Thursday, August 20, 2015

தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தல்


திரு.வேலாயுதம் தங்கராசா அவர்கள் ஓய்வு பெற்ற அதிபர், பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப்பட்டதாரி, தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டப்பின்படிப்பை முடித்தவர். வரலாற்றுப் புகழ் மிக்க தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலில், மரபுவழி அறக்காவலர்களில் ஒருவராகக் ‘கங்காணம்’ என்னும் பதவி வகிப்பவர். தம்பலகாமத்தின் மூத்த எழுத்தாளர் திரு.க.வேலாயுதம் அவர்களின் அன்புமகனாகிய இவர், இளம்வயதில் இருந்தே எழுதுவதில் அதீத ஆர்வமுள்ளவராக இருந்து வந்துள்ளார். இவரது பல இலக்கியப் படைப்புக்கள் வீரகேசரி, தினக்குரல், சுடரொளி, மித்திரன், மலைமுரசு ஆகிய தினசரி, வாரப்பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

இவர் எழுதிய சிறுவர்களது மனங்களில் நற்பண்புகளை வளர்க்கும் நோக்கில் அமைந்த சிறுவர் கவிதை நூல் 30 கவிதைகளுடன் ‘ஆண்டவனைக் கண்டதுண்டா?’ என்னும் தலைப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது அனைவரதும் பாராட்டுதலைப் பெற்றது. தொடர்ந்து இவரைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு 2008ஆம் ஆண்டில் ‘இலங்கையில் ஸ்ரீ சாயியின் லீலாம்ருதம்’ என்ற நூல் சாயி பிரசுரத்தினூடாக வெளியிடப்பட்டது.

இரண்டு பாரிய சத்திரசிகிச்சைகளுக்குப் பின்னர் மிகுந்த மன உழைச்சலுக்கு உட்பட்டிருந்த காலத்தில் இந்த ஆவணப்படுத்தல் முயற்சியினை ஆரம்பித்தார். ‘தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம்’ தொடர்புடைய இந்த நூல் மணிமேகலைப் பிரசுரத்தினூடாக போற்றுதற்குரிய ஆற்றலாளர்கள் இவர்கள்! என்ற தலைப்பில் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

இதில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் ஜீவநதி  இல் தொடர்ச்சியாக வெளிவந்தபோது படித்துச் சுவைத்து உற்சாகமூட்டிய அனைத்து நட்புள்ளங்களுக்கும் என் நன்றிகள். ஆவணப்படுத்தலின் தேவை அதிகரித்திருக்கும் இக்காலகட்டத்தில் இதனை ஒரு ஆரம்பமுயற்சியாகக் கொள்ளலாம். வரலாற்றை அறிதல் என்பது வெறுமனே பழம்பெருமை பேசுவதற்காக அல்லாமல் நமது முன்னோர்களின் பண்பாட்டு விழுமியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் சென்று அதனூடாக நமது சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவுவதாய் இருத்தல் வேண்டும் என்பதனையும் நாம் இங்கு கருத்திற்கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.
 நட்புடன் ஜீவன்.


மேலும் வாசிக்க...

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. சிறந்த பகிர்வு


    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete