Sunday, October 09, 2022

அணிந்துரை - கலாநிதி கனகசபாபதி சரவணபவன் - தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு

கலாநிதி கனகசபாபதி சரவணபவன்

இரண்டாம் உலகப் போரின் முடிவைத் தொடர்ந்து வரலாற்று எழுத்தியலிலும் மாற்றங்கள் நிகழத் தொடங்கின.  போரில் தொடர்புடைய சிற்றூர்கள், பாலங்கள், போர்க் கப்பல்கள்,  வழிபாட்டுத் தலங்கள் என இதுவரை அதிகம் பேசப்படாமல் இருந்த பல விடயங்கள்  வரலாற்று  ஆய்வாளர்களின் கவனத்தை திருப்பின.  வரலாற்றுத்துறைசாரா ஆர்வலர்களினால்  அவர்களைச் சுற்றியுள்ள இடங்கள் மிக அக்கறையோடு கவனிக்கப்பட்டது. இதுவரை பெரு வரலாறு பெற்றிருந்த முக்கியத்துவத்தை நுண் வரலாறு  பெறத் தொடங்கியது. நமது பாரம்பரிய வரலாற்றுக் கல்வியானது தேசம் என்ற ஒரு பெரும் நிலப்பரப்பின் ஆட்சியாளர்களது வாழ்க்கையை கால ஒழுங்கு நிரலில் எழுதி வரலாறாகப் போதித்துக் கொண்டிருக்கின்றது. அது ஒரு தேசத்தின் புற உருவப் படத்திற்கு நிகரானதே தவிர உள்ளடக்க விளக்கங்கள் நிறைந்தவை அல்ல. 

கார்ல் மாக்ஸ், ஏங்கிள்ஸ் ஆகியோர் பொருளாதார மாற்றங்களே சமூக வரலாற்றைத் தீர்மானிக்கின்றது என்ற புதிய சிந்தனையை உலகிற்கு முன் வைத்தார்கள். ஆட்சியாளர்களின் பரம்பரை வரலாறு தேசத்தின் வரலாறு இல்லை என்பதை அறிவியல் நோக்கில் புரிய வைத்தார்கள். இதன் பின்னரேயே வரலாற்றை தீர்மானிப்பதில் மக்கள் கொண்டிருந்த பெரும்பங்கு மீது அதிகம் வெளிச்சம் பரவத் தொடங்கியது. பாரம்பரிய வரலாற்றாய்வாளர்களுக்கு நிகராக சாமானிய வரலாற்று ஆர்வலர்களும் தங்கள் சுற்றுச்சூழலின் முக்கியத்துவங்களை பதிவு  செய்யத் தொடங்கினார்கள். அதுவே நுண் வரலாற்றின் தொடக்கமாகியது. 

நுண் வரலாற்றியலில்  புவிசார் வரலாற்றுப்  பிரிவு  குறித்த ஆய்வியல் ஈழத்தில்  இன்னும் வளர்ச்சியடையவில்லை.  ஒரு குறிப்பிட்ட இடத்தின் பண்பாட்டு  வரலாறும், புவியியலும் இணையும் ஆய்வியலை இடப்பெயரியல்  (Toponymy) எனக் குறிக்கப்படுகின்றது.

இடப்பெயரியல் ஆய்வுகள் பல சந்தர்ப்பங்களில் ஒரு பிரதேசத்தின் தெளிவற்ற வரலாற்று நிகழ்வுகளை மீட்டெடுத்திருக்கின்றன. பொதுவாக இடப் பெயர்கள்  அந்தந்த மண்ணின் பண்பாட்டு வேர்களையும், அங்கே வாழ்ந்த மக்களின் வாழ்வியலையும்  இணைக்கும் குறியீடாக  உணரப்படும்.  தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வை இலக்கியத்தளத்தில் இருந்தும் மிகையுணர்ச்சி இன்றி ஆதாரங்களை ஜீவா முன்வைத்திருப்பது  ஆர்வம் தருகின்றது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் நுண் வரலாறு அல்லது இடப்பெயரியல் குறித்தோ இதுவரை அதிகம் ஆய்வு செய்யப்படவில்லை.  தம்பலகாமம் வேலாயுதம் அவர்கள்  தம்பலகாமம் ஆலயம் மற்றும் சமூக வழக்காறுகள் குறித்து எழுதியுள்ள கட்டுரைகள் மிகப் பயனுள்ளவை. அவரைத் தொடர்ந்து வேலாயுதம் தங்கராசா, தங்கராசா ஜீவராஜ் ஆகியோரின் தேடல்களும்,எழுத்துக்களும் தம்பலகாமம் பற்றின் நுண் வரலாற்றுக்கு மிகப் பெரிய பங்களிக்கின்றன. 

வாழுகின்ற மண்ணின் பாரம்பரியத்திற்கும், பரம்பரைக்கும் இடையிலான நெருக்கமான உறவையே முன் குறிப்பிட்ட மூன்று தலைமுறை எழுத்துக்களும் எடுத்துக்காட்டுகின்றன.  திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமப்பற்று சிறப்பு தனித்துவமுடையது. ஜீவாவின் ஜீவநதி வலைப்பதிவில் (www.geevanathy.com) உள்ள கழனி மலைக்கல்வெட்டு என்னும் கட்டுரையில் வரும் காடுகள், மலைகள், நீர்நிலைகள், இயற்கை அற்புதங்கள் மட்டுமின்றி வரலாற்றோடு தொடர்புடையது என்பதை தம்பலகாமம் வேலாயுதம் எழுதிய வதனமார் காவியக் கட்டுரையில் வாசகர்கள் அறிவார்கள். அதன் மையமாகத்  திகழ்வதுதான் ஆதி கோணேசர் ஆலயம்.  அதிலிருந்துதான் ஒரு பிரமாண்ட மரபு கிளைவிட்டுக் கிளைவிட்டு அந்த மண்ணிற்கு வரலாற்றுப் பெருமை சேர்த்திருக்கின்றது. அவற்றையெல்லாம் இணைத்து எழுதும்போது கலை, இலக்கியம், வாழ்வியல் அனைத்துக்கும் ஆதிகோணேசர் ஆலயம் ஆணிவேராக இருப்பது அறிய வரும்.

சாம்பல்தீவு திரு. தம்பிராசா அவர்களின் கல்வெட்டு தேடும் பணியின் வழியில் ஜீவாவின் பயணங்கள் தொடர்வது ஆறுதல் தருகின்றது. சமகால அரசியல் உண்மை வரலாற்றுக்குத் திரைபோடும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் ஜீவா போன்றவர்கள் எழுதும் சிற்றூர்களின் வரலாறுகள் உண்மைக்கு மிக நெருக்கமானவை. 

இன்றைய சிந்தனைத் தெளிவிற்காக நேற்றைய வரலாறுகளின் உண்மைத் தன்மை வெளிக் கொண்டுவரப்பட வேண்டும். இது இளைய தலைமுறைக்கு செய்யப்படும் மிக முக்கிய  ஒரு சமூகக் கடமையாகும். ஜீவநதி இணையத்தளம் வழியாக நண்பர் ஜீவாவின்  வரலாற்றுத் தேடல்கள் பண்பாட்டு, வரலாற்றுச் சித்திரமொன்றை தம்பலகாமப் பற்றுக்கு அளிக்கின்றார். தம்பலகாமம் என்ற பெயர் குறித்த ஆய்வு மிகையுணர்ச்சி இல்லாத கல்வி ஒழுங்கில் மிக நேர்த்தியாக  அமைந்திருப்பது சிறப்பானது.

கலாநிதி கனகசபாபதி சரவணபவன்  


அறிமுகமான காலத்தில் இருந்து ஒரு மூத்த சகோ தரனைப்போல் அன்பு செலுத்தும் திருகோணமலை வரலாற்று ஆய்வாளர் கலாநிதி கனகசபாபதி சரவணபவன் அவர்களின் தொடர்பும், ஆலோசனைகளும் நன்றிக்குரியவை. தங்களது நேரத்தை ஒதுக்கி முழுஈடுபாட்டுடன் இந்நூலினை சிறப்புற திருத்தி செம்மைப்படுத்திய திருமதி சாந்தினி சரவணபவன், கலாநிதி கனகசபாபதி சரவணபவன் தம்பதியினருக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.


சரவணபவன்

பொற்கேணி

பொற்கேணி

பொற்கேணி

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment