Thursday, July 06, 2017

கழனிமலைக் காட்டின் இரகசியங்கள் - புகைப்படங்கள்


கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகப் பிரதேசம் தம்பலகாமம். வயலும் வயல்சார்ந்த மருதநிலப் பிரதேசம்தான் அதன்சிறப்படையாளம் என்றாலும் அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவில் கடல், மலை, காடு, குளம் போன்ற அனைத்து வளங்களையும் தன்னகத்தே நிறைவாகக் கொண்டமைந்த இயற்கை எழில் நிறைந்த பூமி தம்பலகாமம்.

மிக நீண்டகாலம் இடம்பெற்று வந்த யுத்த அனர்த்தம், திட்டமிட்ட குடியேற்றங்கள் , பாரிய உள்நாட்டு, வெளிநாட்டு இடப்பெயர்வுகள், இயற்கை அழிவுகள் என்று பல்வேறுபட்ட காரணங்களால் மிக அதிகளவில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இதுவுமொன்று. 2014 ஆம் ஆண்டில் இங்கு 17153 முஸ்லீம்களும் 7785 சிங்களவர்களும் 6232 தமிழர்களுமாக 31170 பேர் வாழ்ந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.  தமிழர்கள் தங்களது இருப்பையும், பண்பாட்டு விழுமியங்களையும், வரலாற்று ஆதாரங்களையும், கலாச்சார சின்னங்களையும் பேணிக்காப்பதில் பல சிக்கல்களை எதிர்நோக்கி இருக்கும் இக்காலகட்டத்தில் இங்கு அண்மையில் கிடைக்கப்பெற்ற கழனிமலைக் கல்வெட்டுப் பற்றிய ஆவணப்படுத்தலாக அமைகிறது இக்கட்டுரை.

இதுவரை முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாத தொல்லியல் களமாக விளங்குகின்றது கழனிமலை. போத்துக்கீசரினால் திருக்கோணேஸ்வரம் அழிக்கப்பட்ட போது அங்கிருந்து பாதுகாப்பாக எடுத்துவரப்பட்ட விக்கிரகங்கள் சிலகாலம் இம்மலைமீது வைத்து வழிபடப்பட்டதினால் இம்மலையினை சுவாமி மலை என அழைப்பதும் உண்டு. அடர்ந்த காடுகளும், மலைகளும் நிறைந்த இப்பிரதேசத்தில் காணப்படும் புராதான அழிபாடுகள் தொடர்ச்சியாக புதையல்கள் தோண்டுபவர்களால் சேதமாக்கப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.


தம்பலகாமம் பிரதேச செயலாளரின் உதவியுடன் கல்வெட்டுக்களை தேடி நாங்கள் பயணித்த கழனிமலைப் பிரதேசத்தின் பகுதி இன்றைய நாட்களில் “உல்பத்வெவ”(Ulpathweva) என்ற சிங்களப் பெயரினால் அழைக்கப்படுகிறது. தம்பலாகாமச் சந்தியில் இருந்து 1Km தூரத்தில் சிறிய வனாந்திரப் பகுதியில் ஒரு குன்றின் மீது உல்பத்வெவ விகாரை அமைந்திருக்கிறது. விகாரை வளாகத்தில் கல்வெட்டுக்கள், நடுக்கல், புரதான படிக்கட்டுக்கள், கட்டிட அழிபாடுகள், வற்றாத நீர்ச்சுனை போன்ற தொல்பொருட்கள் காணப்படுகின்றன.

  
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி. ஜெயகௌரி ஶ்ரீபதி, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் திரு.விஜயன், திரு.அலிப்கான் மற்றும் செல்வன். சாய்கௌசிக் என்போருடன் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் மாணவர்களான திரு.தனுராஜன், திரு.செல்வகுமார் ஆகியோர்  இத்தேடல் முயற்சியில் எம்முடன்  இணைந்திருந்தனர்.

விகாரைக்கு செல்லும் வழியில் சிதைவடைந்த நிலையில் கருங்கற்களால் உருவாக்கப்பட்ட படிக்கற்கள் இருக்கின்றது. அத்துடன் விகாரை வளாகம் முழுவதும் ஒன்றைக் கருங்கற்களின் நடுவில் குழி உருவாக்கப்பட்ட கல்லுகள் பல காணப்படகின்றன. இவை கற்தூண்கள் நிறுத்தப் பயன்படும் தூண் தாங்கு கல் (socket stone) வகையைச் சேர்ந்தவை.

 படிக்கற்கள்

 தூண் தாங்கு கல் (socket stone) 



வற்றாத நீர்ச்சுனை

(மலையிடத்து இயல்பாயமைந்த நீர் ஊற்று நிலை)



விகாரைக்கு முன்னால் நிலத்தில் ஒரு நடுகல் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கல் நிலத்தின் மேல் சுமார் நான்கடி உயரமும் மூன்றடி அகலமும் உள்ளது. இக்கல்லின் மேற்பகுதி பரவளைவுடையதாக இருக்கிறது. இது ஆதியான வழிபாட்டுச் சின்னமாகக் கருதப்படக்கூடியது.



விகாரையில் தியான நிலையில் அமர்ந்திருக்கும் புத்தர் சிலையின் பீடத்திற்குப் பின்னால் இரு கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டிருக்கின்றது. அவையிரண்டும் செந்நிறக் கற்களால் ஆனவை. விகாரை வளாகம் துப்பரவாக்கப்பட்டபோது இயந்திரசாதனங்களுக்குள் அகப்பட்டு துண்டமாகிப்போன கல்வெட்டுக்கள் அவையென விகாரைப் பொறுப்பாளரான பௌத்த துறவி கூறினார்.


கல்வெட்டு 01
முதற்கல்வெட்டு சுமார் ஒரு அடி நீளமும் ¾ அடி அகலமும் கொண்ட துண்டான பருமட்டாக நீள்சதுரமான சாசனம். பிராமி எழுத்துக்களைக் கொண்டமைந்த இச்சாசனத்தில் குறியீடு ஒன்று காணப்படுவது சிறப்பம்சமாகும். இக்கல்வெட்டினைப் புகைப்படம் மூலமாக வாசித்த பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் அதிலுள்ள குறியீடு புள்ளடிமேல் திரிசூலம் எனவும், பிராமி எழுத்துக்கள்  ய ஸிவ எனவும் அடையாளங்காண முடிவதாகவும் பதிவுசெய்துள்ளார்.


கல்வெட்டு 02
இரண்டாவது கல்வெட்டு சுமார் 1 ½ அடி நீளமும் ½ அடி அகலமும் கொண்ட வளைந்த செந்நிறக் கல்லாகும். இக் கல்வெட்டில் இருந்த சில எழுத்துக்கள் சேதமான நிலையில் இருந்தது.  இக்கல்வெட்டினைப் புகைப்படம் மூலமாக வாசித்த பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் அதிலுள்ள பிராமி எழுத்துக்கள்  நுகம் என அடையாளங்காண முடிவதாக பதிவுசெய்துள்ளார்.


என் வாழ்வின் நீண்டநாள் கனவாக இருந்த இந்த கழனிமலைப் பயணம் 31.05.2014 இல் சாத்தியப்பட்டிருந்தது. கிடைத்த கல்வெட்டுக்கள் தொடர்பான புகைப்படங்களையும், தகவல்களையும் உடனுக்குடன் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களிடம் சமர்ப்பித்திருந்தேன்.



கழனிமலைக் கல்வெட்டுக்கள் தொடர்பான கட்டுரை பேராசிரியர் சி.பத்மநாதன் பேரன்பினால் அவரது நூலான இலங்கைத் தமிழர் வரலாறு என்ற நூலின் கட்டுரைகளில் ஒன்றாக 326வது பக்கத்தில் இடம் பிடித்திருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வெளியீடாக  வெளிவர இருக்கும் இந்நூல் நம் இளையோரை இன்னும் விடுவிக்கப்படாத கழனிமலைக் காட்டின் இரகசியங்கள் நோக்கி நகரச்செய்யும் என்பதில் ஐயமில்லை.


நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com

ஜீவன்
பயணம் தொடரும்........

மேலும் வாசிக்க

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

6 comments:

  1. Dear Dr.
    Very important documentation. thanks for your information - Shanmugak Arulanantham

    ReplyDelete
  2. மிக்க நன்றி

    தங்களது உற்சாகப்படுத்தல்கள் சோர்வின்றிய தேடலுக்கு பேருதவியாக இருக்கிறது.

    நட்புடன் ஜீவன்.

    ReplyDelete
  3. Hi Dear Friend. Good findings. Please keep doing your good works.

    ReplyDelete
  4. சிறப்பு. உன் பயனம் மென்மேலும் தொடரட்டும்

    ReplyDelete