Tuesday, October 17, 2017

இலக்கந்தையில் குழாய்க் கிணறுகள் திருத்தியமைப்பு - புகைப்படங்கள்


திருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்றான  இலக்கந்தையில் நிலவும்  குடிநீர்ப் பிரச்சனை தொடர்பான காணொளிப்பதிவு இது.



திருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்று  இலக்கந்தை. 2006 இல் இடம்பெற்ற மாவிலாறு யுத்தம் இவ்வூர் மக்களை பலத்த  பொருளாதார, உயிர் இழப்புகளுடன் வாகரை ஊடாக மட்டக்களப்பு நோக்கி அகதியாக்கியது. 2007 ஆம் ஆண்டில் கிளி­வெட்டி முகாமில் தங்கவைக்­கப்­பட்ட இம்மக்கள் 2009 ஆம் ஆண்டுமுதல் பல்வேறு கட்டங்களாக மீள்குடியமர்த்தப்பட்டார்கள்.


யுத்தமும், இடப்பெயர்வும் இவர்களது வாழ்வினைச் சீர்குலைத்துவிட்டது.  யுத்தத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புகள், உடமை இழப்புகள் தவிர்த்து போதிய ஊதியமின்மை, குடிநீர்வசதி, போக்குவரத்து, மருத்துவம், மின் இணைப்பு என்பன கிடைப்பதிலுள்ள பிரச்சினைகள், சிறுவர்களின் போசாக்கின்மை, பாடசாலை இடைவிலகல், இளவயது திருமணம், சமூர்த்தி வசதி மறுப்பு, முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரப் பிரச்சினை, காணி அபகரிப்பு என்று நீண்டு செல்கிறது அக்கிராம மக்கள் அனுபவித்துவரும் துன்பங்கள்.

இலக்கந்தை கிராமத்தில் ஐந்து குழாய்க் கிணறுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றே பாவனையில் இருந்தது. பொதுக்கிணறு இரண்டும், பாடசாலைக் கிணறு ஒன்றும் அக்கிராமத்தில் இருக்கிறது. இவற்றில் ஒன்றில் மட்டுமே ஒரு அடி ஆழத்திற்கு தண்ணீர் இருக்கிறது. இதனால் மக்கள் பெரும் அவலத்திற்க்கு உள்ளானார்கள்.

அதிகாலை ஒருமணி முதல் அடுத்தநாள் நண்பகல்வரை குடிநீருக்காக மக்கள் குழாய்க் கிணற்றின் முன்னால் தவம் இருந்தனர்.


04.10.2017 அன்று வீரமாநகரைச் சேர்ந்த திரு க.பண்பரசன் காண்டீபனால்  நீரின்றித் தவிக்கும் இலக்கந்தை மக்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட  காணொளிப்பதிவு ஜீவநதி (www.geevanathy.com ) இல் பிரசுரமாகி இருந்தது.


பலரது கவனத்தையும் ஈர்த்திருந்த இந்த அவலம் தொடர்பில் திருகோணமலை எமது சமூகம் அமைப்பினர் உடனடிக்கவனம் செலுத்தினர்.  26.09.2017 இல் திருகோணமலை எமது சமுகம் அமைப்பினரால் பாட்டாளிபுரத்தில் மருத்துவ முகாமும், விழிப்புணர்வு கலந்துரையாடலும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.




திருகோணமலை எமது சமூகம் அமைப்பினர் இக்கிராமத்தில் பழுதாகி இருந்த குழாய்க் கிணறுகளை திருத்தியமைக்க முயற்சி எடுத்தனர். இதன் பலனாக எமது சமூகம் இலண்டன் (OUR SOCIETY LONDON )  அமைப்பினரின்  நிதிப் பங்களிப்புடன்  இலக்கந்தை கிராம மக்களின் ஒத்துழைப்பில் பழுதாகி இருந்த குழாய்க் கிணறுகள் மூன்றை திருத்தியமைத்து மக்களிடம் கையளித்தனர்.

( புகைப்படங்கள் - திரு க.பண்பரசன் காண்டீபன்)


எமது சமூகம் இலண்டன் (OUR SOCIETY LONDON ) அமைப்பின் நிதிப் பங்களிப்பில் இலக்கந்தைக் கிராமத்தவரின் ஒத்துளைப்புடன் திருத்தியமைக்கப்பட்ட குழாய்க் கிணறுகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர் 130 குடும்பங்கள் வாழும் இக்கிராமத்தின் குடிநீர் தேவைக்காக தற்போது நான்கு குழாய்க் கிணறுகள் பயன்பாட்டில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

'' நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு ''
வான்சிறப்பு - திருக்குறள்

நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com
மேலும் வாசிக்க



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment