட பேர்கள் தங்கள் மாணிக்கங்களுக்கு ஆடையாபரணமுடைக்கிசைந்த பட்டுவகை, குடிநிலம், விளைபுலம், மாடுகன்று, ஆளடிமை கொடுத்து அரன்தொழும்பு செய்யவிடுவது எந்தெந்தக் காலத்தும் அந்தந்த வம்சத்து மனிதர் இப்படிச் செலவு கொடுத்து நடத்த வேண்டியது. இப்படிச் செலவு கொடுத்து நடத்தாதவர்கள் வறுமையினாலும் நோயினாலும் இராச நெருக்கத்தினாலும் திரவியமிழந்து வம்சமற்று நரகத்துக்கு மேகுவார்களென்று அரசனாற் கூறப்பட்டது’

என்ற அமைந்திருக்கின்ற கோணேசர் கல்வெட்டின் இப்பகுதி திருக்கோணேச்சரத்தில் கடமை புரிவதற்காக தேவரடியார்கள் சிலரை நியமித்தது தொடர்பில் விரிவான விளக்கத்தை தருகிறது. இங்கு குறிப்பிடப்படும் நாகரத்தின மாணிக்கம் , நவரத்தின மாணிக்கம் , கனகரத்தின மாணிக்கம் , மரகதரத்தின் மாணிக்கம் ,வயிரரத்தின மாணிக்கம் ,பளிங்குரத்தின மாணிக்கம் ஆகியோர் ஆலயப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட தேவரடியார்கள். இங்கு அவர்களின் இயற்பெயர்களன்றி விருதுப் பெயர்களே சொல்லப்படுகின்றன. மாணிக்கம் என்பது அவர்கள் அனைவருக்குமுரிய பட்டப் பெயராகும். 

மாணிக்கம் என்பது தேவரடியார்க்குரிய பட்டம் என்பது பொலநறுவையிலுள்ள வானவன்மாதேவீஸ்வரத்துச் சாசனம் ஒன்றினால் அறியப்படுகின்றது. எனவே மாணிக்கம் என்னும் பட்டத்தைக் கோணேசர் கோயிலிற் கடமை புரிந்த தேவரடியார்களுக்கும் வழங்குவது வழமை என்பது உணரப்படுகின்றது.

தேவரடியாரை நியமிப்பது தானத்தாரின் பொறுப்பாகும். தானத்தார் குளக்கோட்டனிடமிருந்து இராயபட்டம் பெற்றவர்கள் என்பது ஐதீகம். கோயிலிற் கடமை செய்வதற்கென்று தானத்தார் வழங்கிய மாணிக்கங்களை முதன்மை, வன்னிமை முதலானோர் ஒப்புக் கொண்டனர். அவர்களுக்கு வேண்டிய நிலபுலங்களையும் ஆளணிகளையும் உடுபுடவைகளையுங் கொடுத்து அவர்களை ஆதரிப்பது அவர்களின் பொறுப்பாகும். 




இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment