Monday, September 01, 2014

திருகோணமலையில் அனிஸ்டஸ் ஜெயராஜாவின் கின்னஸ் உலக சாதனை முயற்சி

அனிஸ்டஸ் ஜெயராஜா

கின்னஸ் உலக சாதனை (Guinness World Records), ஒவ்வொரு ஆண்டும் மனிதராலும்,  இயற்கை நிகழ்வுகளாலும் ஏற்படுத்தப்படும் உலகளாவிய சாதனைகளை தொகுத்து வழங்கும் உசாத்துணை புத்தகமாகும். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது அத்தனை எளிதான விடையமல்ல. எல்லாவிதங்களிலும் சாதனை பற்றிய விவரங்களை உறுதி செய்து கொண்டே கின்னஸ் சாதனை முயற்சிகளை அங்கீகரிக்கிறது.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் புதிதாக இடம் பெறும் சாதனைகள் உலகளவில் பரந்தளவிலான கவனத்தைப் பெறுகின்றன. Guinness World Record புத்தகத்தில் இடம் பெறுவதற்கான சாதனை முயற்சிகள் பத்திரிகை மற்றும் இணையங்களின் கவனத்தை ஈர்க்கின்றன.இதனால் காப்புரிமை பெற்ற புத்தக விற்பனையில் இந்தப் புத்தகமே சாதனை படைத்துவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தவகையில் கிழக்கு தமிழர் ஊடகவியலாளர் ஒன்றியத்தின்  ஏற்பாட்டில் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட மூத்த எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா அவர்கள்  கரன்சி இல்லாத உலகம் என்ற தலைப்பில் தொடந்து 12 மணிநேரம் எழுதும் ஒரு உலக சாதனை முயற்சியினை வெற்றிகரமாக நிகழ்த்தி முடித்திருக்கிறார். திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் பழைய மாணவராகிய அனிஸ்டஸ் ஜெயராஜா அவர்கள் நாவல்,கட்டுரை என இதுவரையில் 27 நூல்கள் எழுத்தி அவற்றில் 25 இனை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இலக்கியத்தை வரலாறு ஆக்குவதில் அனிஸ்டஸ் ஜெயராஜாவின் இச்சாதனை முயற்சி சனிக்கிழமை (30.08.2014) திருகோணமலை புனித சூசைப்பர் கல்லூரியில் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இம்முயற்சியை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பத்தி, கிழக்குமாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி, திருமலை நகரபிதா க.செல்வராசா, கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் பிரதம கணக்காளர் ரகுராம், வண.தந்தை நோயல், வண.தந்தை நிதிதாசன், ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளர், கு.திலகரட்ணம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையும் வாழ்த்துரைகளையும் வழங்கினர்.

இவர் 77 பக்கங்களில் 7582 சொற்களை எழுதி முடித்துள்ளார். மணித்தியாலம் ஒன்றுக்கு 6 பக்கம் என்ற விகிதத்தில் நிமிடத்துக்கு 10 சொற்களுடன் கரன்சி இல்லாத உலகம் என்ற தொடரை எழுதி முடித்துள்ளார்.நிறைவு விழாவில் உரையாற்றிய அனைவரும் காலை 08,00 மணி தொடக்கம் இரவு 08,00 மணிவரை இயற்கை உபாதைக்கும் எழுந்து செல்லாது தமிழ் எழுத்துக்களால் சாதனை படைத்த திரு.அ,ஜெயராஜா அவா்களை வாழ்த்தியதோடு, இந்நிகழ்வினைத் திறம்பட ஒழுங்கமைத்த திருமலை நவம் அவர்களையும் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.
                                                                                                              த.ஜீவராஜ்


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. anpin dakdar
    kinners sathanai paarththen. 2 maniththiyalamvarai erunthen. nalla muyatchi.
    Kernipiththan

    ReplyDelete