Monday, July 15, 2019

தேசத்துக் கோயிலில் திருவிழா - தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்


தேசம் , நாடு தொடர்பாக பல்வேறுபட்ட விவாதங்கள் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசம் எனும் கோட்பாடு என்றென்றும் நிரந்தரமாக இருந்தது இல்லை. அது காலத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது. இத்தகைய சூழலில் அரசியல், புவியியல், பண்பாட்டியல் சார்பாக நாடு, தேசம் என்பனவற்றை நாம் இன்று பிரித்தறிய முயன்று வருகிறோம்.

தேசம் என்பது பெரும்பாலும் ஒரே மொழிமரபு, இனக்குழு, குடிவழக்கு போன்ற ஒன்றித்த இனக்குழுக்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கிறது. அத்தோடு தொடர்ந்து வரும் வரலாறு, பாரம்பரியமாக வாழ்ந்துவருகின்ற பூமி போன்ற கூறுகளையும் இது உள்ளடக்கியதாக இருக்கிறது. வடமொழிச் சொல்லான தேஷம் என்பதன் தமிழ் வடிவம் தேஎம் ஆகும். அதன் திரிபடைந்த வடிவமே இன்று நாம் பயன்படுத்தும் தேசம்.


மட்டக்களப்பு தேசம், முக்குவதேசம், யாழ்ப்பாண தேசம் எனும் சொற்றொடர்கள் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் முற்காலங்களில் வழங்கிவந்ததினை பண்டைய நூல்களிலும் , ஆவணங்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. இவற்றுடன் கிழக்கிலங்கையின் பல ஆலயங்கள் தேசத்துக்கோயில் என இன்றும் வழங்கிவருவதனைக் காணக்கூடியதாக உள்ளது. வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயம். திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் போன்றன தற்போதும் அப்பிரதேச மக்களால் தேசத்துக் கோயிலாக கொண்டாடப்படுவதனை இன்றும் காணலாம்.

திருகோணமலையைப் பொறுத்தமட்டில் அது நான்கு வன்னிப் பிரிவுகளாக நிர்வாக ரீதியில் இயங்கி வந்ததினை ஐரோப்பியர் ஆவணங்கள் மூலம் அறியமுடிகிறது. இந்நான்கு வன்னிப் பிரிவுகளும் திருக்கோணேச்சரத்துடன் தொடர்புடையவை. திருக்கோணேச்சரம் திருகோணமலைப் பிராந்தியத்தின் நிலவுடமை மீது கொண்டிருந்த அதிகாரத்தினைப் பிரதிபலிப்பவை. இந்நான்கு பிரிவுகளும் பற்றுக்கள், தேசங்கள் என அழைக்கப்பட்டு வந்தது.. அவையாவன திருகோணமலைப் பற்று (தேசம்) ,கட்டுக்குளப் பற்று (தேசம்) , கொட்டியாரப் பற்று (தேசம்) , தம்பலகாமப் பற்று (தேசம்) என்பனவாகும். இங்கு குறிப்பிடப்படும் சுயாட்சி நிறைந்த இந்நான்கு வன்னிப் பிரிவுகளையும் ஐரோப்பியரின் ஆவணங்கள் ‘இராட்சியங்கள்’ என்றே வரையறுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றினை நான்கு வன்னிமைகள் ஆட்சி செய்தனர். இந்நான்கு தேசத்தினதும் அதிகார மையமாக திருக்கோணேச்சரம் இருந்தது.


போர்த்துக்கேசரினால் திருக்கோணேச்சரம் முற்றாக இடிந்தழிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்த புராதன விக்கிரகங்களில் சில தம்பலகாமத்திற்குக் கொண்டுவரப்பட்டு ஆதிகோணநாயகர் ஆலயம் உருவாது. இவ்வாலயம் உருவான பின்னர் திருகோணமலையில் இருந்த நான்கு பற்றுக்களின்மீதும் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் செல்வாக்குச் செலுத்தியது.

திருக்கோணேச்சரம் எவ்வாறு திருகோணமலை முழுவதும் நிலமானிய முறையினை நடைமுறைப்படுத்தி செயற்பட்டு வந்ததோ அதே நடை முறை திருக்கோணேச்சரம் அழிக்கப்பட்டதன் பின்னர் தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தம்பசிட்டி, வியாபாரிமூலையில் கிடைக்கப்பெற்ற ஒல்லாந்து அரச முத்திரையுடன் கூடிய தோம்புகளின் அடிப்படையில் (திருக்கோணேச்சரம் போர்த்துக்கீசரினால் முற்றாக அழிக்கப்பட்டதன் பின்னர்) தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் திருகோணமலைப் பற்று ,கட்டுக்குளப் பற்று, கொட்டியாரப் பற்று , தம்பலகாமப் பற்று ஆகிய நான்கு பிரதேசத்தினைச் சேர்ந்த 33 ஊரவர்கள் கொண்டாடி மகிழும் கோயிலாக இருந்ததினை அறியத்தருகிறது.

தேசத்துக் கோயில்களின் ஆலய வழமைகள், திருவிழாக்கள் என்பன பல்வேறு தேசங்களைச் சேர்ந்த ஊரவர்களால் மேற்கொள்ளப்படுவது வழமை. உதாரணமாக இன்றும் தேசத்துக் கோயிலாகப் பொற்றப்படும்  வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத் திருவிழாக்கள் வல்வெட்டித்துறை முதல் செங்கலடி வரையான ஊர்மக்களால் கொண்டாடி மகிழப்படுவதைக் காணலாம்.

வெருகலம்பதியில் நடைபெறும் மகோற்சவகால விழாக்களின் விபரம் 
விழா                             விழாவுக்கு உரித்தான கிராமம்/நகரம் 
1.ம் திருவிழா              வல்வெட்டித்துறை 
2.ம் திருவிழா              பட்டித்திடல்
3.ம் திருவிழா              சம்பூர் 
4.ம் திருவிழா              மணற்சேனை /பெரியவெளி 
5.ம் திருவிழா              பள்ளிக்குடியிருப்பு 
6.ம் திருவிழா               பாலத்தடிச்சேனை
7.ம் திருவிழா               கூனித்தீவு
8.ம் திருவிழா              மூதூர் நகரம் (கல்விப்பகுதி) 
9.ம் திருவிழா               வெருகல்/முகத்துவாரம் 
10.ம் திருவிழா             கிளிவெட்டி 
11.ம் திருவிழா              மேன்காமம் /கங்குவேலி 
12.ம் திருவிழா               மல்லிகைத்தீவு
13.ம் திருவிழா               ஈச்சிலம்பற்று/ ஆநெய்த்தீவு/ முத்துச்சேனை
14.ம் திருவிழா               கதிரவெளி 
15.ம் திருவிழா               சேனையூர் /கட்டைபறிச்சான்
16.ம் திருவிழா               மாம்பழத்திருவிழா பூநகர் பூமரத்தடிச்சேனை 
17.ம் திருவிழா               வாழைச்சேனை
18.ம் திருவிழா               செங்கலடி செட்டிகுடி 
19.ம் திருவிழா               பூங்காவனத்திருவிழா  

எமது முன்னோர்கள் உருவாக்கிய இந்நடைமுறை பல்வேறு சமூகநல அனுகூலங்களை அடிப்படையாகக் கொண்டது. ஆன்மீகக் காரணங்களுக்கு அப்பால் நீண்ட தொலைவிலுள்ள மக்களை ஒன்றிணைக்கும் மையமாகவும், கலை கலாச்சார பண்பாட்டு அம்சங்களைப் பாதுகாக்கும் அமைப்பாகவும் வர்த்தகம், அரசியல் என்பனவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை உருவாக்கவல்ல நிறுவனமாகவும் இத்தேசத்துக் கோயில்கள் நீண்டகாலமாக செயற்பட்டு வந்திருக்கிறமை தொடர்பில் வரலாற்றில் பல பதிவுகளைக் காணக்கூடியதாக உள்ளது.


தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் திருகோணமலை தேசம், கட்டுக்குள தேசம், கொட்டியார தேசம் , தம்பலகாம தேசம் ஆகிய நான்கு பிரதேசத்தினைச் சேர்ந்த பல்வேறு ஊரவர்களைக் கொண்ட பலநூற்றுக்கணக்கான ஆலய பரிபாலன உறுப்பினர்களின் விபரங்களை இன்றும் இவ்வாலயத்தில் காணக்கூடியதாக இருக்கிறது.



எனவே தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் பல ஊரவர்கள் கொண்டாடி மகிழும் தேசத்துக் கோயிலாக பழமையில் போற்றப்பட்டிருக்கும் என்பதனை நாம் இன்று புரிந்துகொள்ளமுடியும். எனினும் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களால் தேசத்துக் கோயிலுக்குரிய திருவிழா வழமைகள் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தில் இன்று வழக்கொழிந்து போயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டைய நாட்களில்  வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயம் வடகிழக்கினை பண்பாட்டுரீதியில்(வல்வெட்டித்துறை முதல் செங்கலடி வரையான ஊர்களை) தேசத்துக் கோயில் நடைமுறைக்கூடாக இணைத்ததை விரிவாகப் பார்த்திருந்தோம்.

இன்று சமூகவலைத்தளங்களின் மூலம் ஒன்றிணைந்து பல்வேறு பிரதேசத்தினைச் சேர்ந்த அன்பர்கள் இருப்புக் கேள்விக்குறியாகும் ஆலய வளாகங்களில்  ( முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம், கன்னியா சிவன் கோயில் ) ஒன்றுகூடி தமது பண்பாட்டு வழிமுறைகளுக்கூடாக அவற்றினைப் பாதுகாக்க முனைவதைக் காணும்போது எமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தேசத்துக் கோயில் நடைமுறைகள் தொடர்பில் மீளச் சிந்திக்கவேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதனை புரிந்துகொள்ளமுடிகிறது.

நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment