Thursday, August 13, 2015

வையமெல்லாம் தமிழோசை வளர்ந்தோங்கும் !


எனது அப்பப்பா (அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்) நல்ல கதைசொல்லி. தனது அனுபவங்களையும் பல இடங்களிலும் தான் வாசித்தறிந்த விடையங்களையும் இணைத்து சுவைபட சொல்லும் வல்லமை பெற்றவர். மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர், சிறந்த கவிஞர் வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன், தினகரன், தினக்குரல், ஆத்மஜோதி, சிவநெறி, குமுதம் பக்தி இதழ் என்று நீண்டு செல்கிறது அவரது ஆக்கங்கள் வெளிவந்த பத்திரிகைகள் மற்றும் இதழ்களின் பட்டியல். அவற்றில் வந்த அவரது ஆக்கங்களை எப்படிச் சேகரித்து வைத்திருந்தாரோ அதே அளவு ஆர்வத்துடன் அவ்வாக்கங்களுக்கு வந்த விமர்சனங்கள், வாசகர் கடிதங்கள், என்பனவற்றையும் பாதுகாத்து வைத்திருந்தார்.

கடலெனப் பெருகி வந்த
கந்தளாய் உடைப்பு வெள்ளம்
பூட்டிய அலுமாரிக்குள் புகுந்து
கட்டுரை கவிதை நல்ல
கதைகளைச் சிதைத்ததோடு
விட்டதா? அதனைச் சாய்த்து
வெளியிலே இழுத்தெறிந்து
நட்டங்கள் செய்த நாளை
நான் எண்ணிக் கலங்குகின்றேன்

என்று இயற்கை அனர்த்தத்தால் எழுதி வைத்த இலக்கியப்பிரதிகள் அனைத்தும் நாசமான வரலாற்றைப் பதிவு செய்கிறார் அவர். அது தவிர இனவன்முறை, இடப்பெயர்வு, மற்றும் பல காரணங்களால் அவரது அரிய பொக்கிசங்கள் பல அழிந்து போய்விட்டமை வேதனைக்குரியது.

திருகோணமலையைச் சேர்ந்த அமரர் கலாபூசணம் சித்தி அமரசிங்கம் அவர்கள் ‘ஈழத்து இலக்கியச் சோலை’யின் 20 தாவது வெளியீடாக இவர் எழுதிய ‘ரங்கநாயகியின் காதலன்’ என்னும் வரலாற்றுக் குறுநாவலை 2005ஆம் ஆண்டு வெளியிட்டார். தொடர்ந்து தம்பலகாமம் க.வேலாயுதம் என்ற நூல் சித்தி அமரசிங்கம் அவர்களால் எழுதி வெளியிடப்பட்டது. அத்துடன் தம்பலகாமம் ‘பொற்கேணி கிராம அபிவிருத்திச் சங்கம் இவரது 30 கட்டுரைகளைத் தொகுத்து இதே ஆண்டில் ‘தமிழ் கேட்க ஆசை’என்ற பெயரில் வெளியிட்டது. 2008 ஆம் ஆண்டில் தம்பலகாமம் சாயி சேவா சங்கம் இவர் எழுதிய ‘இந்திய ஞானிகளின் ஆன்மிக சிந்தனைகள்’ என்ற தத்துவ நூலை வெளியிட்டது. இது தவிர ஆலங்கேணி கிராமத்தைப் புலமாகக் கொண்ட ‘அவள் ஒரு காவியம்’ என்னும் சமூகக்குறுநாவலும் ‘சொல்லும் செயலும்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியிடப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது நான்காவது நூலாக இந்த கவிதைத் தொகுப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. கிடைக்கப்பெற்ற அவரது கவிதைகள் 22 இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. ‘வையமெல்லாம் தமிழோசை வளர்ந்தோங்கும் !’ நூலில் உள்ள கவிதைகள் அனைத்தும் ஜீவநதி இல் தொடர்ச்சியாக வெளிவந்தபோது படித்துச் சுவைத்து உற்சாகமூட்டிய அனைத்து நட்புள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

நட்புடன் ஜீவன்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment