Saturday, October 20, 2012

சிவப்புக் கோடுகள்

பாடசாலை

சுஜாத்தா தன் கையில் கட்டியிருந்த சிற்றிசனில் நேரத்தைச் சரிபார்த்துக் கொண்டே வீதியில் பார்வையைத் தெளித்தாள். தூரத்திலே அவள் பிரயாணம் செய்ய வேண்டிய ‘கிண்ணியா’ பஸ் வந்துகொண்டிருந்தது. அந்த ‘டிமோ’ பஸ்ஸில் முண்டியடித்து ஏறி ஒரு ‘சீற்றை’ பிடித்தவாறே‘சைனாபேக்கு’( China Bay ) ஒரு ‘டிக்கட்’ வாங்கிக் கொண்டு அப்பாடா எனப் பெருமூச்சு விட்டாள்.


எப்படியோ பஸ்ஸில் இடம் பிடித்தாயிற்று. இன்னும் அரைமணி நேரத்திற்குள் பஸ் சைனாபே றெயில்வே ஸ்ரேசனை அடைந்துவிடும். அங்கிருந்து 500 மீற்றர் தூரத்திலுள்ளது அவள் வேலைசெய்யும் சீனக்குடா தமிழ்க் கலவன் பாடசாலை. இன்று வேளைக்குப் போய்விடலாம். எட்டு மணிக்குள் போகாவிட்டால் அதிபர் உடனே ‘றெட் லைன்’ இழுத்து விடுவார். ஏற்கனவே இப்படி ஐந்தோ ஆறோ நாட்கள் லீவு எடுத்தாயிற்று. இனிமேலும் அப்படி செய்யக்கூடாது என்று தன் மனத்துக்குள் சொல்லிக் கொண்டாள்.

‘குட்மோனிங்’ ரீச்சர் அதிபரின் குரல் சுஜாதாவை கற்பனை உலகிலிருந்து கலைத்து நினைவுக்குக் கொண்டுவந்தது. ‘வெரி குட்மோனிங் சேர்’ என்று பதிலுக்குச் சொல்லிவிட்டு அதிபர் அறைக்குள் நுளைந்து வரவுப்பதிவேட்டில் தன் ஒப்பத்தை வைத்துவிட்டு தனது வகுப்பறையை நோக்கி சென்றாள். தொடர்ந்து சிவப்புக் கோட்டுக்கீழ் ஒப்பமிட்டு ஒப்பமிட்டு அவள் மனம் சோர்ந்து போயிருந்தாள். எவ்வளவு முயற்சி எடுத்தும் அவளால் நேரத்திற்கு பாடசாலைக்கு வருவது ஒரு பெரும் சவாலாகவே இருந்தது.

உத்தியோகம் புருசலட்சணம் என்று சொல்லுவார்கள். ஆனால் எந்த அரசாங்க அல்லது தனியார் நிறுவனங்களிலும் ஆண்களுக்கு சரி நிகராக பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு உத்தியோகம் பார்ப்பது வெளிப்படை. சொல்லப் போனால் இந்த ஆசிரியத் தொழிலில் ஆண்களை விடப் பெண்களே அதிகம். ஏன் அதிகம் சொல்லுவான் ‘நம்ம சீனக்குடா தமிழ் வித்தியாலயத்தில் அதிபர் உட்பட ஐந்து பேர்தான் ஆண் ஆசிரியர்கள். மற்ற பத்துப்பேரும் பெண்களேயாகும்.

சுஜாத்தா நிமிர்ந்து பார்த்தாள். அவளருகே சறோ ரீச்சர் நின்று கொண்டிருந்தாள்.  அவள் அந்தப் பாடசாலையின் ‘ரீச்சர் குவாட்டஸில்’ இருப்பதால் தினமும் நேரத்திற்கு வந்துவிடுவாள். குடும்பப் பொறுப்புகளும் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. இரண்டு பெரிய பிள்ளைகள். அவர்கள் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்து கொள்வார்கள். சறோ ரீச்சர் நேரத்திற்குப் பாடசாலைக்கு வருவதில் எந்த இடையூறும் இருந்ததில்லை.

சறோ ரீச்சரோடு தனது நிலையை ஒப்பிட்டுப் பார்த்து பெருமூச்சு விட்டாள் சுஜாத்தா. ஒரு ஆசிரியரையே கணவராக வரித்துக் கொண்ட அவள். அண்மையில்தான் ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறாள். நீண்டகால பிரசவ லீவுக்குப் பின் பாடசாலைப் படியைத் தொட்ட அவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

அன்று ஆசிரியர் கூட்டம் நடந்தது. அதிபர் கடுகடுப்பாக முகத்தை வைத்துக் கொண்டு புதிய புதிய சட்டங்களை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார். அதில் ஒன்று எல்லா ஆசிரியர்களும் ஏழரை மணிக்கு முதல் பாடசாலைக்குச் சமூகங்கொடுக்க வேண்டும் என்பது. அப்படியில்லாமல் பிந்தி வருபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சூசகமாக எடுத்துக் கூறினார். சுஜாத்தாவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. அதிபரை மனதுக்குள் சபித்துக்கொண்டாள்.

கடந்த சில நாட்களாக அவளுக்கும் அதிபருக்குமிடையில் உறவுகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. பாடசாலையைப் பொறுத்தவரையில் அதிபரிடமிருந்தும் அடிக்கடி அங்கு வரும் அதிகாரிகளிடமிருந்தும் அபாரமான பாராட்டுக்களைப் பெறும் அவள் குறித்த நேரத்திற்குள் பாடசாலைக்கு வருவதில் மட்டும் சோடைபோய் விட்டாள். அதிபர் எவ்வளவு சொல்லியும் அவளால் நேரத்திற்கு வருவது முடியாமலேயே இருந்தது. அதற்கு அவள் குடும்பநிலையே காரணமாக இருந்தது. இருவரும் ஆசிரியத் தொழிலில் இருந்ததாலும் அவர்களுக்கென்று உதவக்கூடிய உறவினர்கள் இல்லாத காரணத்தாலும் இருவருமே நேரத்திற்கு எழுந்து சமைத்து குளித்துப் பாடசாலைக்குப் புறப்படுவதற்கு நேரம் போதாதிருந்தது. இதற்குள் பிள்ளையை வேறு எடுத்து பேத்தியார் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வரவேண்டும்.

என்ன வாழ்க்கை இது? என்று இருவரும் சில வேளைகளில் சலித்துக் கொள்வதுமுண்டு. பொறுமையிழந்த வேளைகளில் இந்த வேலையைத் தூக்கி எறிந்து விடுவோமா?என சுஜாத்தா சில சந்தர்பங்களில் எண்ணியதுமுண்டு. ஆனால் வாழ்க்கைக்கு இருவருடைய சம்பளமும் அவசியம் என்பதை புரிந்து கொண்ட பிறகு அது முட்டாள்தனமானதாகவே பட்டது.

“சறோ உங்களைப்போல நானும் குவாட்டஸில இருந்தா நேரத்திற்கு வந்து விடுவன். எவ்வளவு முந்தி எழும்பினாலும் நேரத்திற்கு வருவது கஸ்டமாகத்தான் இருக்குது”சறோவின் தோளைப்பிடித்துக் கொண்டே கிசுகிசுத்தாள் சுஜாத்தா.

“என்ன செய்யலாம் சுஜா. நம்ம கஸ்டம் நம்மளோட இது அரசாங்க வேலையல்லவா? நேரத்தை அனுசரித்து நடக்கத்தான் வேண்டும்;” என்றாள் சறோ.

“சீச்சி அப்படிச் சொல்லாத சறோ. இந்த அதிபர் கொஞ்சமும் இரக்கமில்லாதவர். எப்பவும் அந்தாளுக்கு சட்டம்தான் முக்கியம். மனிதர்களைப் பற்றி அவர்களுடைய அவலங்களைப் பற்றி அறியாத முண்டம்” என்று ஆவேசமாகக் கத்தினாள் சுஜாத்தா.

சுஜாத்தாவின் நிலை சறோவுக்கு மிகுந்த கவலையைக் கொடுத்தது என்றாலும் அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. மணி ஒலிக்கிறது. ‘அசெம்ளி' முடிந்து வகுப்பறைக்கு மாணவர்கள் எல்லோரும் சென்று அமருகின்றனர். தரம் மூன்றுக்கு சுஜாத்தா செல்கிறாள்.பிள்ளைகள் எல்லோரும் எழுந்து நின்று வணக்கம் ரீச்சர் என்று ஏகோபித்த குரலில் கூறுகின்றனர். பதிலுக்கு அவளும் வணக்கம் தெரிவித்து விட்டு எல்லோரையும் அமரச் சொல்லுகிறாள்.

சுஜாத்தாவின் கவலை ஓரளவு ஒழிந்து பிள்ளைகள்பால் அவளது கவனம் செல்கிறது. வகுப்பு மாணவர்களோடு தன்னைப் பிணைத்துக் கொள்கிறாள் அவள். நேரம் போனதே தெரியவில்லை. இடைவேளை மணி ஒலிக்க எல்லா ஆசிரிய ஆசிரியர்களும் தேனீர் அருந்துவதற்கு ‘கென்றினுக்குச்’ செல்லுகிறார்கள். சுஜாத்தா மட்டும் தனித்து இருக்கிறாள். எதை எதையோ எண்ணி மனதைக் குளப்பிக் கொண்டிருக்கும் சுஜாத்தாவின் கவனம் வகுப்புக்குள் தனித்து இருக்கும் ஒரு மாணவிமீது செல்கிறது.

“ஏனம்மா! சாப்பிடப் போகலையா?”என்று அந்த மாணவியை அணைத்தவாறே கேட்கிறாள்

சுஜாத்தா. “இல்லை ரீச்சர்” என்று கூறியவாறே அவள் பிடியிலிருந்து திமிறி விலகிக்கொள்ளும் அந்த மாணவி “ ரீச்சர் நான் ஒன்று கேட்கட்டுமா?” என்று செல்லமாகக் கேட்கிறாள். ‘ம்’ கொட்டுகிறாள் சுஜாத்தா.

“ரீச்சர் எங்கள நேரத்தோட வாங்க என்று நீங்கதானே சொல்றீங்க.”

“ஆமாம்”

“நேரத்தோட வராட்டி அதிபரிடம் சொல்லி அடியும் வாங்கித் தாறீங்க”

சுஜா மௌனமாக அவளைப் பார்க்கிறாள்.

“நீங்க ஏன் ரீச்சர் நேரத்தோட வாற தில்ல.”

சுஜாத்தாவுக்கு அந்தக் கேள்வி ‘பகீர்’ என்று நெஞ்சில் தைக்கிறது.

“ ரீச்சர் நீங்க நேரத்தோட வருவீங்க எண்டு நான் எத்தனை நாள் பாத்து பாத்து ஏமாந்திட்டன் ரீச்சர். அம்மாட்ட சொல்லி உங்களுக்கு விருப்பான தோசை எத்தனை நாள் கட்டி வந்து நானும் தின்னாம வேற பிள்ளைகளுக்குக் கொடுத்திருக்கேன் ரீச்சர்” என்று கூறியவாறே சிணுங்கி அழுது கொண்டு சுஜாத்தாவின் மடியில் சாய்ந்து விக்கி விக்கி அழுதாள் அந்த பசிசிளம் பாலகி.
சுஜாத்தா அவளை அப்படியே வாரி அணைத்துக் கொள்கிறாள்.

இப்போதெல்லாம் சுஜாத்தா ரீச்சர் பாடசாலை நேரத்திற்கு பிந்துவதேயில்லை. குறிப்பாகச் சொல்லப் போனால் சறோ ரீச்சருக்கு முன்பாகவே அவள் சமூகம் கொடுத்து விடுவதைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியப்படுவதுண்டு. தனது சிவப்பு கோடு வைத்தியத்தால்தான் சுஜாத்தா ரீச்சர் நேரத்திற்கு வருகை தருகிறார் என அதிபர் பலரிடமும் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

சுஜாத்தா ரீச்சரின் மாற்றத்திற்குக் காரணம் சிவப்புக் கோடல்ல. தரம் மூன்றில் படிக்கும் அந்த மாணவிதான் என்ற இரகசியம் சுஜாத்தாவுக்கு மட்டுமே தெரியும்.

வே.தங்கராசா.


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

6 comments:

  1. ஒவ்வொரு கதையும் பழைய நினைவுகளை அசைபோட வைக்கிறது. :-) இதே பாதையால் பயணம் செய்திருக்கிறேன் நானும், வெள்ளைமணலுக்கு.

    ReplyDelete
  2. மிக இயல்பான நடையில்
    சுவையான கதை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா தங்களின் கருத்து என்னை மேலும் எழுதத் தூண்டுவதாக அமைந்துள்ளது,

      Delete
  3. மிக்க நன்றி இமா அவர்களே.

    ReplyDelete
  4. நல்ல கதை.

    குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நாங்கள் நடக்க வேண்டும் என எடுத்துச் சொல்கின்றது கதை.

    இதை எல்லோரும் பின்பற்றுவது நல்லது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மாதவி அவர்களே.

      Delete