Sunday, October 09, 2022

நூன்முகம் - பேராசிரியர் சி. பத்மநாதன் - தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு


நூன்முகம்

வரலாற்றுப் பேராசிரியர் சி. பத்மநாதன்

வேந்தர்,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.


இந்நூலின் ஆசிரியர் டாக்டர் ஜீவராஜ் பல ஆண்டுகளாக எமக்கு அறிமுகமானவர். பல்கலைக் கழகத்து மருத்துவக் கல்லூரியில் மேனாட்டு மருத்துவக் கலை பயின்று, பட்டதாரியானபின் பலவருடங்களாகத் திருகோணமலையில் உள்ள அரசினர் வைத்தியசாலைகளில் தொழில் புரிந்து வருகிறார். 

தம்பலகாமத்திலே பிறந்த நண்பர் ஜீவராஜ் தனது பிறப்பிடமான ஊரிலும் பொதுவாகத் தமிழர் சமுதாயத்திலும் மிகுந்த ஈடுபாடும்,அபிமானமும் கொண்டவர்.வேகமாக மாறிவரும் சூழ்நிலையில் அவை இரண்டும் சீர்குலைந்து செல்வதை சொந்த வாழ்க்கை அனுபவத்தால் உணர்ந்தவர். தமிழர் வாழும் ஊர்களையும், அவற்றுக்குரிய பண்பாட்டு அடையாளங்களையும் பேணிக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்கும் விதமாக எழுதுவதை நோக்கமாகக் கொண்டு பாராட்டுக்குரிய பணிகளைச் செய்கின்றார். 

பல அரிய வரலாற்றுச் சான்றுகளையும், தொல்பொருட் சின்னங்களையும், இலக்கியக் குறிப்புகளையும், நாட்டார் வழக்கான ஐதீகங்களையும் தேடிப்பெற்று புலமை நெறிக்கமையக் கட்டுரைகளை எழுதும் தகைமையினை இளமையிலே இவர் பெற்றுவிட்டமை ஒரு அரிய சாதனையாகும். இவர் எழுதுகின்ற தமிழ் வசனநடை இலகுவானது, தெளிவானது, கவர்ச்சியானது என்றும் சொல்லலாம்.

இந்நூல் தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு பற்றியதாகும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் தம்பலகாமம் வீதி வழியாகப் பிரயாணஞ் செய்ய முடிந்தது. அது மாரிகாலம். வீதியோரமான விசாலமான நிலப்பரப்பிற் செழுமையாக வளர்ந்த நெற்பயிர்கள் கதிர்கள் வீசிய கோலத்திலே செறிந்து காணப்பட்டன. வயல்களில் நீர் நிரம்பியிருந்தது. மாலைப் பொழுது என்பதால் அது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. உடனே வாகனத்தைத் தெருவோரமாக நிறுத்துமாறு சாரதியிடம் கூறினேன். வயல்களுக்கப்பால் மலைவரை உலகத்தின் காட்சி தெரிந்தது. இலங்கைத் தமிழர் வாழுகின்ற ஊர்களிலே தம்பலகாமமே மேலானது என்ற உணர்வோடு இடத்தை விட்டு நீங்கிச் சென்றோம். இந்நூலைப் படிக்கின்ற பொழுது கண்களில் நீர்த்துளிகள் ஏற்படுகின்றன. சம்பூர், திருக்கோயில் என்னும் ஊர்களும் தம்பலகாமம் போன்ற வனப்புடையவை என்பதைப் பின்புதான் அறிந்துகொள்ள முடிந்தது.

ஊர்ப் பெயர் பற்றி ஆசிரியர் கூறும் விளக்கங்கள் மிகவும் பொருத்தமானவை, ஆதாரபூர்வமானவை. கமம் பற்றிய தொல்காப்பியக் குறிப்பினை ஆதாரமாகக் கொண்டமை அவரது ஆளுமையின் சிறப்பாகும். வடமாகாணத்திலே வயல் நிலங்களைக் கமம் என்று சொல்வார்கள். வேளாண்மை செய்வோரைக் கமக்காரன் என்று சொல்வதுண்டு. 

மத்தியகாலத்தில் திருகோணமலைப் பிராந்தியத்தில் நான்கு வன்னிப் பிரிவுகள் இருந்தன. அவற்றிலொன்று தம்பலகாமப்பற்று. அது வன்னியனாரின் ஆட்சிக்குள் அடங்கியது. வன்னியனார் என்போர் குறுநில மன்னர்களாவர். நிர்வாகமும், நீதி பரிபாலனமும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. படைகளும் அவர்கள் வசமிருந்தன. குடியானவர்கள் காடுவெட்டி அவற்றிலே பிரயோசனங்களை உண்டுபண்ண விரும்பினால் வன்னியனாரின் அனுமதி பெறவேண்டும். அது சம்பிரதாயபூர்வமானது. செய்கை பண்ணுபவர்களுக்கு நிலங்கள் சொந்தமாகிவிடுவது வழமை. 

இப்பொழுது நிலைமை முற்றாக மாறிவிட்டது. வன்னியனாரின் ஆட்சி முறையில்லை. அதற்குப் பதிலான ஜனநாயக முறைப்படியான பிராந்திய சுயாட்சியும் இல்லை. குடியானவர்கள் காடுகளை வெட்டி நிலங்களைச் செய்கை பண்ணவும் முடியவில்லை. இலங்கை சுதந்திரம் பெற்றதும் ஆட்சியதிகாரங்கள் பெரும்பான்மை இனத்தவர் வசமாகிவிட்டன. 

தம்பலகாமத்தில் கழனிமலை என்றொரு புராதான இடம் இருக்கிறது. 2,500 ஆண்டுகளாக தமிழர் வாழ்ந்தமைக்கான அடையாளங்கள் அங்கு தெளிவாகத் தெரிகின்றன. இலங்கைத் தமிழர் தங்கள் வரலாற்றை வெளிக்கொணரவேண்டிய காலம் இது. ஆனால் உயர் கல்வி நிலையங்களும், பெருமக்களும் இதனைப் பற்றிச் சிந்திப்பதாகத் தெரியவில்லை. ஆவணச் சுவடிகள் நிலையத்துக்கு எவரும் போவதில்லை. கச்சேரி போன்ற அரசாங்க நிலையங்களிலுள்ள தமிழ் ஆவணங் களையும், தமிழர் பற்றிய ஆவணங்களையும் படித்து அவற்றை வெளிப்படுத்துமாறு, வழிப்படுத்துவோரும் இல்லை. இந்தக் கோணத்திலே பார்க்குமிடத்து எமது சமுதாயம் தோல்வி கண்ட சமூகமாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

இவ்வாறான ஒரு நிலையிலே சிறுதுளி பெரு வெள்ளமாகும் என்பதற்கமைய டாக்டர் ஜீவராஜ் போன்றோரின் முயற்சிகள் மறைந்து போனவற்றை மீட்பதற்கு ஆதாரமாகும். இவருடைய முயற்சிகள் எல்லாப் பட்டதாரிகளுக்கும் முன்னுதாரணமானவை. இந்நூல் ஆய்வு உணர்வுகளைத் தூண்டவல்ல சிறப்பு நூல். இது சமுதாய உணர்ச்சியுடைய எல்லோரும் கவனமாகப் படிக்க வேண்டிய நூல்.

பேராசிரியர் சி. பத்மநாதன்

வேந்தர்,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.பெருந்தன்மையோடு அரவணைத்த பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் எமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வரலாற்று தேடல்களுக்கு உறுதுணையாக இருந்ததோடு அவற்றினை முறையாக பதிவுசெய்யவும் வழிவகைசெய்தார். வரலாற்றுத் தேடல்களில் கல்வெட்டினை மைப்படி எடுப்பது முதலான பல்வேறு நுட்பங்களை அவரிடம் இருந்து நேரடியாக கற்றுக்கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது பெரும்பேறாகும்.
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment: