Tuesday, October 20, 2009

ரொபின் ஹூட் / ROBIN HOOD


நீண்டநாளைக்குப் பிறகு Robin of Sherwood தொலைக்காட்சித் தொடரின் ஒருபகுதியைப் பார்க்கக்கிடைத்தது. எப்போதோ கொழும்பு சென்றிருந்தபோது வாங்கிய இறுதட்டை கணிணிக்குள் சுழலவிட்டபோது கூடவே என் ஞாபகங்களும் சுழன்று பின்னோக்கிச் சென்றது.


பாடசாலைக்காலத்தில் மிக உற்சாகம் தந்த தொடரிது. அப்போது அது ரூபவாஹினி தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அனைத்துப் பாடசாலை மாணவர்களதும் கவனத்தை ஈர்த்த தொடரிது. சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களையும் தன் பக்கமீர்த்த இத்தொடர் பல வீடுகளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து பார்க்குமொன்றாக இருந்தது.

இத்தொடர் ஒளிபரப்பாகும் நாளுக்கு அடுத்தநாள் பாடசாலையின் பெரும் பகுதி நேரத்தை தொடரின் கதை நிறைத்திருக்கும். இப்போது பார்த்தாலும் ஆர்வத்துடன் பார்க்க வைக்கும் இத்தொடர் அடக்குமுறை நிறைந்த வாழ்வை பிறந்தது முதல் கொண்டிருந்த எங்களை இலகுவாக ஈர்த்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இத்தொடரைப்பார்த்த எந்தவொரு இளம்பருவத்தினரும் தமக்கு கிடைத்ததைக் கொண்டு கத்திச் சண்டையோ அல்லது அம்பு வில் பயன்படுத்தி விளையாடிய அனுபவத்தைக் கொண்டிருப்பர்.

சர்வாதிகாரப் பெருஞ் செல்வந்தர்களின் பணத்தைப்பறித்து அதை ஏழைகளுக்கு வழங்கி வாழ்வு நடத்தியவனின் கதையான ரொபின் ஹூட் ஆங்கில நாடோடிக் கதைகளின் மூலத்தை அடிப்படையாக்க கொண்டிருக்கிறது.  இதனது வரலாற்றுப் பின்னணி சர்ச்சைக்குரியது என்றாலும், அது நடந்தது 16ம் அல்லது 17ம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இக்கதைப்படி ரொபின் ஹூட் வாழ்ந்ததாகக் கருதப்படும் நாட்டின்காம் அரண்மனைக்கு முன்னால் அவர் நினைவாக வைக்கப்பட்டுள்ள சிலை கீழுள்ள படத்தில் உள்ளது.


சாகசங்களுக்கு அப்பால் ரொபின் ஹூட் இன் குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் தனித்திறமைகளும், அவர்களுக்கிடையில் இடம்பெறும் காதல், சோகம், நகைச்சுவை , சண்டைகள் என்று எல்லாமே ரசனைக்குரியவை.

80 களில் இங்கிலாந்தில் ஒளிபரப்பாகி மிக வரவேற்ப்பைப் பெற்ற இத்தொடர் இலங்கையிலும் விரும்பிப் பார்க்கப்பட்டது. ரொபின் கூட்டத்தில் இருக்கும் லிட்டில் ஜோன் முதல் நசீர் வரை ஒவ்வொரு பாத்திரமும் இன்றும் மனதில் நிக்கக்கூடியவாறு இத்தொடர் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.

இரக்கமில்லாத அடக்குமுறையாளனான நாட்டின்காம் செரீப் ,அவன் தளபதி கிஸ்பன் என்போருக்கு எதிராக நடக்கும் இப்போராட்டம் பலரது வெளிப்படுத்த முடியாத எண்ணக்கிடக்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட இத்தொடர் விரைவில் உலகம் முழுவதும் பிரபலமானது.
த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

9 comments:

 1. நான் பார்க்க நினைத்து முடியாமல் போன சித்திரம் பதிவுக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 2. மனது மறக்காத தொடர் ஒன்றின் நினைவுகளை அசைபோட வைத்தீர்கள் ஜீவன்.
  அந்தகாலங்கள் நீங்கள் சொல்வதுபோல இத்தொடரைப்பற்றிய அலட்டல்கள் மறுநாள் பாடசாலையில் கண்டிப்பாக இருக்கும். ரொபின்கூட்-1 இறுதியில் மலை உச்சியில் இறக்கும்காட்சியை பார்த்துவிட்டு மறுநாள் சாப்பிடாமல் இருந்தவன் நான். பதவிவுக்கும், ஞாபகமூட்டலுக்கும் நன்றிகள் நண்பரே.

  ReplyDelete
 3. //இத்தொடரைப்பார்த்த எந்தவொரு இளம்பருவத்தினரும் தமக்கு கிடைத்ததைக் கொண்டு கத்திச் சண்டையோ அல்லது அம்பு வில் பயன்படுத்தி விளையாடிய அனுபவத்தைக் கொண்டிருப்பர்//

  நாங்கள் மட்டும்தான் அப்படி என நினைத்திருந்தேன் பார்த்தால் எல்லாரும் அப்படிதான் இருந்திருக்கிறார்கள். இன்றும் எனது அலைபேசியின் நாதம் ரொபின் ஹுட் இசைதான்.

  ReplyDelete
 4. வணக்கம் ஜீவன்.

  நீண்ட பெருங்காலமாக உங்கள் வலைப்பக்கம் வராதிருந்தமைக்கு முதலில் வருந்துகிறேன்.
  எனினும் வெளியில் உலவாத அன்புங்கள் பேரின் அடியில் கிடக்கிறதைச் சொல்லவேண்டும்.
  இந்தப்பதிவு என்னை எண்பதுகளுக்கு இழுத்துச்செல்கிறது. நான் முதல் முதல் பார்த்த தொலைக்காட்சி
  ரூபவாஹினி தான். தென் தமிழகத்து அதுவும் கிழக்கு ராமநாதக்கடற்கரையோரம் அப்போது பனியிலிருந்தேன்.
  டாக்டர் இன் த ஹவுஸ், ஸ்டார்ஸ்கய் அன் ஹட்ச், இன்னும் பல தொடர்கள். புதன் கிழமை தமிழ்ப்படங்கள் எல்லாம்
  மறக்கவியலாப் பசும் நினைவுகள்.

  அப்புறம்,
  மின்மடல் வந்தது. வாழ்த்துக்கள் உங்களுக்கும் வரப்போகும் துணைவியாருக்கும்.
  நேரில் வந்து காண்பதை விட இன்னும் அடர்த்தியான குதூகலத்தை தரக்கூடியது இந்த வலை வாழ்த்து.
  மணம் முடிந்த பின் கட்டாயம் புகைப்படங்கள் காணத்தருவீர்கள். பார்க்கலாம்.

  ReplyDelete
 5. பழைய ஞாபகத்தை மீட்டிப் பார்க்க சந்தர்ப்பம் அளித்தமைக்கு மிக்கநன்றிகள்.

  ReplyDelete
 6. அருமையான நினைவலைகளில் இன்று கூட நிலைத்திருக்கும் சில படைப்புக்கள் வரிசையில் இடம்பெறுவது தான் "ரொபின் கூட்". அதனுடைய இசையை இன்று கேட்டால் கூட புல்லரிக்கின்றது... மீண்டும் மழலை பருவத்திற்கு சென்று வந்தது போன்று இனம் புரியாத ஒரு ஆனந்தம்..இந்த வரிசையில் இடம் பெறும் மேலும் சில படைப்புக்கள் வருமாறு........"மாயா போஞ்சி" "நைட் ரைடர்" "வைப்பர்" "ரோபோ கொப்" போன்ற படைப்புக்களும் அடங்கும்.......இவையெல்லாம் காலத்தால் அழியாத படைப்புக்கள்... நினைவலைகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா........-JO.

  ReplyDelete
 7. அருமையான நினைவலைகளில் இன்று கூட நிலைத்திருக்கும் சில படைப்புக்கள் வரிசையில் இடம்பெறுவது தான் "ரொபின் கூட்". அதனுடைய இசையை இன்று கேட்டால் கூட புல்லரிக்கின்றது... மீண்டும் மழலை பருவத்திற்கு சென்று வந்தது போன்று இனம் புரியாத ஒரு ஆனந்தம்..இந்த வரிசையில் இடம் பெறும் மேலும் சில படைப்புக்கள் வருமாறு........"மாயா போஞ்சி" "நைட் ரைடர்" "வைப்பர்" "ரோபோ கொப்" போன்ற படைப்புக்களும் அடங்கும்.......இவையெல்லாம் காலத்தால் அழியாத படைப்புக்கள்... நினைவலைகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா........

  ReplyDelete
 8. இனிய திருமண வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 9. எங்களுக்கும் இதை மாதிரி அனுபவம் உண்டு .....கொஞ்ச நாள் நாங்க பலகையால் செய்த கத்தியோடு அலைந்தோம் அண்ணா......

  ReplyDelete