Friday, September 05, 2014

நரகாசுரன்

narakasuran

தீபாவளிப் பண்டிகை என்றதும் நம்மிடையே ஞாபகம் வருபவர்களில் நரகாசுரனும் ஒருவர். பாடசாலைக் காலங்களில் அசுர குணங்கொண்ட, பயங்கரமானவராக அறிமுகமான புராணக் கதாபாத்திரம் இவர். பின்னாட்களில் அசுரர் பற்றிய தேடல்கள் பயந்தருவதற்குப் பதிலாக புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் ஆரம்பப் புள்ளிகளாயின. அதன்படி சுரர் என்பவர்கள் பிரமன் சொற்படி மது உண்டதால் இப்பெயர் அடைந்த தேவர் என்றும். அசுரர் என்போர் சுரராகிய தேவர்களுக்கு விரோதிகள் என்றும் அறியக்கிடைத்தது.

இந்திய புராணக்கதைகளில் வரும் அசுரர் என்ற சொல் வலிமை மிக்கவர் என்ற பொருளில் மட்டுமே வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இராமாயணத்தில் வரும் இராவணன், கும்பகர்ணன், விபீடணன், சுபாகு, மாரீசன், இந்திரசித்து முதலானவர்களும்,  மகாபாரதத்தில் இடும்பன், கடோட்கஜன், பகாசுரன் போன்றவர்களும் அசுரர்களாக குறிப்பிடப்படுக்கின்றனர். எனவே அசுரர் என்பதை ஓரு இனமாகக் கொள்ளாமல் வலிமை மிக்கவர்களாக கருதலாம்.

தீய பண்புள்ளோர் வேதத்தில் அரக்கர் அல்லது இராட்சதர் என்று குறிப்பிடப்படுகிறார்கள். எனவே அசுரரும் அரக்கரும் ஒரு பொருள் குறிப்பவை அல்ல. அரக்கர் என்ற சொல் இராட்சதர் என்ற வடசொல்லிலிருந்து வந்தது. இவர்கள் பிறரைத் துன்புறுத்தும் தம் பண்பினால் இராட்சதர் எனப்பட்டனர். அத்தோடு பண்டைய நாட்களில் பரதகண்டம் பரதர், நாகர், இயக்கர், அரக்கர், பூதர், அவுணர், இடிமர், கருடர், முனிவர், சித்தர், கந்தருவர்,வானரர் எனப்பலபிரிவினரைக் கொண்டிருந்ததையும் கருத்தில் எடுக்க வேண்டும். இந்த அடிப்படையிலேயே நரகாசுரன் பற்றிய தகவல்களைப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.

நரகாசுரன் தொடர்புடைய வரலாற்றுத் தகவல்கள் பற்றிய தேடல்கள் இதுவரை பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை எனவே இன்று நமக்குக் கிடைக்கும்  நரகாசுரன் வரலாறு  புராணக்கதைகளினை அடிப்படையாகக் கொண்டவை. நரகாசுரன் குறித்து ஒன்றல்ல பல கதைகள் வழக்கில் உள்ளன. அவற்றில் அண்ணளவாக வரலாற்றுடன் ஒத்துப் போகும் ஒரு நரகாசுரன் பற்றிய தகவல் இது.

நரகாசுரன் என்பவன் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்ததுள்ள அசாம் மாநிலத்தில் ஒரு நிலையான, சுதந்திர அரசை ஆண்டு வந்த வலிமை மிக்க அரசன். இங்கு குறிப்பிடப்படும் அசாம் மகாபாரதத்தில் பிரகியோதிசா என்ற பெயரிலும், காமரூபா (சிவனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட காமனுக்கு மீண்டும் ரூபம் (உருவம்) கிடைத்த இடம்) என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

நரகாசுரனுக்கு பெளமன் என்று இன்னொரு பெயரும் உண்டு. இதன் பொருள் பூமியின் புதல்வன் என்பது. இவன் கருமை நிறத்தவன். காமரூபத்தில் ப்ராக்ஜ்யோதிஷபுரம் என்ற ஊரை தலைநகரமாகக்கிக்கொண்டு ஆட்சி நடத்தியவன். வலிமை மிக்கவன், தனது படை வலிமை மூலம் அண்டை நாடுகளையும் வசப்படுத்தி ஆண்டவன். பல அடுக்கு கொண்ட பாதுகாப்பு நிறைந்த கோட்டையை தன் தலைநகரில் கொண்டிருந்தவன். வழக்கில் இருக்கும் கதைகளின்படி முதலில் வெளி எல்லையில் மலைகளால் ஆன கோட்டையும் அதன் உள்ளே ஆயுதங்களாலும், அதன் பின் தண்ணீர் கோட்டையும்,  அதற்குப்பின் நெருப்பால், காற்றால் ஆன கோட்டைகள் எனப்பல கோட்டைகள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

புராணக்கதைகளின்படி மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பூமாதேவிக்கும் மகானாக பிறந்தவன்தான் நரகாசுரன். சிறுவயது முதல் பல கலைகளும் கற்று சிறந்து விளங்கியவன். அத்துடன் பிரம்மாவை நோக்கி கடும்தவம் செய்து அரிய பல வரங்களைப் பெற்று மிகவும் பலத்துடன் விளங்கினான். தன் தாயைத் தவிர வேறுயார் மூலமாகவும் மரணம் அடையக்கூடாது என்று அவன் பெற்றுக்கொண்ட வரம் அதில் முக்கியமானது.

குருசேத்திரம்

மூவுலகையும் ஆழும் எண்ணங்கொண்டிருந்த நரகாசுரன் இந்திரலோகத்தை முற்றுகை இட்டான். பல தேவர்களைச் சிறையில் அடைத்தான்.இந்திரன் ஓடி ஒளிந்துக் கொண்டான், மிஞ்சிய சிலர் மிகக் கவலை கொண்டு கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலைமையைக் கூறி காப்பாற்றும்படி கேட்டுக்கொண்டனர். தேவர்களைக் காக்கத் தீர்மானித்த மகாவிஷ்ணு தனது தேர்ச் சாரதியாக தனது இரண்டாவது மனைவியான சத்தியபாமாவை (பூமாதேவியின் மறு அவதாரம்) அமர்த்துகிறார். சத்தியபாமா ஒரு வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் கற்றிந்தவள். அத்துடன் நரகாசுரன் தனது தாயின் கையால் அல்லாது வேறுயாராலும் கொல்ல முடியாதபடி ஏற்கனவே பிரம்மாவிடம் வரம் வாங்கியவன் என்பதும் சத்தியபாமா தேர்ச் சாரதியாக அமர்த்தப்பட்டதற்குக் காரணமாகும்.

போர் உக்கிரமாக நடந்தது. ஆனால் நரகாசுரனை கொல்வது விஷ்ணுவுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அதனால் விஷ்ணு ஒரு உக்தியைக் கையாளுகிறார்.  நரகாசுரனோடு நடக்கும் சண்டையின் நடுவில் அம்பு ஒன்று அவரைத் துளைக்கிறது. உடனே திருமால் மயக்கம் போட்டு விழுவது போல் பாசாங்கு செய்கிறார். அதனை விளங்கிக் கொள்ளாத தேர்ச்சாரதியான சத்தியபாமா தனது கணவன் உண்மையிலேயே மூர்ச்சையாகி இறந்து விட்டார் என நினைத்து விஷ்ணுவின் வில்லை எடுத்து நரகாசுரன் மீது அம்பு எய்தி அவனைக் கொன்று விடுகிறாள்.அவன் பெற்றிருந்த வரத்தின்படி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான்.

உயிர் போகும் தருவாயில் ”எனது மறைந்த நாளை மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டும்” என்கின்ற நரகாசுரனின் வேண்டுகோளுக்கிணங்கவே தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதாக புராணங்கள் சொல்கின்றன.


எனினும் தீபாவளி என்கின்ற தீப ஒளித் திருநாளை இந்தியா, நேபால், இலங்கை, மியன்மார், சிங்கப்பூர், மலேசியா ,பிஜி போன்ற நாடுகளில் வாழும் இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment